செய்திச் சிட்டு!

கிளையில் வந்து அமர்ந்த சிட்டைப் பார்த்த பிள்ளைகளுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது! 
செய்திச் சிட்டு!

கிளையில் வந்து அமர்ந்த சிட்டைப் பார்த்த பிள்ளைகளுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது! 

பாலா மட்டும் பொறாமையாக, ""உனக்கென்ன, உலகம் பூரா சுத்தறே... எங்களுக்கும் உன்னை மாதிரி பறக்கற சக்தி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?'' என்றான். 

சிட்டு சிறகை படபடவென அடித்து விட்டு, ""வெரிகுட்! இந்த வாரம் ஒரு குட்டி விமானத்தில் பறந்தே உலகத்தைச் தன்னந்தனியா சுத்தி வந்த சின்னப் பெண்ணைப் பத்தித்தான் சொல்லப்போறேன்!'' 

""ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் போலிருக்கே!'' என்றாள் லீலா.

""ஆமாம். அந்தப் பொண்ணு பேரு, "ஜாரா ரூதர்போர்டு'. வயசு 19. அப்பா பேரு ஸாம் ரூதர்போர்டு,  இங்கிலாந்துக்காரர். வர்த்தக விமானங்களை ஓட்டுபவர். அம்மா பேரு "பீட்ரைஸ் டி ஸ்மெட்'.  பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர், வக்கீல். பொழுதுபோக்கு விமானங்களை ஓட்டுவதில் அம்மாவுக்கு ஆர்வம்! சின்ன வயசிலேயே பிளேனை ஓட்டுவதில் ஜாராவுக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது! ஜாரா ரூதர்போர்டுக்கு 14 வயசிலேயே பிளேனை ஓட்டுவதற்கான உரிமம் கிடைத்துவிட்டது. ஜாரா துருதுருப்பான பெண். பிளேனில் இந்த உலகத்தை சுற்றிவர வேண்டும் என்கிற கனவு அவளுக்கு!  ஒரு வழியாக பெற்றோர் அவள் விருப்பத்துக்குப் பச்சைக்கொடி காட்ட, தன் கனவை நிறைவேற்ற 18-ஆம் தேதி ஆகஸ்டு, 2021-இல் இரண்டு இருக்கைகள் கொண்ட மிக லகுவான விமானத்தில் பெல்ஜியத்திலுள்ள கோர்ட்ரிஜ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார், உலகைச் சுற்ற!''

"" பாஸ்போர்ட்? விசா?'' என்றான் ராமு.

""பதட்டப்படாதே... எந்தெந்த நாட்டுக்கு எந்தெந்த தேதிகளில் விஜயம் என்பதையெல்லாம் திட்டமிட்டு விசாவும் பாஸ்போர்ட்டும் வாங்கியிருந்தார்கள். அதிலேயும் பல சிக்கல் வந்தது. குறிப்பிட்ட நாட்டுக்கு, குறிப்பிட்ட நாளில் அங்கு போய்ச் சேரமுடியாதபோது விசா காலாவதியாகிவிடும். குறிப்பாக, ஜாரா ரஷ்யா செல்லும்போது இந்த சங்கடம் நேர்ந்துவிட்டது. இதனால் ஓரிரு நாள்கள் பயணம் தடைபட்டுவிட்டது. இந்தோனேஷியாவில் விமானத்தை வெளியேற்றும் ஆவணங்கள் கிடைக்கத் தாமதமானது. இரண்டு நாள் அவஸ்தையாகிவிட்டது. பல இடைஞ்சல்களுக்குப் பிறகு 52 நாடுகளையும் 5 கண்டங்களையும் சுற்றி வெற்றிகரமாக தன் பயணத்தை முடித்தாள் ஜாரா ரூதர்போர்டு. பாவம் சின்னப் பெண் பயணத்தில் மகா சங்கடங்கள்!'' என்றது சிட்டு.

""என்ன சங்கடங்கள்?'' என்று கேட்டாள் மாலா.

""பெல்ஜியத்திலேயிருந்து இங்கிலாந்து, ஐஸ்லாந்து, க்ரீன்லாந்து கனடா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, பிறகு திரும்பும் வழியில், அலாஸ்கா, ரஷியா, கொரியா, இந்தேனேஷியா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், சில ஐரோப்பிய நாடுகள், பிறகு புறப்பட்ட இடமான பெல்ஜியம்... இப்படித்தான் பயணத் திட்டம் இருந்தது. ஆனால், அலாஸ்காவில் பயங்கரப் பனி மூட்டம். விமானத்தை ஓட்டவே முடியலே. சில நாள்கள் அங்கு தங்கும்படி ஆகிவிட்டது.... 

....சைபீரியாவிலே பூஜ்யம் டிகிரிக்கும் கீழே குளிர்! இந்த மாதிரி குளிரில் விமானம் சில சமயம் பழுதாகிவிடும்! நல்லகாலம்! ஜாராவுக்கு அந்த மாதிரி எதுவும் ஏற்படலே. ஆனால், தாமதமாகத்தான் விமானத்தை வானில் செலுத்த முடிந்தது. யோசிச்சுப் பாருங்க... தன்னந்தனியான பயணம்... பனி...  இருள்... அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மன உறுதி இருந்திருக்கணும்!....

....சில சமயம் ரேடியோ சமிக்ஞைகள் கிடைக்காது. மனசை பயம் கவ்விக் கொள்ளும். சும்மா சொல்லக்கூடாது ஜாரா ரூதர்போர்டு ரொம்ப மன உறுதி கொண்ட பெண்தான்!.  ஒரு வழியாக 155 நாள்களில் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியது. தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது என்று பரவசப்படுகிறாள் ஜாரா. 

2017-இல் ஜாராவுக்கு முன்னரே 30 வயதான ஷிஸ்டா வைஸ் என்ற பெண்மணி தனியாக விமானத்தில் பயணித்திருக்கிறார். இவருக்கு இதற்கு 145 நாள்கள் ஆனது. ஆனால் இவர் விஜயம் செய்த நாடுகள் 22 மட்டுமே. உலகைத் தன்னந்தனியாகச் சுற்றிவந்த மிகச் சிறிய பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் "ஜாரா ரூதர்போர்டு' இடம்பெற்று விட்டாள்! 152 நாடுகள்,  5 கண்டங்களைக் கடந்திருக்கிறாள்!     "விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கு போன்ற துறைகளில் பெண்களின்  பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. எனது இந்தப் பயணம் பெண்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்' என்று கூறுகிறாள் ஜாரா ரூதர்போர்டு''  என்று கூறி முடித்தது சிட்டு.

""சூப்பரான செய்திதான் நீ சொல்லியிருக்கே... ஜாராவுக்கு நாம் எல்லோரும் ஜோரா கை தட்டுவோம்''  என்று கூறினான் பாலா. 
""ஓகே... பசங்களா நான் கிளம்பறேன்... பை..பை...'' என்று சிட்டு பறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com