Enable Javscript for better performance
தந்தை காட்டிய வழியம்மா...!- Dinamani

சுடச்சுட

  

  தந்தை காட்டிய வழியம்மா...!

  Published on : 20th September 2012 08:55 AM  |   அ+அ அ-   |    |  

  t30kon1

  தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஊர் முக்கூடல். அந்த ஊருக்கு அந்நாளைய திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரங்களாகத் திகழ்ந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி,  சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி, ராகினி எல்லாரும் நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றிருக்கிறார்கள். புகழ்பெற்ற நாகஸ்வர இசைக் கலைஞர்கள் ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம்  ஆகியோரின் நாத வெள்ளத்தில் அந்த ஊர் மூழ்கித் திளைத்திருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த புகழ் பெற்ற சொக்கலால் பீடி நிறுவன உரிமையாளர் ஹரிராம்சேட்தான் இந்த திரையுலக நட்சத்திரங்களையெல்லாம் முக்கூடலுக்குக் கட்டி இழுத்துவந்தவர்.

  ஒரு தலைமுறை போய்விட்டால்ó அவர்கள் செய்த நல்ல காரியங்களை அடுத்த தலைமுறையினர் தொடர்வது அபூர்வம். ஆனால் ஹரிராம் சேட்டின் வழித்தோன்றல்கள் அவருடைய நல்ல காரியங்களை இன்றும் தொடர்கிறார்கள்.

  ஹரிராம்சேட்டின் மகள் பிரசன்னா ரவீந்திரன் தனது தந்தையின் அந்நாளைய கலையுலகத் தொடர்பு உறவுகளை இன்றளவும் பேணிப் பாதுகாத்து வருகிறார்.

  சென்னை தியாகராய நகரில் உள்ள பிரசன்னா ரவீந்திரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம். தனது தந்தை அந்தக் காலத்தில் செய்த பல செயல்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

  ""எனது அப்பா ஹரிராம் சேட் 1934 இல் பிறந்தவர். சின்ன வயதிலேயே அவருக்குக் கலையார்வம் அதிகம். அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நடிகர், பாடகர் தியாகராஜ பாகவதர் போலவே பாடும் திறமை என் தந்தைக்கு இருந்தது. அவரை தனது மானசீக குருவாக என் தந்தை ஏற்றுக் கொண்டார். தனது 15 வயதில் ஒரு கச்சேரியில் தியாகராஜ பாகவதரை என் அப்பா முதன்முதலில் சந்திக்கிறார். அன்றிலிருந்து குரு-சிஷ்யர் உறவு ஆரம்பிக்கிறது.

  தியாகராஜ பாகவதரைப் போலவே பாடும் திறமை என்னுடைய அப்பாவுக்கு இருந்தது. அதைப் பார்த்த தியாகராஜ பாகவதர் என் அப்பாவுக்கு "இன்னிசை இளவரசு' என்ற பட்டத்தைக் கொடுத்தார். அப்போது முக்கூடலுக்கு அருகில் உள்ள எங்களுடைய குல தெய்வ கோயில் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். அந்தத் திருவிழாவையொட்டி திரைப்படத்தின் புகழ்பெற்ற நட்சத்திரங்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார் என் அப்பா. என்.எஸ்.கிருஷ்ணன் பலமுறை எங்கள் ஊருக்கு நிகழ்ச்சி நடத்த வந்திருக்கிறார். நடிகர் கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.ராதா, சிவாஜிகணேசன், விருந்தினராக எம்.ஜி.ஆர்., என எல்லாரையும் எங்கள் ஊருக்கு என் அப்பா அழைத்து வந்திருக்கிறார்.

  என் அப்பாவின் கல்யாணம் 1952 இல் நடந்தது. அதையொட்டி லலிதா,பத்மினி, ராகினியின் நடன நிகழ்ச்சி,  காருக்குறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரின் நாகஸ்வரக் கச்சேரியும் எல்லாம் எங்கள் ஊரில் நடந்திருக்கிறது. நடிகை பத்மினி என் அப்பாவின் கடைசி காலம் வரை மட்டுமல்ல, தனது மறைவு வரை எங்கள் குடும்பத்தினருடன் நட்புறவைப் பேணி வந்தார்.

