அரங்கம்: உதவும் கரங்கள்

யாழினி, சுபா, சந்தியா மற்றும் சிறுமிகள் பலர்.(எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அரங்கம்: உதவும் கரங்கள்


காட்சி - 1
இடம்: பள்ளிக்கூடம், காலம்-2015
உணவு இடைவேளை.

பாத்திரங்கள்: யாழினி, சுபா, சந்தியா மற்றும் சிறுமிகள் பலர்.
(எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது)
சுபா: யாழினி செய்தித்தாளைப் படிச்சியா? நேபாளத்துல நில நடுக்கம் ஏற்பட்டுடுச்சாமே... ஐயாயிரத்தும் மேற்பட்டவங்க இறந்துட்டாங்களாம். 
யாழினி: ஆமாம் சுபா, நானும் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன். தொலைக்காட்சியிலேயும் அந்தத் துயரக் காட்சியைப் பார்த்தேன். அந்த மக்களுக்கு நாம ஏதாவது உதவி செய்யணும்னு தோணுதுடி... அதனால எங்க அப்பாகிட்ட ஒரு யோசனை கேட்டிருக்கேன்.
சந்தியா: என்னது? நாம ஏதாவது செய்யணுமா? என்னடி சொல்ற? நாம படிக்கிற பசங்க... நேபாளத்துல இருக்கிற மக்களுக்கு நம்மாலே  என்ன செய்ய முடியும்?
யாழினி: இல்லை சந்தியா....நம்மால முடியும்.  நாம மாணவர்கள்தான். ஆனால், மாணவர்கள் நினைச்சா எதையும் சாதிக்க முடியும் தெரியுமா? 
சுபா:  அது சரி, நேபாளம் எவ்வளவு தூரத்தில் இருக்கு? நாம என்ன அவங்களுக்கு உணவா கொண்டு போய் தரமுடியும்? 
யாழினி:  இல்ல சுபா...  ஏதோ ஓர் ஊர்ல இயற்கைச் சீற்றம் வந்துடுச்சு. ஆனா அது மாதிரி வர்ற நேரத்திலே ஒவ்வொரு முறையும் நமக்கு அது ஒவ்வொரு பாடத்தைத் தந்திட்டுத்தான் போகுது. நாம முயற்சி செய்தா அவங்களுக்கு உதவ முடியும்.
சுபா: சரி...சரி... உன் அப்பா என்ன யோசனை சொல்றாருன்னு பார்ப்போமே...
யாழினி:  ஆமாம்... நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே... என் வீட்டுக்கு வரீங்களா...?
எல்லோரும்: ஓ... கண்டிப்பா வர்ரோமே.

காட்சி - 2
இடம்: யாழினி வீட்டின் வரவேற்பறை
பாத்திரங்கள்: யாழினியின் தந்தை அன்பரசன், யாழினி, சுபா, சந்தியா.

யாழினி: அப்பா! நம்ம அண்டை நாடான நேபாளத்துல மிக மோசமான நிலநடுக்கம் வந்து பள்ளாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்காங்க. இன்னும் சில பேர் வீடு இல்லாம, உணவில்லாம தவிக்கிறாங்களாம். பாவம்பா... அவங்களுக்கு எங்களைப் போன்ற பள்ளி மாணவர்கள் எந்த வகையில் உதவியா இருக்க முடியும்னு ஒரு யோசனை கேட்டிருந்தேனே... இப்ப சொல்லுங்கப்பா... அதுக்குத்தான் என் தோழிங்க வந்திருக்காங்க..
அன்பரசன்: (யாழினியின் தோழிகளை வரவேற்று)  யாழினி... உங்களைப் போன்ற சிறுவர்கள் இந்த அளவுக்கு சிந்திக்கிறதை நெனச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும்மா. உங்களுடைய  இந்த உரத்த சிந்தனைக்கும், குரலுக்கும் முதல்ல என்னோட பாராட்டுகளைச் சொல்லிக்கிறேன்.

