நூல் புதிது

நூல் புதிது

ஒன்பது வயதான ஹரிவர்ஷ்னியின் எண்ணத்திலும், எழுத்திலும் உருவான ஒன்பது கதைகள்தான் இந்நூலில் உள்ளன.

ஜீராவும் பஜ்ஜியும் (கதைகள்) - ஹரிவர்ஷ்னி ராஜேஷ்; பக்.96; ரூ.100;

ஒன்பது வயதான ஹரிவர்ஷ்னியின் எண்ணத்திலும், எழுத்திலும் உருவான ஒன்பது கதைகள்தான் இந்நூலில் உள்ளன. நகைச்சுவை, கற்பனை, துப்பறிதல் என்று கதைக் கரு அமைந்துள்ளன. இந்தக் கதைகளுக்கு  அற்புதமாக ஓவியம் வரைந்திருக்கிறார் 15 வயதான வர்த்தினி ராஜேஷ்.

தாலியாப்பூர் நாட்டில் வாழ்ந்த மீம், திக்கி, தேஜு, டாலியா ஆகிய நான்கு நண்பர்களும் குட்டி இளவரசி பிந்துமதியுடன் நட்புடன் இருக்க  நினைக்க, அவள் அதை ஏற்க மறுக்க, அவளது போக்கை  மாற்றி அவளை நட்பாக்கிக் கொள்வதற்கு உளுந்துவடையைப் பயன்படுத்துவது நல்ல நகைச்சுவை. இனி உளுந்து வடையைப் பார்த்தால் நீங்களும் விடமாட்டீர்கள்.

கோட்டு, கொட்டுலு என்ற நண்பர்கள் புதையலைத் தேடிப் போக, அந்தப் புதையல் எது என்று தெரிய வரும்போது அவர்களுக்கு மட்டுமல்ல படிப்பவர்களுக்கும் வியப்பு கலந்த அதிர்ச்சி உண்டாகும். காய்கறி வாங்கப் போன ஜீராவும் பஜ்ஜியும் வழிதவறிப் போனதும் நல்லதுக்குத்தான் என்பதைக் கூறி,   கடத்தப்பட்ட ஒரு சிறுமியை மீட்பதில் முடிகிறது இந்த அபார கற்பனைக் கதை.

நட்பின் அவசியம்,  உழைக்காமல் சம்பாதிக்கும் காசு நிலைக்காது, மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும், ஆபத்தில் இருப்பவருக்கு உதவ வேண்டும், சமயோஜித புத்தி வேண்டும் முதலிய நல்ல கருத்துகளை எடுத்துரைத்திருக்கிறார்.  ஹரிவர்ஷ்னி எழுதியிருக்கும் "என்னுரை'யே நம்மை வியக்க வைக்கிறது.  "குழந்தைகளின் இளம் எழுத்தாளர்' விருதைப் பெற்ற இவர், எட்டுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வருகிறாராம். 

சுட்டிப் பூனையும் குட்டிப் பெட்டியும்- (பாடல்கள்)- இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.32; ரூ.30. 

மொத்தம் 13  பாடல்கள். முதல் பகுதியில் பாப்பாவுக்கு உயிரெழுத்துகளைக் கற்றுக்கொடுக்கும் "அ...ஆ... அறிந்திடு பாப்பா' என்பதில் தொடங்கி-  நடந்தால் நல்லது, வேண்டாததும் வேண்டியதும் என நான்கு பாடல்கள் உள்ளன. பறவைகள் வெடித்த பட்டாசு, காட்டில் ஒரு மாநாடு, யானை-குருவி நட்பு முதலிய ஒன்பது கதைப் பாடல்கள் இரண்டாவது பகுதியில் இடம்பெற்றுள்ளன.

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு கணினி பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகளையும்; இன்றைய சிறுவர்கள் அதிகம் ஓடி ஆடி விளையாடுவதையும், நடப்பதையும் தவிர்த்து ஒரே இடத்தில் உட்கார்ந்து தொடர்ந்து செல்போனைப் பயன்படுத்துவதன் விபரீதத்தையும் - நடந்தால் நல்லது, கணினிப் பெட்டி, காட்டில் ஒரு மாநாடு, குழந்தையின் ஏக்கம் ஆகிய  பாடல்கள் எடுத்துரைத்து, எச்சரிக்கின்றன. காகிதக் கப்பல் விட்டு மகிழும் குழந்தைகளுக்காக மழைப்பாடல் ஒன்றும் உள்ளது.

மேற்கண்ட இரு நூல்கள் வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-18; தொடர்பு எண்: 98412 36965.

அறம் செய்ய விரும்பு (ஆத்திசூடி எளிய விளக்கம்) -சீத்தலைச் சாத்தன்; பக்.24; ரூ20; ஒப்பில்லாள் பதிப்பகம், 17-4-2-2ஏ, செட்டிய தெரு, பாரதி நகர், திருப்பத்தூர்-630 211, 98424 90447/ 95660 22019.

ஒளவையின் ஆத்திசூடி இரண்டு மூன்று சொற்களைக் கொண்டு ஒரே வரியில் மிக எளிமையாகக் குழந்தைகளுக்கு அறக்கருத்துகளைச் சொல்லக்கூடியது. அதையே சற்று விரித்து, குழந்தைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் சில சொற்களுக்குப் பொருள் தந்து எளிய நடையில் விளக்கம் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.

"இயல்வது கரவேல்'  என்பதற்கு, "கரவு என்பது மறைப்பது. இயல்வது என்பது நம்மால் முடிவது. நம்மால் முடிவதை மறைக்காமல் தேவைப்படும் அடுத்தவர்க்கு உதவுவது உத்தமம் ஆகும்' என்றும்;    "நயம் பட உரை' என்பதற்கு, "நயம் என்பது லயம். லயம் என்பது இசை. இசை என்பது இனிமை. கோபமாகப் பேச வேண்டியதாக இருந்தாலும் இனிமையாகப் பேசினால் காரியமும் கைகூடும், வெற்றியும் வரும்' என்றும் அருமையாக விளக்கம் தரப்பட்டுள்ளது. இளைய தலைமுறையின் வாழ்க்கை செம்மைப்பட ஒளவைத் தமிழை அவர்களுக்குப் பருகக் கொடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com