விஞ்ஞானியா... மெய்ஞானியா..

பரபரப்பான முறையில் இவரை அறிமுகப்படுத்தலாம். இந்திரா காந்தியின் காவல் வட்டத்துக்குள் இருந்தே அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று முன்கூட்டியே சொன்னவர்.  இந்திராவுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அவரது மகன்
விஞ்ஞானியா... மெய்ஞானியா..
Published on
Updated on
4 min read

பரபரப்பான முறையில் இவரை அறிமுகப்படுத்தலாம். இந்திரா காந்தியின் காவல் வட்டத்துக்குள் இருந்தே அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று முன்கூட்டியே சொன்னவர்.  இந்திராவுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அவரது மகன் ராஜீவ் காந்தி அகாலமாக தமிழக மண்ணில் மடிவார் என்று முன்கூட்டிச் சொன்னவர்.

அவரை அரசியலில் வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த

வி.பி.சிங்கின் பதவிக் காலத்தை சரியாகக் கணித்தவர்.  இதுபோன்ற விந்தையான உலக விஷயங்களைச் சொல்பவராகவும், அதே சமயம், மனிதனைக் கண்டு இரங்குகிற ஆன்மிக விஷயங்களைக் குறித்து சிந்திப்பவராகவும் பன்முகம் கொண்டவர்

போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஆர்.கே.எஸ்.முத்துகிருஷ்ணன்.

பொருள்களின் மூன்று பரிமாணங்களைக் கோடுகளில் அடக்கிவிடும் பொறியியல் படங்களை உருவாக்கும் டிராஃப்ட்ஸ்மன் படிப்பை வாழ்க்கையை நடத்துவதற்காகப் படித்தார். அது ஏன்?

அது ஒரு நிமித்தமாக இருக்கலாம். வடிவங்களுடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பின் தொடக்கம் அதுவாக இருக்கலாம். அல்லது விட்டுப்போன ஏதோ ஒரு முன் ஜன்மத்தின் மறு தொடர்ச்சியாக இருக்கலாம்.

எதுவானாலும் சரி, முத்துகிருஷ்ணனின் தேடல் தொடங்கிவிட்டது. அவருக்கு எதிர்காலத்தைக் குறித்துச் சொல்லும் பாரம்பரியம் உண்டு. இவர் வாக்கு விட்டால் பலிக்கும் எனும் குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர்.

தொழிலகங்களுக்குப் பொறியியல் படங்கள் வரைவதோடு அவர் மனம் அமைதியடையவில்லை. அவருடைய தேடல் அவரைப் பல ஊர்களுக்குக் கொண்டு சென்றது.

""நாம் தேடுவது எப்படியும் நமக்குக் கிடைத்துவிடும்'' என்று அடித்துச் சொல்கிறார் முத்துகிருஷ்ணன்.

""இல்லையென்றால், எங்கோ ஒரு சிற்றூரிலிருந்து குடிபெயர்ந்து, சென்னை வந்து மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலில் அடங்கி உட்கார்ந்திருந்தவனைத் தேடி ஓர் ஆங்கில தினசரியின் காகிதத் துண்டு ஏன் பறந்து வர வேண்டும்? அந்தப் பழைய துண்டுப் பேப்பரில் ஏன் ஸ்ரீசக்ரம் பற்றிய செய்தி வெளியாகியிருக்க வேண்டும்? என்னை அலைக்கழித்து வந்த வடிவமில்லாத சக்திதான், அன்று அந்த ஸ்ரீசக்ரமாக வடிவு கொண்டது,'' என வியக்கிறார்.

இன்று ஸ்ரீசக்ரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான அவருடைய ஹய்ற்ட்ழ்ர்-க்ஷண்ர்ம்ங்ற்ழ்ண்ஸ்ரீ ள்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் முத்துகிருஷ்ணனை உலகுக்குப் பரிச்சயமானவராக ஆக்கியுள்ளது.  கபாலி குடிகொண்ட சந்நிதியில் ஸ்ரீசக்ரத்தைக் குறித்து என் தேடல் தொடங்கியது என்கிறார் முத்துகிருஷ்ணன்.

அது ஆன்மிகத் தேடலாக மலர்ந்தது.

""அதற்கு முன்பு ஸ்ரீசக்ரம் பற்றி எனக்குத் தெரியாது. அன்று மயிலைக் கோயிலில்தான் அதை முதலில் கண்டேன். அது குறித்து ஆராயத் தொடங்கினேன். ஜியாமெட்ரிக்குக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற சிந்தனை வந்தது. அடுத்ததாக ஜியாமெட்ரிக்குக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன எனும் தீவிர சிந்தனை எழுந்தது.

அந்தச் சிந்தனைதான் மனித உலகமே ஜியாமெட்ரியில் அடங்கியிருக்கிறது என்ற முடிவுக்கு என்னை அழைத்துச் சென்றது.''

