மாமியார் மருமகளுக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் தன்னுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், தங்கள் வீட்டின் வாரிசை சுமக்கும் மருமகளின் மீது மாமியாருக்கு கரிசனம் பொங்கி வழியும். சிலநேரங்களில் பொய்க் கோபத்தோடு "குனிஞ்சி நிமிர்ந்து வேலை செய் அப்போதான் சுகப் பிரசவமாவும்' என்பது போன்ற கெடுபிடிகளும் இருக்கும். இதெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கதை.
இப்போதெல்லாம் பெற்றோர்களே, ""என் பொண்ணு வலி தாங்கமாட்டா டாக்டர், பேசாம சிசேரியனே பண்ணிடுங்கோ... ஒன்பதாம் தேதி பிரம்ம முகூர்த்தத்தில குழந்தை பிறந்தா நல்லதுன்னு சொல்றாங்க டாக்டர்... ஆபரேஷன் மூலமா அன்னைக்கே குழந்தையை எடுத்திடுங்களேன்...'' என்று டாக்டர்களுக்கே தங்களின் ஆலோசனைகளைச் சொல்லிவிடுகிறார்கள். விளைவு, நாட்டில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவிட்ட நிலையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் எதையெல்லாம் நிச்சயம் செய்யவேண்டும். எதையெல்லாம் நிச்சயமாகச் செய்யக் கூடாது என்பதையெல்லாம் அருகிலிருந்து அனுசரணையோடு சொல்லிக் கொடுப்பதற்கு யாரும் இல்லாத குறை இந்தக் கால இளந் தாய்மார்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்காக, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் செயல்படுகிறது "சிருஷ்டி பிரக்னன்ஸி கேர் கிளாசஸ்'. பேறு கால விடுமுறை கேள்விப்பட்டிருக்கிறோம்... பேறு கால வகுப்புகள் நடத்தும் சங்கீதா ராஜா, அதன் சிறப்புகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
""கருவிலிருக்கும்போதே குழந்தைக்கும் தாய்க்குமான இனிய உறவுகள் பூக்கத் தொடங்கிவிடுகின்றன. இந்த உறவுகளைப் பற்றிய தெளிவை கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு நாங்கள் அளிக்கிறோம்.
சக்கர வியூகத்திற்குள் சென்று போரிடும் முறையைத் தன் அம்மாவிடம் கிருஷ்ணன் சொல்வதை, கர்ப்பத்திலிருக்கும் அபிமன்யு கேட்டுத் தெரிந்து கொள்வதையும், கர்ப்பத்திலிருக்கும் போதே தன்னுடைய தாயின் மூலமாக நாராயண மந்திரத்தைத் தெரிந்து கொள்ளும் பிரகலாதனின் பக்தியையும் நம்முடைய புராணக் கதைகளின் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாயின் ஆரோக்கியமான மனநிலை முக்கியம்.
வெளிப்புறச் சூழ்நிலைகளின் தன்மையும் முக்கியம் என்பதை கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.
நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல், படபடப்பைக் குறைத்துக் கொள்ளுதல், மகிழ்ச்சியான மனநிலையில் இருத்தல் போன்றவை கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
தியானப் பயிற்சி, எளிமையான அதேசமயம் நம் உடலின் வளையும் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆசனப் பயிற்சிகள் போன்றவற்றைச் சொல்லித் தருகிறோம்.
உணவு முறைகளில், சைவ உணவுப் பழக்கம் இருப்பவர்கள், முருங்கைக் கீரை சூப், காய்கள், கனிகள், சர்க்கரைக்குப் பதிலாக பனங்கற்கண்டு பால், தயிர் மற்றும் தானிய வகைகள். ராகியைக் கொண்டு செய்யப்படும் புட்டு, தோசை , பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுப் பழக்கம் இருப்பவர்கள், ஆட்டு ஈரல், மீன், ஆட்டுக் கால் சூப் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தொடுதல், நுகர்தல், பார்த்தல், சுவைத்தல், கேட்டல் ஆகிய ஐம்புலன்களின் மூலமாக கருவிலிருக்கும் குழந்தையுடன் தாய் மானசீகமாக தொடர்பு கொள்ளும் பயிற்சிகளை அளிக்கிறோம். இதன் மூலம் குழந்தையின் மூளைச் செல்களின் செயல்திறன் எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கும். இதமான இசை, சுலோகங்கள் போன்றவற்றைக் கர்ப்பிணிப் பெண்கள் அன்றாடம் கேட்பதின் மூலம் அதன் பயன்கள் குழந்தைகளுக்கும் கிடைக்கும். தாயைப் பேசவைத்து அதைப் பதிவு செய்து தினமும் சிறிது நேரம் ஒலிபரப்பச் செய்கிறோம்.
கர்ப்பமடைந்து நூறு நாள்களான பெண்களுக்கு இந்தப் பயிற்சிகளை 18 வகுப்புகளில், குறைந்த கட்டணத்தில் அளிக்கிறோம். கணவனின் அன்பான ஆதரவு கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்ணின் கணவனையும் ஒரு வகுப்பில் வரவழைத்து அவருக்கும் சில ஆலோசனைகளை வழங்குகிறோம்.