முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
அங்கிள் ஆன்டெனா
By ரொசிட்டா | Published On : 08th May 2022 04:42 PM | Last Updated : 08th May 2022 04:42 PM | அ+அ அ- |

மிகவும் பளுவான பொருள்களைத் தூக்குவதற்கு கிரேன்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கிரேன்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? இதைக் கண்டுபிடித்தது யார்?
கிரேன் என்பது, மனிதர்களால் எளிதில் தூக்க முடியாத, எடை அதிகமாக உள்ள பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குத் தூக்கி வைக்க உதவும் ஓர் இயந்திரம். இது "கிரேன்' என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்:
"கிரேன்' என்றால் ஆங்கிலத்தில் "கொக்கு' என்று பொருள். இந்தக் கிரேன்கள் பார்ப்பதற்கு கொக்கு போல இருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்கிறார்கள். முதன் முதலாக கிரேன்களைப் பயன்படுத்தியவர்கள் மெசபடோமியா மக்கள்தான். மெசபடோமியா என்பது தற்போது ஈராக் என்று அழைக்கப்படுகிறது.
கி.மு.515-ஆம் ஆண்டுகளிலேயே இத்தகைய கிரேன்களை எகிப்தியர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. அப்போது அவர்கள் தண்ணீரைப் பெரிய கலன்களில் தூக்குவதற்காகப் பயன்படுத்தினார்கள். பின்னர் பளுவான பொருள்களைத் தூக்குவதற்கும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
இந்த வகை அறிவியல் பின்னர் பல நாடுகளுக்கும் பரவியது. அப்போதெல்லாம் மனித சக்திதான் கிரேன்களை இயக்கப் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் விதவிதமான கிரேன்கள் வந்துவிட்டன. தற்போது மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஹைட்ராலிக் கிரேன்களும் வந்துவிட்டன. இவை காற்றின் அழுத்தத்தைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.