அனைத்துவித வடிவங்களும் அவருடைய சிந்தனை முழுவதும் நிறைந்திருந்தபோது, எகிப்திய பிரமிடுகள் குறித்து அவருக்கு எழுந்த ஒரு கேள்வி - பிரமிடுகள் ஏன் அந்தக் குறிப்பிட்ட வடிவில் உள்ளன?

""1997-ம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் எகிப்துக்குப் பயணமானேன். பிரம்மாண்டமான பிரமிடுகளைப் பார்த்தேன். அவற்றை நேரில் கண்டதும் மின்னல் போல அதன் பொருள் எனக்கு விளங்கியது. பிரமிடுகள் எழுப்பப்பட்ட காரணத்தின் சூட்சுமம் புரிந்தது.

பரந்த அடிப் பகுதி; மேல் பகுதி அண்டவெளியை நோக்கி உயர்ந்து குவிந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் வாயில்கள். பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் வடிவமே பிரமிட். பிரபஞ்சத்தின் சக்திகளை ஈர்த்து மனிதனுக்குத் தருவதற்காக எழுந்தவைதான் இந்தப் பிரமிடுகள் என்று எனக்குத் தெளிவாகியது.''

பிரமிடுகளை நேரில் கண்ட பின்பு அதன் பரிமாணங்கள் அவர் சிந்தனைகளின் மீது புதிய வெளிச்சத்தை வீசியது. மனிதர்களைக் குறித்து சிந்தித்ததைக் கடந்து, மனிதன் இடம்பெறும் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.

""உலகம் என்பது என்ன என்ற கேள்வி எழுந்தது. உலகில் என்னுடைய பங்கு என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.  பிரமிட்டின் புதிர் விடுபட்டதும் அடுத்த கட்டமாக என் சிந்தனை ஸ்ரீசக்ரத்தின் கோட்டு வடிவங்களின் மேல் தாவியது.

இந்தியாவில் நம் முன்னோர்கள் ஸ்ரீசக்ரம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். ஸ்ரீசக்ரத்துக்கு நடுவே பிந்து என்கிற மையப் புள்ளி இருக்கும். அதைச் சுற்றியுள்ள முக்கோணங்களுக்கு வெளியே நான்கு வாயில்கள் இருக்கும். வெளிக் கட்டத்துக்கு அப்பால் உள்ளது பிரபஞ்சத்தின் குழப்ப நிலை. மையப்புள்ளி அமைதியைக் குறிக்கும். தியான சிந்தனை மையப் புள்ளியை நோக்கி இருக்கும் எனப்படுகிறது...

பிரமிடுகளின் அளவு, பரிமாணங்கள் ஸ்ரீசக்ரத்தில் உள்ள கணக்குகளோடு ஒத்துப் போவதைக் கண்டேன்.  ஸ்ரீசக்ரம் என்பது இந்தியாவுக்கான விஷயம் மட்டுமல்ல, இது உலக விஞ்ஞானம். இது ஒரு புளூ பிரிண்ட். கட்டடம் எழுப்புவதற்கான வரைபடம் இந்த ஸ்ரீசக்ரம். எகிப்திய பிரமிடுகள்தான் கட்டடம். இந்தக் கோடுகளிடையே ஒரு கட்டடம் இருக்கக் கூடுமானால், உலகம் என்கிற பெரும் பெüதிகப் பொருளும்கூட இந்தக் கோடுகளில் அடங்க இயலுமே என்பதாக என் சிந்தனை திரும்பியது.''

அவருடைய சிந்தனை ஆராய்ச்சியாக மாறியது. அந்த ஆராய்ச்சியின் பலன்தான் அவர் கண்டெய்திய ஆந்த்ரோ-பயோமெட்ரிக் ஸயன்ஸ். ஆதிகால மனித கணித இயல்.

அது என்ன ஆந்த்ரோ-பயோமெட்ரிக் ஸயன்ஸ் என்கிற ஆதிகால மனித கணித இயல். இது ஏதாவது புதிய விஞ்ஞானமா? கேட்டால், நிதானமாகப் பதிலளிக்கிறார்.

""முதலில் ஒன்றை நான் தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் உருவாக்கிய புதிய விஞ்ஞானம் அல்ல இது. இது ஏற்கெனவே இருந்தது. அந்த என்றுமுள்ள விஞ்ஞானத்தைச் சுட்டிக்காட்டுபவன் நான், அவ்வளவுதான். இந்த ஆதிமனித கணித இயலின்படி, ஒரு மனிதனின் வாழ்வின் கட்டங்களை பொற்காலம், வெள்ளிக் காலம், தாமிரக் காலம், கரி காலம் என வகுத்துப் பார்க்கலாம் என்பது என் 30 வருட கால ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு.

