கிராண்ட் ஸ்லாம் கனவு!

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டுத் திடல் வளாகம். அதன் ஒரு பகுதியாகத் திகழ்கின்ற டென்னிஸ் கோர்ட்டில் மூச்சிரைக்க, சக வீராங்கனைகளுடன் தீவ
கிராண்ட் ஸ்லாம் கனவு!
Published on
Updated on
2 min read

செ ன்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டுத் திடல் வளாகம். அதன் ஒரு பகுதியாகத் திகழ்கின்ற டென்னிஸ் கோர்ட்டில் மூச்சிரைக்க, சக வீராங்கனைகளுடன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் சாய் சமிதா. நடப்பு ஆண்டில் தேசிய டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்த இளம் வீராங்கனை சென்னை மயிலாப்பூரில் உள்ள சில்ரன்ஸ் கார்டன் பெண்கள் மேனிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

 ""என் தாத்தா ஸ்ரீராம் ராஜூ பல்கலைக்கழகங்கள் அளவிலான டென்னிஸ் போட்டிகளில் ஆடியவர். அதனால் எனக்கு இயல்பாகவே இவ்விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே நான்காம் வகுப்பு படிக்கும்போதே, தமிழ்நாட்டின் மூத்த டென்னிஸ் பயிற்சியாளரான ஹிட்டன் ஜோஷி என்பவரிடம் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். ஒரு வருடப் பயிற்சிக்குப் பிறகு, 2004 - ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த 12 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். இதுதான் நான் கலந்து கொண்ட முதல் போட்டி. இப்போட்டியில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினேன். அந்த வயதில் மெச்சூரிட்டி இல்லை. எனவே தோல்வியடைந்ததும் அங்கேயே அழுது விட்டேன். இதுதான் என்னுடைய முதல் போட்டி அனுபவம். அதன்பிறகு, படிப்படியாக மாநில, தேசிய அளவிலான பல போட்டிகளில் ஆட ஆரம்பித்தேன். அவ்வாறு பல போட்டிகளில் பங்கு பெற ஆரம்பித்த பிறகு, 2006 - ம் ஆண்டில் 14 - வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில டென்னிஸ் போட்டியில், என்னை முதல் போட்டியில் தோற்கடித்த ஷர்மிளா என்பவரை நேர் செட்களில் தோற்கடித்தேன். அதே ஆண்டில் மும்பையில் நடந்த தேசிய டென்னிஸ் போட்டியில், முதன்முதலாகப் பங்கேற்று காலிறுதி வரை முன்னேறினேன். எனவே இந்த இரண்டு போட்டிகளையும் என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

 பயிற்சியாளர் ஹிட்டன் ஜோஷி கொடுக்கின்ற ஷெட்யூல்படிதான் என் பயிற்சி முறைகள் இருக்கின்றன. காலையில் மூன்று மணி நேரமும், மாலையில் இரண்டு மணி நேரமும் பயிற்சி செய்கிறேன். வார்ம் - அப், விரைவாக ஓடுதல், ஃபிட்னஸ்க்கான உடற்பயிற்சிகள், பென்ச் பிரஸ், தம்பல்ஸ் போன்ற வெயிட் டிரெயினிங் போன்றவை அடங்கும். இவற்றில், சக வீராங்கனைகளுடன் டென்னிஸ் ஆடுவது மிகவும் முக்கியமானது. வெயிட் டிரெயினிங் வாரத்தில் இரண்டு நாட்கள் இருக்கும். போட்டி நெருங்குகின்ற சமயங்களில் ஃபிட்னஸ்க்கான உடற்பயிற்சிகள், சர்வீஸ் போடுதல், நெட் அருகில் நின்றவாறு பந்தைத் தடுத்தல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவேன். இந்த சமயங்களில் வெயிட் டிரெயினிங் செய்வதைக் குறைத்து விடுவேன். ஏனென்றால் அதிக தடவை வெயிட் டிரெயினிங் செய்தால், உடம்பு இறுகி விடும்.

 இதுவரைக்கும் மாநிலப் போட்டிகளில் இருபத்தைந்து டிராபிகளையும், தேசியப் போட்டிகளில் பதினைந்து டிராபிகளையும் வென்றுள்ளேன். சர்வதேச அளவில், இன்டர்நேஷனல் டென்னிஸ் ஃபெடரேஷன் ஜூனியருக்காக நடத்தும் இரட்டையர் போட்டியில் அமெரிக்காவின் மேரிகா மெக்காவ் உடன் சேர்ந்து ஆடி இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளேன். நாங்கள் சேர்ந்து ஆடிய முதல் போட்டி 2009 - ஆம் ஆண்டில் சென்னையில் நடந்தது. இரண்டாவது போட்டி கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. இவற்றைத்தவிர, 2007, 2008 - ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் வழங்கிய "நம்பிக்கையூட்டும் இளம் வீராங்கனை' என்ற விருதினையும் பெற்றிருக்கிறேன். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சிறந்த டென்னிஸ் அகாதெமி இல்லை. இந்த விளையாட்டுக்கு நிறைய ஸ்பான்ஸர்கள் கிடைப்பதில்லை. தகுந்த வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் இல்லை. இதனால் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த விளையாட்டில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர்தான் என்னுடைய ரோல் மாடல். எந்த விளையாட்டாக இருந்தாலும், உடல் தகுதி, திறமை, டெக்னிக்ஸ் இவற்றால்தான் வெற்றி பெற முடியும். மாறாக, ஊக்க மருந்தினைப் பயன்படுத்துதல் என்பது மிகவும் மோசமான வழியாகும்.

 டென்னிஸ், படிப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவது என்பது சிரமமாக இல்லை. ஏனென்றால், இவ்விரண்டையும் ஆர்வத்துடன் செய்து வருகிறேன். என்னுடைய இந்த வெற்றிகளுக்குப் பின்னால் நான் படிக்கின்ற சில்ரன்ஸ் கார்டன் பள்ளி நிர்வாகிகளும், தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஆகியோருக்குப் பின் நீண்ட இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியைக் குறைப்பதும், பெண்களுக்கான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கோப்பையை வெல்வதும்தான் என்னுடைய எதிர்கால லட்சியம்'' என்றார்.

 பாலுவிஜயன்

 படம்: ஏ.எஸ்.கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.