செய்திச் சிட்டு! உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம்!

மிகவும் சுறுசுறுப்பாக வந்து அமர்ந்த சிட்டைப் பார்த்ததும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி பொங்கியது.
செய்திச் சிட்டு! உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம்!

மிகவும் சுறுசுறுப்பாக வந்து அமர்ந்த சிட்டைப் பார்த்ததும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

"மார்ச் 18-ஆம் தேதி துருக்கியின் பிரதமர், துருக்கியில் ஒரு தொங்கு பாலத்தைத் திறந்து வைத்தார். பறந்துகொண்டே அதைப்  பார்த்தேன்! அடேங்கப்பா! உலகத்திலேயே ரொம்ப நீளமான தொங்கு பாலம் அது!'' என்றது சிட்டு. 

"என்னது? உலகத்திலேயே பெரிசா...'' என்று கேட்டாள் மாலா.

"ஆமாம்!  வடமேற்குப் பகுதியிலுள்ள காலிபோலி மற்றும் தென் துருக்கியிலுள்ள கன்னாகேல் பகுதியை இணைக்கும் மிகப்பெரிய தொங்கு பாலம் அது. கன்னாகேல் மற்றும் காலிபோலி பகுதிக்கு நடுவே, "டார்டாநெல்லஸ்' என்று ஒரு நீர்வழி இருக்கிறது. அதன் மேல்தான் இப்பாலத்தைக் கட்டியிருக்காங்க. பாலத்துக்கு, "1915 கன்னாகேல் பாலம்' அப்படீன்னு பேர் வெச்சிருக்காங்க...'' என்றது சிட்டு. 

"அந்தப் பேர் வெச்சத்துக்கு என்ன காரணம்?'' என்று கேட்டான் ராமு.

"சொல்றேன்... 1915-இல் முதலாம் உலப்போர் நடந்த சமயம். பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸின் கடல் படைகள் துருக்கியைத் தாக்கின. இந்தப் போர் கன்னாகேல் பகுதியைப் பிடிப்பதற்காக நடைபெற்றது. இந்த நீர்வழிப் பாதையில்தான் அங்கு கடுமையான போர் நிகழ்ந்தது. எட்டுமாத போராட்டத்திற்குப் பிறகு பிரிட்டிஷ், பிரான்ஸ் படைகள் தோல்வியைச் சந்தித்தன. அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் இப் பெயரை வெச்சிருக்காங்க. இந்தப் பாலம் கட்டுவதற்கு முன்னால் ஜப்பானின் இரு தீவுகளை இணைக்கும் வண்ணம் கட்டப்பட்ட "அகாஷி' பாலமே மிகப் பெரிய பாலமாக இருந்தது. அந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுவிட்டது. தற்போது துருக்கியின் தொங்குபாலமே உலகின் மிகப் பெரிய பாலமாகும். ஜப்பானின் பாலத்தைவிட தற்போது கட்டப்பட்ட பாலம் சுமார் 100 அடி நீளம் பெரியதாம்.

பாலத்தின் நீளம் 15,118 அடி நீளம். 1915 கன்னாகேல் தொங்கு பாலத்தின் அகலம் 148 அடி. உயரம் 330 அடி. இதில் விசேஷம் என்னவென்றால், நடுவில் தொங்கும் பாலம் மிக நீளமானது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இவ்வளவு நீள தொங்குபாலம் அமைப்பது மிகக் கடினமாம். 

தென்கொரிய பொறியாளர்களும், துருக்கியின் பொறியாளர்களும் சேர்ந்தே இப்பாலத்தைக் கட்டியுள்ளார்கள். துருக்கி நாட்டின் சில பகுதிகள், மேற்கு நாடுகளின் அருகிலும், சில பகுதிகள் கிழக்கு நாடுகளின் அருகிலும் இருக்கின்றன. 

இப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளின் நட்புக்கும், அமைதிக்கும் வழிவகுக்கும் என்று கொரிய நாட்டு பிரதமர் 'கிம் பூ க்யுன்' திறப்பு விழாவின்போது கூறியுள்ளார்'' என்று ஒரே மூச்சாகப் பேசிவிட்டு இரைத்துக் கொண்டே நிறுத்தியது சிட்டு.

"அதெல்லாம் சரி, பாலம் கட்டறதுக்கு முன்னாலே கன்னாகேலிலிருந்து காலிபோலி பகுதிக்கு எப்படிப் பயணம் நடந்தது?'' என்று கேட்டான் பாலா.

"அதுவா... படகில்தான். கன்னகேலிலிருந்து காலிபோலி பகுதிக்கு படகுப் பயணம் ஒரு மணி நேரமாகும். படகில் இடமிருக்காது. பயணிகள் இறங்கிய பிறகே ஏறமுடியும். அதற்குத் தனியாக சராசரி இரண்டுமணி நேரம் ஆகுமாம். மோட்டார் போட் என்பதால் எரிபொருள் செலவும் அதிகம். இதையெல்லாம் இப்பாலம் சரிக்கட்டிவிடும் என்கிறார்கள். 

பாலம் கட்ட 270 கோடி யூரோக்கள் ஆகியிருக்கிறதாம். (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார்12,200 கோடி) இந்தப் பாலத்தினால் கிடைக்கப் போகும் நன்மையைக் கருத்தில் கொண்டால் இது பெரிய செலவு அல்ல என்கிறார் துருக்கியின் பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகான். 

ஓகே, நான் வர்றேன்...'' என்று கூறிவிட்டுப் பறந்த சிட்டை, அது புள்ளியாக மறையும் வரை டாடா காட்டிக்கொண்டே விடையளித்தார்கள் பிள்ளைகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com