எல்லோருடைய வாழ்விலும் பொற்காலம் என ஒரு சிறு காலம் வரலாம். ஆனால்,   ஆதிமனித கணித இயல் மூலம் அந்தப் பொற்கால சக்தியை நீண்ட கால அளவுக்கு 100 சதவீதம் பலன் காண வைக்க முடியும். சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள அரசியல்வாதியோ, தொழிலதிபரோ இவ்வாறு முழுப்பலன் அடைந்தால் அந்தச் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட நன்மைகளைத் தரும் என்பதை நீங்கள் உணரலாம். மறைந்து இருந்த ஆந்த்ரோ-பயோமெட்ரிக் ஸயன்ஸ் என்கிற ஆதிமனித கணித இயல் என் தேடலில் - ஆய்வில் கண்டெய்தியதாகும். இது யந்திரம் போன்றதல்ல.

மனிதனின் வாழ்வில் கணித வடிவங்கள் மாபெரும் பங்கு வகிக்கின்றன. இந்த விஞ்ஞானத்தில் வண்ணங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

குறிப்பிட்ட வடிவங்களையும் வண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டு நான் சில ஓவியங்களை உருவாக்குகிறேன். ஒவ்வொருவரின் தேவைக்கேற்ற முறையில் உருவாக்கும் ஓவியம் இது. இந்த ஓவியம் அதிர்வுகளை உருவாக்குகிறது. அது ஒருவரது வாழ்வில் தொடர்ந்து பாசிடிவான, சாதகமான   தாக்கத்தை தந்து கொண்டிருக்கும்.

 பொற்காலம் நீண்டிருக்க வேண்டுமானால் அதற்கென பிரத்தியேக வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட  கார்ப்பரேட் பெயிண்டிங் உருவாக்கப்பட வேண்டும். இது பொத்தம்பொதுவாக உருவாகும் மாஸ் ஆர்ட் அல்ல.

 ஒருவர் உதவி நாடி என்னை அணுகும்போது அவரது காலத்தின் குறியீடான பிறந்த எண்ணை வைத்து அவரைப் பற்றிய சிந்தனை தொடங்குகிறது. எண்களும் வடிவங்கள்தானே!

 காஸ்மிக் பெயிண்டிங் எனும் பிரபஞ்ச ஒவியம் ஒருவரிடத்தில் இருந்தால் கரி காலத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம். 

இதிலும் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக வண்ணங்கள், வடிவங்களைக் கொண்டு ஓவியம் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப ஓவிய முறைகளும் மாறும். அளவுகளும் மாறும். வெறும் கார்ப்பரேட் ஓவியங்களையும் காஸ்மிக் ஓவியங்களையும் ஒருவர் வீட்டில் வைப்பதோடு இந்த விஞ்ஞானம் நிற்பதில்லை. கவுன்சலிங் டெக்னிக்குகள் சில உள்ளன. நீண்ட கால ஆலோசனை வழங்கும் முறையும் இதில் உண்டு. இதெல்லாம்

உள்ளடங்கியதுதான் ஆதிகால மனித கணித இயல்.

 பூமிக்கு அடியில் நீர் ஏற்கெனவே இருக்கிறது. நான் குழல் கிணறு போட்டு நீரை மேலே கொண்டு தருகிறேன். என் பணியின் பங்கு சமுதாயத்துக்கு இந்த விஞ்ஞானத்தைப் பகிர்ந்து அளிப்பதுதான். நான் ஒரு கருவி. நான் புதுசாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை.

 எண்களுக்கும் வடிவங்களுக்கும் எல்லை ஏது? பிரபஞ்சத்தின் எல்லையைக் கண்டுவிட முடியுமா! குருடன் யானையை விவரித்த கதை போலத்தான்! என் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது பற்றி புத்தகம் எழுதத் தொடங்கினேன். அது வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உலக அளவில் இதை விரிவுபடுத்த வேண்டும். 

தனி மனித வெற்றிக்கு அப்பால், ஒரு நாட்டின் தலைவர் இந்த ஆதிமனித கணித இயல்  முறையைப் பின்பற்றினால் அந்த நாடே செழிப்படையும் அல்லவா! ஒரு தேசத் தலைவரின் வெற்றி ஒரு நாட்டின் வெற்றியல்லவா!

  இந்த விஞ்ஞானத்தை நான் அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும்விதத்தில் சிந்திக்கத் தொடங்கியுள்ளேன். உலக மக்கள் மேன்மையடைய வேண்டும் என்பதே என் விருப்பம்!

  உதாரணமாக, இன்று பொருளாதாரத்தில் வல்லரசுகளாக உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் தலைவர்கள் இந்த ஆதி கணித இயலைப் பயன்படுத்தினார்கள் என்றால் உலகமே நன்மை அடையுமே!'' என்கிறார் இவர்.

மாய வடிவங்களை ஓயாமல் சிந்தித்து அலசிக் கொண்டிருக்கும் முத்துகிருஷ்ணன் ஒரு  விஞ்ஞானியா, இல்லை, மெய்ஞானியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.