Enable Javscript for better performance
அரசு மனது வைத்தால் முடியும்!- Dinamani

சுடச்சுட

  

  பி.ராஜலட்சுமிக்கு மல்லிகா (77), கமலா (74) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

  டி.பி.ராஜலட்சுமி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களுக்காக அவருடைய மூத்த மகள் மல்லிகாவை சென்னை தாம்பரத்திலுள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். கணவர் பூர்ணசந்திரனுடன் (84) வரவேற்றார். டி.பி.ராஜலட்சுமியின் மறு பிரதி போன்று தேஜஸýடன் தோற்றமளித்த மல்லிகா இனி மனம் திறக்கிறார்...  உங்கள் அம்மாவின் ஸ்பெஷாலிட்டி என நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

  அம்மாவின் போராட்டக் குணமும் எந்த விஷயத்தையும் துணிச்சலோடு கையாளும் தைரியமும் எங்களுக்குப் பிடிக்கும். அதைத் தவிர அவருடைய அழகும் தெளிவான உச்சரிப்புடன் பின்னணி இசையே இல்லாமல் தாள லயத்துடன் பாடும் திறனும் மிகவும் பிடிக்கும்.

  உங்கள் தாயார் எதுவரை படித்தார் என்பது தெரியுமா?

  ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தார். என் தாத்தா இறந்ததால் ஏற்பட்ட திடீர் வறுமை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடகத் துறைக்கு வந்ததாக அடிக்கடி சொல்வார். ஆனால் பல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார்.

  எந்த ஒரு விஷயத்தையும் விரைவாகக் கிரகித்துவிடுவார். அவருக்கு கலைவாணியின் அருள் அதிகம். அம்மா மட்டும் நன்கு படித்திருந்தால் இன்னும் பல மடங்கு சாதித்திருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

  உங்கள் தாயார் உங்களிடம் அடிக்கடி பகிர்ந்துகொண்ட விஷயம்...?

  யாழ்ப்பாணத்தில் நடந்த "ஹரிச்சந்திரா' நாடகத்தைப் பாத்துவிட்டு காந்தியடிகள் ஒரு பொம்மைப் புலியைப் பரிசாகக் கொடுத்ததை அடிக்கடி பெருமையாகக் கூறுவார். அதே போன்று தனது பிறந்த நாள் குறித்தும் பெருமைப்பட்டுக்கொள்வார். மற்றபடி சினிமா விஷயங்களைப் பற்றி அதிகமாக குடும்பத்தில் பேசமாட்டார்.

  ஆச்சாரமான ஆத்திகக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் உற்றார், உறவினரை எதிர்த்து தைரியமாக நாடகம், சினிமாவில் நடித்தவர் டி.பி.ராஜலட்சுமி. உங்களையோ உங்களுடைய சகோதரியையோ திரையுலகில் ஈடுபடுத்தவில்லையா?

  தன்னைத் தவிர தன்னுடைய குடும்பத்தினர் யாருமே சினிமாவில் இருக்கக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார் என் அம்மா. "நான்தான் குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்துவிட்டேன். படப்பிடிப்புக்காக பாம்பே, கல்கத்தா என அலைந்துகொண்டிருக்கிறேன்.

  இதெல்லாம் என்னோடு போகட்டும். நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும்' என்றுதான் எங்களை வளர்த்தார். ஆனால் என்னை நடிக்க வைக்கப் பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முன் வந்தனர். ஆனால் அம்மா சம்மதிக்கவில்லை.

  ஆனால் மிக எதேச்சையாக ஒரு சமயம் படப்பிடிப்புக்குச் சென்றபோது ஒரு குழந்தை நட்சத்திரம் இல்லாததால் வேறு வழியில்லாமல் "தமிழ்த்தாய்', "பக்தகுமணன்' ஆகிய இரண்டு படங்களில் நான் நடிக்க நேர்ந்தது.

  "பக்தகுமணன்' படத்தில் இப்போதுள்ள நடிகை லட்சுமியின் தாயார் ருக்மணிக்கு நான் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன் பிறகு அதுவே தொடர்ந்துவிடும் என்று கருதி படப்பிடிப்புக்குக் கூட அழைத்துச் செல்லமாட்டார். ஆனால் பல பிரபலங்கள் எங்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

  ஒரு சமயம் மதுரைக்குச் சென்றிருந்தபோது அம்மாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதைக் கேள்விப்பட்டு நேரில் வந்த டி.எம்.செüந்தரராஜன் என்னுடைய அம்மாவிடம் சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டார். என்னுடைய அம்மாவை "அக்கா' என்றுதான் பலரும் அன்போடு அழைப்பார்கள்.

  "மிஸ் கமலா' படத்தில் வித்வான் ராஜரத்தினம்பிள்ளை நாதஸ்வரம் வாசித்திருப்பார்.

  ஆனால் என் அம்மாவின் தொழில் பக்தி, தனி மனித ஒழுக்கம் ஆகியவற்றுக்காக சம்பளம் வாங்க மாட்டேன். இது அவருக்கு நான் செலுத்தும் மரியாதை என்று கூறினாராம். அந்த அளவில்தான் பலரும் என் அம்மாவிடம் அன்பு வைத்திருந்தனர்.

  நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம் பற்றி...?

  நான் பத்தாவது வரை படித்திருக்கிறேன். தங்கை கமலா முகப்பேரில் வசிக்கிறார். என் கணவர் பூர்ணசந்திரன். எனக்கு சாந்தி, பத்மினி, உஷா, ஆஷா என நான்கு மகள்கள் உள்ளனர். மகன் ரமேஷ்.

  6 பேத்திகள் 4 பேரன்கள் உள்ளனர். எல்லோரும் நன்கு படித்து நல்ல வசதியுடன் இருக்கிறார்கள்.

  இன்னொரு விஷயம்... உங்கள் தாயார் இறுதிக் காலத்தில் மிகவும் சிரமப்பட்டதாக சில தகவல்களும் செய்திகளும் உள்ளன. உண்மையா?

  நிச்சயமாக இல்லை. கடைசி வரை மிகவும் வசதியாகத்தான் வாழ்ந்தார். உடல் நலக் குறைவு காரணமாகத்தான் சோர்வே தவிர பண வசதிக்கு எந்தக் குறையும் இல்லை. அவர் இறப்பதற்கு முன்பே எங்களுக்குத் தேவையானவற்றைச் செய்துவிட்டார். மறைந்த பிறகும் சொத்துகள் இருந்தன.

  நாடகத்துறையிலும் சினிமாத்துறையிலும் வெற்றி ராணியாக பவனி வந்த உங்கள் தாயாரின் பெயரை சென்னையின் முக்கியச் சாலைக்குச் சூட்ட வேண்டும் என சில திரையுலகப் பிரமுகர்கள் கூறுவதைப் பற்றி..?

  நல்ல விஷயம்தான். ஆனால் எங்கள் குடும்பத்தார் சார்பில் சில விஷயங்களை முன் வைக்க விரும்புகிறோம். அது, தாயார் டி.பி.ராஜலட்சுமி பெயரில் ஒரு விருதை உருவாக்கி அதைக் கலையுலகில் சாதனை படைக்கும் பெண்களுக்கு வழங்கலாம்.

  தென்னிந்தியாவின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குநர் என்பதால் நடிகர் சங்கத்தில் அவருடைய புகைப்படத்தை வைக்க வேண்டும். அவருக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும். இவற்றுக்கெல்லாம் 100 சதவீதம் தகுதியானவர்தான் என் தாயார்.

  டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவான இந்த ஆண்டில் அரசு மனது வைத்தால் நல்லது நடக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai