மரங்களின் வரங்கள்!: சுவையான பழங்கள் தரும் பெருங்காரை மரம்
By -பா.இராதாகிருஷ்ணன் | Published On : 12th February 2022 04:36 PM | Last Updated : 12th February 2022 04:36 PM | அ+அ அ- |

குழந்தைகளே நலமா?
நான்தான் பெருங்காரை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "ரான்டியா அல்ஜினோசா' என்பதாகும். நான் ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் இந்தியா. நான் மத்தியப் பிரதேசம், தென்னிந்தியாவின் மேற்குப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறேன்.
குழந்தைகளே! அழிந்துவரும் மரங்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்லும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு "வாகாட்டா', "காலிக்காரை' என்ற பெயர்களும் இருக்கு. நான் சதுப்பு நிலப் பகுதிகளில் ஒரு காலத்தில் அதிகமாகக் காணப்பட்டேன்.
நான் இலையுதிர் மரமாவேன். என்னை விதைகள் மூலமாகவும், நாற்று, வேர்க்குச்சிகள் மூலமாகவும் நட்டு வளர்த்தால் உங்களுக்கு பலன்கள் பல கொடுப்பேன். நான் சுமார் 6 முதல் 8 மீட்டர் உயரம் வரை வளருவேன். நான் ஓர் அலங்கார மரமாவேன்.
என் இலைகள் செழிப்பாகவும், பூக்கள் வெண்மை நிறமாகவும் இருக்கும். தேனீக்களும், வண்டுகளும் என் பூக்களின் அழகில் மயங்கி என்னை சுற்றிச் சுற்றி வருவாங்க.
என் பூக்கள் அதிக நறுமணத்துடன் இருப்பதால் வாசனை தைலங்கள் தயாரிக்கிறாங்க. என் தழைகள் விளை நிலங்களுக்கு நல்ல உரமாகும். மேலும், கால்நடைகளுக்கும் நல்ல தீவனமாகும்.
மான்களும், மாடுகளும் என் இலைகளை விரும்பி உண்பாங்க. என் முற்றாத காய்களில் துவர்ப்புத் தன்மை அதிகமாக என் காய்கள் சாயமேற்றும் தொழில்களில் பயன்படுது.
என் பழத்தில் நீர், புரதம், கொழுப்பு, நார்ச்சத்துகள், மாவுப் பொருள்கள், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. என் பழத்தை வேகவைத்தோ, எண்ணெய் விட்டு வதக்கியோ, காய்கறியாக சமைத்தோ உண்ணலாம்.
என் வேரை வெந்நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். அதோடு பித்தமும் குணமாகி, உடம்பும் பலம் பெறும். என் வேரைப் பொடித்து எண்ணெய்யிலிட்டு உங்களில் உடலில் ஏற்படும் கொப்புளங்கள் மேல் தடவினால் அவை உடனே மறைந்துவிடும்.
நானும் உறுதியானவன் என்பதால் என் மரத்திலிருந்து உங்களுக்குத் தேவையான மரச்சாமான்கள், தட்டுமுட்டு சாமான்கள், கம்பங்கள், பந்தல் கால்கள், தூண்கள், பல்வேறு வகையான பொம்மைகள் செய்யலாம். காகிதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். என் கிளைகளை ஏழை, எளிய மக்கள் அடுப்பெரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
வாகனங்கள் பெருக்கத்தினாலும், பல மின் சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதாலும் மாசு நிறைந்த சூழலைத் தூய்மையாக்குவது மரங்கள்தான் என்பதை இப்போது உணர்ந்து கொண்டீர்களா குழந்தைகளே!
நான், வீசும் காற்றின் வேகத்தைக் குறைத்து, அவற்றில் உள்ள தூசியினை வடிக்கட்டி, காற்றை தூய்மைப்படுத்தும் திறனை அதிகம் பெற்றிருக்கிறேன். இதனால், பூங்காங்களிலும், பெரிய வளாகங்களிலும், அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களிலும் என்னை நட்டு வளர்த்தால், உங்களின் சுற்றுச்சூழலைக் காத்து, வீட்டிற்கு அழகூட்டுவேன். செய்வீங்களா?
மரம் வளர்ப்போம், சுற்றுச்சூழலைக் காப்போம், இயற்கையைப் பேணுவோம். மழை பெறுவோம்.
மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)