நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் மின்னக்கல். நெசவுத் தொழில் சார்ந்த இந்தக் கிராமத்தின் பெயரை சிற்றலை வானொலி நேயர்கள் மட்டுமல்லாது பல்வேறு வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களிடையேயும் தனது செயல்பாடுகள் மூலம் பிரபலமாக்கியுள்ளார் இ. செல்வராஜ். நெசவுத் தொழிலாளியான இவர் அப்படி என்ன செய்தார்? என்ற கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது இயல்புதான்.
அவரே சொல்கிறார்..
""கைத்தறி நெசவுத் தொழிலாளியின் மூத்த மகனாகப் பிறந்தேன். குடும்பச்சூழல் காரணமாக பள்ளி இறுதி வரையே படிக்க முடிந்தது. அதன் பின்னர் தந்தையின் அறிவுரைப்படியும் குடும்பத்துக்கு வருவாய் ஈட்ட வேண்டிய காரணத்தாலும் விசைத்தறி தொழிலாளியாக மாறினேன்.
எனது பள்ளிப்பருவம் முதல் வீட்டிலேயே கைத்தறி நெசவு செய்து வந்த தந்தை வானொலி கேட்பதில் ஆர்வம் உடையவர். அதனால் எனக்கும் வானொலி கேட்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வெவ்வேறு வானொலி நிலையங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு வானொலி நிலையங்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் பணியை முதலில் பொழுதுபோக்காகத் தொடங்கினேன்.
அப்போது, அகில இந்திய வானொலி, சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, வேரித்தாஸ் வானொலி ஒலிபரப்பு உள்ளிட்டவற்றின் நேயர் வட்டங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த வட்டங்களில் இருப்பவர்கள் தாங்கள் நேயர்களாக உள்ள வானொலி ஒலிபரப்பு நிறுவனத்திடம் இருந்து வரும் தகவல்களை, அந்தந்த வட்டங்களில் உள்ள மற்ற நேயர்களுக்கு செல்போன் குறுந்தகவல் சேவை மூலம் தெரிவித்து வருவதை அறிந்தேன்.
இப்படி ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் தகவலை மட்டும் என்றில்லாமல், வானொலி ஒலிபரப்பு குறித்த புதிய மற்றும் அரிய தகவல்களைத் திரட்டலாமே என்று தோன்றியது. இணையதள வசதி இல்லாத மின்னக்கல் கிராமத்தில் இருந்து இது எப்படிச் சாத்தியமாகும்? கணினி பயன்பாடு குறித்த எவ்வித அறிமுகமோ, பயிற்சியோ இல்லாத என்னால் எப்படி முடியும்? அதற்கு ஆங்கில அறிவு அதிகம் தேவையாயிற்றே என்பன போன்ற கேள்விகளே முதலில் எழுந்தன.
செல்போன் மூலமே இணையதளத்தைப் பயன்படுத்தும் முறையினையும் அறிந்து கொண்டேன். உள்ளூர் வானொலி முதல் உலக அளவில் உள்ள வானொலி ஒலிபரப்புகள் குறித்த அனைத்து புதிய தகவல்களையும் திரட்ட தொடங்கினேன்.
இவ்வாறு, சிற்றலை வானொலி ஒலிபரப்புகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கிய சமயத்தில் எனக்கு அறிமுகமாகியிருந்த நேயர்களின் செல்போன் எண்களுக்கு, நான் அறிந்த விவரங்களை குறுந்தகவல்களைக அனுப்பத் தொடங்கினேன்.
இத் தகவல்களைப் பெற்றவர்கள், அதன் மதிப்பை உணர்ந்து பிறருக்கும் அனுப்பத் தொடங்கினர். இவ்வாறு மூன்றாவது நபராக தகவல்களை பெற்றவர்களில் பலரும் என்னை தொடர்புக் கொள்ள முயன்றனர்.
அப்போதுதான் சிற்றலை வானொலி ஒலிபரப்பு குறித்த தகவல்களுக்கு நேயர்களிடம் உள்ள முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன். இதையடுத்து, 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொருவரின் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் செல்போன் எண்களையும் பெற்று அவற்றுக்கு, வானொலி ஒலிபரப்புகள் குறித்த விவரங்களை குறுந்தகவல்களாக அனுப்பி வருகிறேன். எனது ஆர்வத்துடன் தொடர்புடைய விஷயம் என்பதால் எவ்வித தொய்வும் இன்றி இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட நேயர்கள் நேரடியாக குறுந்தகவல்களை என்னிடம் இருந்து பெற்று வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் வானொலி ஒலிபரப்பு சார்ந்த 2,300-க்கும் மேற்பட்ட தகவல்கள் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தகவல்களாக நேயர்களுக்கு கிடைக்கச் செய்திருக்கிறேன்.
சிற்றலை வானொலி ஒலிபரப்பு நிலையங்களின் புதிய நிகழ்ச்சிகள், செயின்ட் ஹெலினா, புலிகளின் குரல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிற்றலை வானொலி நிலையங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஒலிபரப்பை மேற்கொள்ளும். அது எந்த நாளில், எந்த நேரத்தில், எந்த அலைவரிசையில் இருக்கும் என்ற விவரங்களை குறுந்தகவல்களாக அனுப்பும் போது, அது நேயர்களுக்கு மிகுந்த உதவியாக அமைந்துவிடுகிறது.
இதனால் ஏற்பட்ட நன்மை என்று சொன்னால் பல வானொலி நேயர்களுக்குச் சிற்றலை நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. செயின்ட் ஹெலினா சிற்றலையில் தமிழ் ஒலிபரப்பு ஆரம்பிக்கப் போவதை முதன் முதலில் நான்தான் நேயர்களுக்குக் கண்டுபிடித்துச் சொன்னேன். இப்படி பல அரிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிவதால் நேயர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.
இது தவிர குறிப்பிட்ட ஏதாவது ஒலிபரப்புகள் குறித்து நேயர்கள் கேட்கும் புதிய மற்றும் பழைய தகவல்களையும் வழங்கி வருகிறேன். இவ்வாறு நான் அனுப்பிய சில தகவல்கள் குறித்து அறிந்து அது தொடர்பான கூடுதல் தகவல்கள் கேட்டு அகில இந்திய வானொலி நிலையம் உள்ளிட்ட சில வானொலி நிலையத்தைச் சேர்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பயனடைந்துள்ளனர்.
குறுந்தகவல்களாக அனுப்புவதுடன் நிற்காமல், இவ்வாறு அனுப்பிய தகவல்களைத் தொகுத்து, அதற்கென செல்போன் வழி இணையதள சேவை மூலம் உருவாக்கப்பட்ட எனது வலைப்பூவிலும் (www.dgsmsnet.blogspot.com) வெளியிட்டு வருகிறேன்'' என்கிறார் செல்வராஜ்.