கிரீடம் சூடிய ராஜா!

அடர்ந்த காடு. சிங்க ராஜா வருத்தத்துடன் இருப்பதைக் கண்ட குட்டி யானை, அதற்கான காரணத்தைக் கேட்டது. 
கிரீடம் சூடிய ராஜா!

அடர்ந்த காடு. சிங்க ராஜா வருத்தத்துடன் இருப்பதைக் கண்ட குட்டி யானை, அதற்கான காரணத்தைக் கேட்டது. 

"விளையாடச் சென்ற என் மகன் இன்னும் வீடு திரும்பவில்லை. அதுதான் கவலையாக இருக்கிறது'' என்றது சிங்க ராஜா.

"பயப்படாதீர்கள் ராஜா... குட்டி சிங்கம் வந்துவிடும்'' என்று தைரியம் சொன்னது. ஆனாலும் ராஜா சமாதானமாகவில்லை.

"குட்டி யானையே எனக்கு ஓர் உதவி செய். நீ உங்கள் குழுவினரோடு சேர்ந்து என் மகனைத் தேடுங்களேன். எங்கள் இனம் பெரிதும் அழிந்துவிட்டதால் எங்களில் கொஞ்சம் பேர்தான் இருக்கிறோம்'' என்றது. 

"சரி ராஜா, தேடுகிறோம். ஆனால், எங்கள் இனமும் தந்தங்களுக்காக மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்'' என்றது குட்டி யானை. "சரி... விரைவில் தீர்வு காண்கிறேன்'' என்றது சிங்கராஜா.

உடனே குட்டியானைப்  பிளிறியது. குரல் கேட்டு யானைக் கூட்டங்கள் அங்கு கூடின. குட்டி யானை விவரத்தைக் கூறியதும் ஆளுக்கொரு திசையில் சென்று தேடத் தொடங்கின. குட்டியானை போய்க் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக  கிளியொன்று தன் மூக்கில் ஒரு சீட்டோடு பறந்து சென்று, சிங்கத்தின் குகைக்கு வெளியே அந்தச் சீட்டை போட்டுவிட்டுப் பறந்தது. ஓடிச்சென்று அதை எடுத்துப் படித்தது குட்டி யானை.

அதில் "நான் நரியின் தலைவன். நான்தான் குட்டி சிங்கத்தைக் கடத்தி  வைத்திருக்கிறேன். சிங்க ராஜாவே இனி நான்தான் காட்டை ஆள்வேன். இதற்குச் சம்மதம் என்றால்தான் குட்டி சிங்கத்தை விடுதலை செய்வேன். எங்கள் சார்பில் வரும் நரிகளிடம் உங்கள் கீரிடத்தையும், சிம்மாசனத்தையும் கொடுத்தனுப்புங்கள். இல்லையென்றால் குட்டி சிங்கத்தைக் கொன்று விடுவேன்' என்று எழுதியிருந்தது.

அந்தச் செய்தியை சிங்கத்திடம் கூறியது குட்டியானை.  உடனடியாக இரண்டும் "நரிகளிடம் காட்டை ஆளக் கொடுத்து அவர்களின் சாயத்தை வெளுப்பது' என முடிவெடுத்தன. அதன்படி காட்டில் உள்ள அனைத்தையும் ஒன்று கூட்டின. 

சிங்கராஜா பேசத்தொடங்கியது. "என் அருமை நண்பர்களே! இத்தனை நாளும் நல்ல முறையில் நான் காட்டை கட்டிக் காத்தேன். ஆனால் என் மகனை நரிகள் கூட்டம்  கடத்திச் சென்றுவிட்டன. சில காலம் நரித்தலைவன்தான் இந்தக் காட்டை ஆட்சி செய்ய வேண்டுமாம். இல்லையென்றால் என் மகனைக் கொன்றுவிவானாம்'' என்றது. 

இதைக் கேட்ட விலங்குகள், பறவைகள் அனைத்தும்  கோபம் கொண்டு, "வாருங்கள் எல்லோரும் நரிகளைத் தாக்தி குட்டியை மீட்டு வருவோம்' என்று கூச்சலிட்டன.

அதற்கு சிங்கராஜா, "சண்டை போட்டால் சில உயிர்களை மட்டுமல்ல, என் மகனையும் இழக்க நேரிடும். சண்டை வேண்டாம்'' எனக்கூறி சிம்மாசனத்தையும், கிரீடத்தையும் அங்கு வந்த நரிகளிடம் கொடுத்தது. அதைப் பெற்றுக்கொண்ட நரிகள் வேகமாக ஓடின. சிறிது நேரத்தில் குட்டி சிங்கம் விடுதலை பெற்று வருவதைக் கண்ட சிங்கராஜா ஓடிச்சென்று அதை அணைத்துக் கொண்டது. 

அன்று முதல் கிரீடத்தைச் சூட்டிக்கொண்டு நரி காட்டை ஆட்சி செய்யத் தொடங்கியது. நரி ராஜா முதலில் அனைத்து பறவைகளையும் கொன்று சாப்பிடத் தொடங்கியது. அடுத்தடுத்து சில  விலங்குகளைக் கொன்றது. காட்டில் உள்ள ஆறு, குளங்களில்  நீர் வற்றத் தொடங்கின. அனைத்தும்  நரிகளிடம் போய், "அரசே தண்ணீர் இல்லையென்றால் நம்மால் வாழ முடியாது. அதை சரி செய்யுங்கள்' என்று கெஞ்சின. நரி ராஜா எதையும் காதில் வாங்கவில்லை. ஒருபுறம் காட்டுத் தீ பரவத் தொடங்கியது. 

பருந்துகள் நரி ராஜாவிடம் சண்டையிட்டன. "உன்னுடைய கிரீடத்தைக் கொடு'' என்று நரியை மடக்கிக் கொத்தியது பருந்து தலைவன். வலி தாங்க முடியாமல் அனைத்து நரிகளும் பருந்து கூட்டத்திடமிருந்தும், காட்டுத் தீயிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள காட்டை விட்டே ஓடிவிட்டன.
பருந்து, கிரீடத்தை எடுத்துவந்து சிங்கத்திடம் கொடுத்து, "சிங்க ராஜாவே நீங்கள்தான் எங்களுக்கு என்றும் ராஜா. வாருங்கள்...  சிம்மாசனத்தில் அமருங்கள்'' எனக் கூறியது. மீண்டும் கீரிடம் சூடியது சிங்க ராஜா.

சிங்க ராஜாவிடம், "நீங்கள் ஏன் நரிகளைத் தாக்கவேயில்லை' என்று அனைத்தும் கேட்டன. அதற்கு, "எவ்வளவு பெரிய பலசாலியானாலும் அனைத்துக்கும் சண்டையிடத் தேவையில்லை. இந்த இயற்கைத் தன்மையில் நேயத்தோடு வாழவேண்டும். எனவேதான் நரிகள் ஆள ஒரு வாய்ப்பு கொடுத்தேன். நரிகளைப் பற்றி நீங்களே இப்போது புரிந்து கொண்டீர்கள். நல்ல தலைவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது உங்கள் கடைமை, உரிமையும்கூட'' என்றது சிங்க ராஜா.  பழையபடி அந்தக் காடு செழித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com