அப்பா தந்த பரிசு!

ஆனந்தன் மிகவும் சோகமாக இருந்தான். தன் நண்பன் ரகுநாதனுக்கு அன்று பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்குக் கையில் காசு இல்லையே என்று வருத்தம்.
அப்பா தந்த பரிசு!

ஆனந்தன் மிகவும் சோகமாக இருந்தான். தன் நண்பன் ரகுநாதனுக்கு அன்று பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்குக் கையில் காசு இல்லையே என்று வருத்தம். வேறு வழியில்லாமல் வெறும் கையோடு பிறந்த நாள் விழாவுக்குச் சென்றான்.

விழா, வெகு சிறப்பாய் நடந்தது. மற்ற எல்லா நண்பர்களும் ஏதோ ஒன்றை எடுத்து வந்து பரிசளிக்க, ஆனந்தன் மட்டும்  எதுவும் தராமல் அவமானத்தோடு வீடு திரும்பினான். இந்தக் கவலை அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது.

ஒரு மாதம் சென்றதும், தன் பிறந்த நாள் வருவதை அம்மாவுக்கு நினைவுபடுத்தினான். ""அம்மா... அடுத்த வாரம் பிறந்த நாள். நானும்,  ரகு கொண்டாடியது போல, அருமையாய்க் கொண்டாட ஆசைப்படுகிறேன். அவன் பிறந்த நாள் அன்று என்னால் அவனுக்கு எந்தப் பரிசும் தர முடியவில்லை. ஆனால், என் பிறந்த நாளைக்காவது என் நண்பர்களுக்கு விருந்துதர ஆசைப்படுகிறேன். நீ என்னம்மா சொல்றே?'' என்றான்.

அவன் அம்மாவுக்குக் குடும்ப நிலை தெரியும். ஆனந்தன் அப்பா ஓர் ஆட்டோ டிரைவர். பத்து பேரைக் கூட்டி வந்து, வீட்டில் வைத்துப் பிறந்த நாள் கொண்டாடுவது என்றால், குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வேண்டுமே? இவனுக்குச் சொன்னால் புரியாது! என்ன செய்வது? என்று குழம்பினாள்.

அன்றிரவு ஆனந்தன் தூங்கிக் கொண்டிருந்தான். அதுதான் தக்க சமயம் என்று நினைத்த  ஆனந்தனின் அம்மா, அவன் சொன்னதைக் கணவரிடம் சொன்னார். 

அவரோ, ""இப்போ கையில் காசு இல்லை! ஆனால், நமக்கிருப்பது ஒரே மகன். அவனோ ஆசைப்படுகிறான். என்ன செய்வது? ஒன்று வேண்டுமானால் செய்யலாம்... ஆட்டோவின் ஆர்சி புக்கை அடைமானம் வைத்து, கடன் வாங்கிட்டு வரேன். பிறந்த நாளைக் கொண்டாடச் சொல்'' என்றார்.

மறுநாள் ஆனந்தன் தன் அம்மாவிடம், ""அம்மா... எனக்குப் பிறந்த நாள் கொண்டாட விருப்பமில்லை. அதனால் அப்பாவிடம் சொல்லி ஆர்சி புக்கெல்லாம் அடைமானம் வைக்க வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்'' என்றான். 

அதிர்ந்து போன அம்மா, ""உனக்கெப்படித் தெரியும்?'' 
என்றாள்.
""நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்; என் கணக்கு ஆசிரியர் சொல்லியிருக்கிறார். கணக்குப் பாடத்தில்தான் கடன் வாங்கல் வரணுமே தவிர வாழ்க்கையில் என்றைக்கும் கடன் வாங்கவே கூடாதுன்னு... அதனால், கடன் வாங்கி என் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம். இதனால் எனக்கு எந்த வருத்தம் இல்லை... குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்டேன்'' 
என்றான்.
இதைக் கேட்ட ஆனந்தனின் அப்பா, மகனைக் கட்டித் தழுவிக் கொண்டு, தான் மறைத்து வைத்திருந்த ஒரு பொருளை அவனுக்குக் கொடுத்தார்.
""என்னப்பா இது?'' என்றான்.
""பிரித்துப் பார்?'' என்றார்.
பிரித்தால், அது ஓர் உண்டியல். 
""கடன் வாங்கக் கூடாதுங்கறது நல்ல பழக்கம்தான்! கடனே வாங்காமல் வாழ். இந்த உண்டியலில் பணம் சேர்க்கத் தொடங்கு. சேமிக்கும் பழக்கத்தை அது உனக்குக் கற்றுத் தரும். "கடன் அன்பை முறிக்கும்; சேமிப்பு கடனையே முறிக்கும்'' என்றார்.
""அப்படியே செய்றேம்பா... இன்றிலிருந்தே தொடங்குகிறேன்?'' என்று மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டான். அப்பா கொடுத்த உண்டியலையே தன் பிறந்த நாள் பரிசாக ஏற்று மகிழ்ந்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com