ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம். வியன்னாவை மக்கள் அவர்கள் மொழியில் வியன் என்று கூறுகிறார்கள்.
வியன்னா சென்றடைந்தபோது அங்குள்ள பல கட்டடங்கள் மன்னர்கள் காலத்து பழைய கட்டடங்கள். அவற்றை நல்லமுறையில் புதுப்பித்து, அருங்காட்சியகம், வங்கி, அரசு அலுவலகங்கள், ஓட்டல் என்று வைத்துள்ளனர்.
இங்கு நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றைப் பார்த்தோம். குன்ஸ் சரித்திர அருங்காட்சியகம், தேசிய அருங்காட்சியகம், வியன்னா அருங்காட்சியகம், வியன்னா மருத்துவ அருங்காட்சியகம் போன்றவற்றைப் பார்த்தோம்.
சரித்திர அருங்காட்சியகம் அருமையான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. மன்னர்களின் வாழ்க்கை முறைகள், அவர்கள் உபயோகப்படுத்திய ஆடை, ஆபரணங்கள், பாத்திரங்கள், நாணயங்கள் போன்றவற்றையும் வைத்திருக்கிறார்கள். கிரேக்கம், ரோமானியம், எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் பழங்கால வாழ்க்கை முறைகள், நாணயங்கள் குறித்த தகவல்களும் அங்கு பத்திரப்படுத்தப்பட்டிருந்தன.
வியன்னா வேலைப்பாடுகளுடன் அமைந்த தேவாலயங்கள், இசை மேதை பீத்தோவன் வாழ்ந்து, மறைந்த இல்லம், ஸ்கான் பூருன் அரண்மனை, ஹாப்ஸ் பர்க் அரண்மனை என்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஸ்கான் புரூன் அரண்மனை பாரீஸில் உள்ள செல் அரண்மனையை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட அரண்மனை.
18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சம்மர் அரண்மனை, அங்கு மன்னர்கள் வாழ்ந்தபோது உபயோகப்படுத்திய பொருட்கள், ஓவியங்கள் போன்றவை நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரண்மனையைச் சுற்றிலும் மிருகக்காட்சி சாலை, விதவிதமான தோட்டங்கள் ஆகியவை அரண்மனையை அலங்கரிக்கின்றன. மன்னர்கள் உபயோகப்படுத்திய கோச்சுகள் உள்ள அருங்காட்சியகம் சுமார் 130 ஆண்டுகள் பழமையானது. அங்கே வெப்பமண்டல தாவரவியல் பூங்கா உள்ளது. தாவரவியல் பூங்காவில் மேலே கண்ணாடி போட்டு பெரிய கட்டடமாக வைத்துள்ளனர். நம்ம ஊர் வாழை, மல்லிகை போன்ற வகைகளும் உள்ளன. பொம்மலாட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள தனியாகவே ஓர் இடம் உள்ளது. அங்கு நடந்த ஒரு பொம்மலாட்டக் காட்சியைப் பார்த்து ரசித்தோம். தீய சக்தியை விரட்டி, நல்ல சக்தி எப்படி எல்லோரையும் ஒன்று சேர்க்கிறது என்பதை ஒரு கதையாக அரங்கேற்றினார்கள்.
ஹாப்ஸ் பர்க், மன்னர்களின் குளிர்கால அரண்மனை. இப்போது அதில் நிறைய அருங்காட்சியகங்கள், ஒரு தேவாலயம், ஒரு சிறிய பிரார்த்தனை அறை, ஆஸ்திரியா தேசிய நூலகம், ஆஸ்திரியா ஜனாதிபதியின் அலுவலகங்கள் உள்ளன. நூலகத்தில் 2 லட்சம் பழம்பெரும் புத்தகங்கள் உள்ளன. பொக்கிஷ அருங்காட்சியகத்தில் மன்னர்களின் ஆடை ஆபரணங்கள், அவர்கள் பயன்படுத்திய வெள்ளி, தங்க பாத்திரங்கள், போர்சளின் பீங்கான் பாத்திரங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
வின்டர் ரைடிங் ஸ்கூலில், பியோனோ வாசிப்புக்கு ஏற்ப நடனம் ஆடும் குதிரைகளைப் பார்க்கலாம். மருத்துவ அருங்காட்சியகத்தில் பழங்காலத்து வைத்திய முறைகளில் இருந்து எப்படி படிப்படியாக வைத்தியத் துறை முன்னேறியது என்பது பற்றி விளக்க மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன.
வியன்னாவைச் சுற்றிப் பார்க்கும்போது, நம்முடைய மனமும் சரித்திர காலத்துக்குச் சென்றுவிடுகிறது என்றால் மிகை அல்ல. பழமையை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.