  என்.எஸ்.கிருஷ்ணனின் நாடக மன்றத்தின்  "பணம்' நாடகத்தில் சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். கே.ஆர்.ராமசாமியின் "ஓரிரவு', டி.ஆர்.மகாலிங்கத்தின் "ஸ்ரீ வள்ளி', ஆர்.எஸ்.மனோகரின் "இலங்கேஸ்வரன்' ஆகிய நாடகங்கள் எங்கள் ஊர் மக்களை மகிழ்வித்த நாடகங்களில் சில. அக்காலத்தில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களான தாராசிங், கிங்காங் போன்றவர்களை முக்கூடலில் உள்ள எங்களுடைய பள்ளி மைதானத்திற்கு அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தினார். அந்தக் காலத்தில் அது பெரிய விஷயம்.

  கலையில் மட்டுமல்ல,  வேட்டையாடுதலிலும் என் அப்பாவிற்கு ரொம்பப் பிரியம். பாபநாசம் மலைப் பகுதிக்குச் சென்று கடுவாய்ப்புலி ஒன்றை வேட்டையாடி வந்தார். சிவாஜிகணேசனும் என் அப்பாவுடன் சேர்ந்து வேட்டையாட வருவார்.

  மிருகங்களை வளர்ப்பதில் எங்களுடைய அப்பாவிற்கு  ரொம்ப ஆர்வம். குறிப்பாக யானைகளை வளர்த்து வந்தார். யானையின் பாதத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக யானைக்கு ஷு செய்து போட்டிருக்கிறார். யானைக்கு கொசு கடிக்காமல் இருக்க கொசுவலை கட்டியிருக்கிறார். யானையை மெüத்ஆர்கன் €வாசிக்கச் செய்திருக்கிறார். சொன்னால் நம்பமாட்டீர்கள். யானை சாப்பிட அல்வா கொடுத்திருக்கிறார்!.

  முக்கூடலில் வாசகசாலை, உயர்நிலைப் பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை அவர் ஏற்படுத்தினார். இன்றும் அவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு அவை இயங்குகின்றன.

  என் அப்பா 1964 இல் மறைந்துவிட்டாலும் அவர் செய்த பணியை என் குடும்பத்தினர் தொடர்ந்து செய்து வந்தனர். வருகின்றனர். கோயில் திருவிழாக்களில் எங்கள் குடும்பத்தினரின் பங்கு இப்போதும் இருக்கிறது. மறைந்த என் தம்பி அமர்நாத் பிரபாகர் என் தந்தையைப் போலவே அருமையாகப் பாடுவார்.

  2000 ஆம் ஆண்டில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 91 வது பிறந்த நாள் வந்தது. அதை சென்னை வடபழநியில் கொண்டாடிய அவர் குடும்பத்தினர் பாகவதருடன் நடித்தவர்கள், அவர் படங்களுக்குப் பாடல் எழுதியவர்கள், இசை அமைத்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் நினைவுப் பரிசு வழங்கிக் கெüரவித்தனர். அப்போது எனக்கு நண்பரின் மகள் என்கிற முறையில் நினைவுப் பரிசு அளித்தனர். இது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி.

  நடிகை பத்மினி நாட்டியத்தில் மேதை என்றுதான் பலருக்கும் தெரியும். அவர் இசையிலும் மிகச் சிறந்த மேதை.

  "வின்டேஜ் ஹெரிடேஜ்' என்ற அமைப்பு நடிகை பத்மினிக்குப் பெருமை சேர்க்கும் "ஆடல் காண வாரீரோ' என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அந்த அமைப்பில் நானும் ஓர் உறுப்பினர் என்கிற முறையில் என்னுடைய பங்களிப்பை ஈடுபாட்டுடன் செய்தேன்.

  பத்மினி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சிக்கு நான்தான் பத்மினியை அழைத்துச் சென்றேன்.'' என்றார்.

  ந.ஜீவா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai