தைல வண்ண ஓவியம், அக்ரலிக், கொலாஜ், மிக்ஸட் மீடியா, புகைப்படம் மற்றும் கிராபிக், டிஜிட்டல் நுட்பங்களைப் பயன்படுத்தி பதினாறு ஓவியர்களின் படைப்புகள் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி சென்னை, லலித்கலா அகாதெமியில் சமீபத்தில் நடந்தது. இந்தக் குழுக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தவர்கள் அனைவருமே பெண்கள். நடமாடும் ஓவியத் தூரிகைகளாய் அவர்கள் கண்காட்சியில் வளையவந்தபடி இருந்தனர். சில அரூப வகை ஓவியங்கள் கூறும் செய்திகளைப் பற்றியும் அந்த ஓவியத்தை வரையவேண்டும் என்று ஏன் தோன்றியது என்பது பற்றியும் அவர்கள் விளக்கியவிதமே கவிதையாக இருந்தது!
பதினாறு ஓவியர்களின் இந்த ஓவியக் கண்காட்சியை, கலை இயக்குநர் தோட்டா தரணி தொடங்கிவைத்து, ஒவ்வொரு கலைஞரின் படைப்புகளின் சிறப்புகள் பற்றி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
"ஃபைன் ஆர்ட் கோஷியன்ட்' என்னும் அமைப்பின் கீழ் பதினாறு ஓவியர்களையும் ஒருங்கிணைத்து இந்தக் கண்காட்சியை நடத்திய மாளவிகா வெங்கட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
""திருமணம், வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது போன்ற காரணங்களால் தங்களின் ஓவியத் திறமையில் கவனம் செலுத்தாமல் போகும் வாய்ப்பு ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் இருக்கிறது. அப்படிப்பட்ட இடைவெளியை நிரப்பும் ஓர் உத்தியாகத்தான் இந்தக் கண்காட்சியை நடத்த எண்ணினோம்'' என்றார் மாளவிகா. இவரும் ஓர் ஓவியரே. இவரின் கிருஷ்ணா, தாயும் சேயும் ஓவியங்கள் ஆன்மாவைத் தொடுகின்றன!
மிக்ஸட் மீடியத்தில் ஒருக்களித்து படுத்திருக்கும் புத்தரின் தோற்றத்தை நமக்கு தரிசனப்படுத்தியிருப்பவர் நிவேதிதா சிவபிரகாஷ்.
""தாய்லாந்தில் விதவிதமான தோற்றங்களில் புத்தரின் சிலைகளை நிறையப் பேர் பார்த்த அனுபவத்தைக் கூறியிருக்கின்றனர். நான் படுத்திருக்கும் மரத்தாலான புத்தர் சிலையை அமெரிக்காவில் ஒரு கலைப்பொருட்கள் விற்பனை மையத்தில் பார்த்தேன். எப்போதும் என் நினைவிலிருக்கும் இந்த உருவத்தை இந்தக் கண்காட்சியில் பங்கெடுப்பதற்கு பயன்படுத்திக் கொண்டேன்'' என்றார் நிவேதிதா.
பரதநாட்டியம், கதக், குச்சிபுடி, ஒடிஸி, மணிபுரி, குடியாட்டம், கதகளி போன்ற இந்திய நடன வடிவங்கள் அனைத்திலுமே நவரசங்கள் இருக்கின்றன. ஆனால் நவரசங்களுக்கும் உரிய நிறங்களைக் கொண்டு நவரச ஓவியமாகவே வடித்திருக்கிறார் சந்தியா ராவ்.
""நாட்டிய சாஸ்திரத்தில் சாந்தம்-வெள்ளை, வீரம்-ஆரஞ்சு, வெறுப்பு-நீலம், கருணை-சாம்பல், ஹாஸ்யம்-வெள்ளை, ரெüத்திரம்-சிவப்பு, அற்புதம்-மஞ்சள், சிருங்காரம்-பச்சை, பயங்கரம்-கருப்பு என ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு நிறம் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த நிறங்களைப் பயன்படுத்தி அரூப ஓவியமாக நவரசா என்னும் ஓவியத்தை வரைந்தேன்'' என்றார் சந்தியா.