(சிறுமிகள் மூவரும் புன்முறுவல் பூக்கின்றனர்)

எங்க அலுவலகத்தில் எங்களோட ஒருநாள் சம்பளத்தைக் நிவாரண நிதியா நாங்க தர்றோம். அதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன். அதேபோல,  நீங்க நம்ம தெருவில் இருக்கிற உங்களைப் போன்ற சிறார்கள்கிட்ட, உங்கப் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரின் சம்மதத்தோட கிடைக்கிற தொகையைத் திரட்டத் தொடங்குங்க... அதை அந்த நேபாள மக்களுக்கு நிவாரண நிதியா  அனுப்புங்க... 

சந்தியா: அங்கிள்... அதை எப்படி அனுப்புறது?

அன்பரசன்: அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அதை நான் பார்த்துக்கிறேன். யார் யாரெல்லாம் எவ்வளவு தொகை கொடுக்குறாங்களோ அதை ஒரு நோட் புக்கில் தேதிப்படி எழுதி வையுங்க. ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும், மொத்த தொகையைக் கொண்டுபோய் வங்கியில் செலுத்தி, அதை வரைவோலையா (டிடி) மாத்திடலாம். பிறகு "நேபாள நிவாரண பணிக்கு'ன்னு நமது அரசு மூலமாக அதை அனுப்ப நான் ஏற்பாடு பண்றேன். கவலையை விடுங்க... 
யாழினி:  சூப்பர் ஐடியாப்பா...
எல்லோரும்: அப்படியே செய்யறோம் அக்கிள்...

காட்சி - 3
பாத்திரங்கள்: அன்பரசன், யாழினி, சந்தியா.

(ஒருவாரமாக மாணவர்கள் கலெக்ஷன் செய்து கொடுத்த தொகையை வங்கிச் சென்று வரைவோலையாக மாற்றி வருகிறார் யாழினியின் தந்தை அன்பரசன். அவர் வண்டியில் வருவதைப் பார்த்த  குழந்தைகள் யாழினியின் வீட்டை நோக்கி வருகின்றனர்)

யாழினி:  அப்பா... டிடி வாங்கியாச்சா...?
சந்தியா: அங்கிள் டிடி வாங்கிட்டீங்களா?
அன்பரசன்:  பொறுங்க.. பொறுங்க... இப்போதான் வாங்கிட்டு வெளியே வரேன். இதை உடனடியா பதிவுத் தபாலில் அனுப்பலாம் வாங்க 
(அனைவரும் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்துக்குப் பேசிக்கொண்டே நடந்து செல்கின்றனர்).

காட்சி - 4
இடம்: அஞ்சல் நிலையம்
பாத்திரங்கள்: அன்பரசன், யாழினி மற்றும் சிறார்கள்.
(அஞ்சல் நிலையத்தில் சேகரிந்த தொகையைப் பதிவுத் தபாலில் அனுப்பி முடித்தவுடன்)

யாழினி:  நாங்க திரட்டிக் கொடுத்த தொகையை நீங்க அனுப்ப ஏற்பாடு செய்ததற்கு ரொம்ப நன்றிப்பா... 
(எல்லோரும் நன்றி கூறினர்)
அன்பரசன்:  நன்றியெல்லாம் எதுக்குப் பசங்களா? இதைச் செய்ய நான் கொடுத்து வெச்சிருக்கணும். இந்தச் சின்ன வயசுலயே பொதுநல சேவை செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்களே... ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு...  நல்ல செயலை செய்ய, மனசுல நெனைச்சாலே பாதி வெற்றிதான்னு சொல்லுவாங்க. அதுபோல உங்களோட நல்ல எண்ணம் வெற்றியா மாறியிருக்கு. உங்களோட உதவும் உள்ளங்களுக்கு என்னோட பாராட்டுகள். இந்த நேபாளத்து நிலநடுக்கம் மட்டுமல்ல,  இதேபோல இயற்கைப் பேரிடர்கள் எப்போது, எங்கு ஏற்பட்டாலும் அப்போதெல்லாம் நாம் இதேபோல உதவி செய்ய முன்வரணும்... 
(அனைவரும் அவரைப் பார்த்து) ""ரொம்ப நன்றி அங்கிள். அப்படியே செய்கிறோம்.
அன்பரசன்:  நன்றி பசங்களா... வாங்க வீட்டுக்குப் போகலாம்...
(மகிழ்ச்சியுடன் எல்லோரும் வீட்டுக்குச் செல்கின்றனர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com