முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
பென்சில்
By DIN | Published On : 30th April 2022 05:23 PM | Last Updated : 30th April 2022 05:23 PM | அ+அ அ- |

பென்சில் பென்சில் பென்சில்
புத்தம் புதிய பென்சில்
சென்னை மாமா தந்த
சிறப்பு மிகுந்த பென்சில்!
கண்ணைக் கவரும் பென்சில்
கருப்பு வண்ணப் பென்சில்
மண்ணின் நலத்தைக் காக்கும்
மகிமை கொண்ட பென்சில்!
விதைப்பந் தொன்றைத் தலையில்
விரும்பிச் சுமக்கும் பென்சில்
இதைப்போல் சிறந்த பென்சில்
எங்கும் இல்லை கண்டீர்!
எழுதி முடித்த பின்னே
எஞ்சி நிற்கும் துண்டை
அழுத்தி மண்ணில் நட்டால்
அடடா! செடியாய் முளைக்கும்!
தலையில் வனத்தைச் சுமக்கும்
தன்மை கொண்ட பென்சில்
விலையோ மிகவும் குறைவு
விரும்பி வாங்கச் செல்வீர்!
பூமி நலனைக் காக்க
பென்சில் விதைகள் நடுவோம்
சாமி இந்தப் பூமி
சற்றே விழுந்து தொழுவோம்!