நூல் புதிது

நூல் புதிது

சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம்! 1.0, 2.0 (இரு நூல்கள்)- முகில்; ஒவ்வொரு நூலும் பக்.56; ரூ.56;

பல்வேறு நாடுகளில் நடந்த வரலாற்றை நகைச்சுவையோடு எடுத்துக் கூறும் நூல். வரலாறு என்றாலே கொட்டாவி விடும் குழந்தைகள்கூட இந்நூலை ஆவலோடு படிப்பர். அப்படியொரு திகில், விறுவிறுப்பு, சுவாரஸ்யமான தகவல்கள். அப்படி என்ன விறுவிறுப்பான தகவல் என்கிறீர்களா? தக்காளிக்கும், வெங்காயத்துக்கும் இருக்கும் பிளாஷ்பேக் சொல்லப்பட்டுள்ளது. எகிப்தியர் பூனைகளுக்குக் கோயில்கள் கட்டியுள்ளனராம், அதாவது மியாவ் மம்மிக்கள். தூங்குபவர்களை எழுப்ப ஒரு நாட்டில் பட்டாணியால் செய்த அலாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாம், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் எங்கிருந்து வந்தது தெரியுமா... அது குரங்கின் கண்டுபிடிப்பாம்.

பாப்கானை விரும்பிச் சாப்பிடும் குழந்தைகள்கூட இதிலுள்ள செய்தியைப் படித்தால்... 'அச்சச்சோ... எனக்கு இனி பாப்கானே வேண்டாம்' என்று ஓட்டம் பிடிப்பார்கள்... காரணம், பாப்கானுக்குள் ஆவி இருக்கிறதாம்!

பிரிட்டிஷ் அதிகாரி ஒரு மரத்தை கைது செய்து 120 ஆண்டுகளாக அதை சங்கியால்  கட்டிப் போட்டிருக்கிறாராம். பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கும் எண் -13 என்றாலே  பயமாம்...!  ஒரு நாட்டில் ரயில்வே ஸ்டேஷனில் பேய் நடமாட்டம் உள்ளதாம்! - இப்படி  திகிலான, நகைச்சுவையான, திகைப்பூட்டுவதான செய்திகள் இவ்விரு நூல்களிலும்  உள்ளன. 

கணக்குல கில்லாடி! - (குழந்தைகளுக்கான சுவையான கணக்குப் புதிர்க் கதைகள்) - என்.சொக்கன்; பக்.144; ரூ.299; மேற்குறிப்பிட்ட இரு நூல்கள் வெளியீடு: பயில் பதிப்பகம்,  தியாகராயர் நகர், சென்னை-17; 044-24342771, 29860070. 

'கணக்கு' என்றாலே காததூரம் ஓடும் குழந்தைகள்கூட புகிர்க் கணக்கு என்றால், ஆர்வத்தோடு பலமணி நேரம் அதில் மூழ்கிவிடுவார்கள். புதிர்க் கணக்குகள் மூளைக்கு வேலை கொடுத்து அவர்களது புத்தியைக் கூர்மையாக்கும், சிந்திக்கத் தூண்டும்.  சிந்தனைத் திறனை மேம்படுத்தும். அத்தகைய கணக்குப் புதிர்க் கதைகள் இந்நூலில் உள்ளன. 

கப்பலில் பயணம் செய்த ஐந்து வணிகர்களையும் புயல் ஒரு தீவில் தூங்கி எறிகிறது. அந்தத் தீவில் இருக்கும் தேங்காய்க் குவியல்களை ஐந்து வணிகர்களும்  எப்படி சமமாகப் பிரித்துக் கொண்டனர் என்று கேட்கிறது "தேங்காய்க் குவியல்கள்' என்ற முதல் புதிர்க் கதை. இதற்கான விடை அடுத்த பக்கத்திலேயே தரப்படுள்ளது.  எடை போடு விடை சொல்லு, உண்மையா? பொய்யா?, மாம்பழம் என்ன விலை? காட்டைக் கடப்பது எப்படி?  மாதங்காட்டியில் மாயச் சதுரம், மானைக் குணப்படுத்தும் மருந்து எது?, நானும் நானும் வண்டு, தூரமானி, பயணமானி,  தாத்தாவின் தோட்டம்,  வேண்டாத பழக்கம், இரண்டாம் வாய்ப்பாடும் எகிப்தியர் கணக்கும், மணி பார்க்கும் விளையாட்டு எனப் பல்வேறு கணக்குப் புதிர்க் கதைகள் படங்களுடன் இதில் உள்ளன. 

கணக்கின் மீது  மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கும் பள்ளிகளில் இந்நூல் இருப்பது அவசியம்.  

மியாவ் ராஜா - கன்னிக்கோவில் இராஜா; பக். 112; ரூ.130; வெளியீடு: சுவடு, 7ஏ, ரங்கநாதன் தெரு, சேலையூர், சென்னை-73; 9551065500, 9791916936.

இந்நூலில்  அழகிய ஓவியங்களுடன் கூடிய 12 கதைகள் உள்ளன. மூன்று சக்கர வண்டியில் வலம் வரும் அஸ்மியாவின் நல்ல  குணங்களைக் கூறி, அவளது  நண்பர்கள் யார் என்பதையும் கூறிவிட்டு,  அவள் கற்பனையில் எவ்வாறு உயர உயரப் பறந்தாள் என்பதை "வேர் நாற்காலி' எனும் முதல் கதை கூறுகிறது.

சோளக் காட்டுக்குள் மூன்று வெட்டுக்கிளிகள் மேல் அமர்ந்து வந்த மாரா, மோரா, வீரா என்ற குள்ள மனிதர்கள் சிறுவன் சரணிடம் அப்படி என்ன பேசினார்கள் என்பதையும்;  குடுவையில் அடைத்து வைத்த தங்க மீன்கள் பூரணியிடம் பேசிய அதிசயம், அதனால் பூரணி பட்ட  அவஸ்தை;  மியாய் ராஜா சிங்க ராணிக்குத் தந்த பொருள் என்ன?,  மமதை கொண்ட தவளை இளவரசிக்கு எலிகள் புகட்டிய பாடம் என்ன,  பயமுறுத்திய சிலந்தி, மனிதக்காது செடிகள்,  சூரியனைப் பிடித்த குரங்கு முதலிய கதைகள் எல்லாமே கற்பனை கலந்த அற்பதக் கதைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com