வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருப்புகழில் ராமாயணம்!

திருப்புகழை நாடெங்கும் பரப்பிய பெருமை உடைய வள்ளிமலை

News image
Updated On :17 நவம்பர் 2012, 11:41 am

சாருகேசி

திருப்புகழை நாடெங்கும் பரப்பிய பெருமை உடைய வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் வாழ்க்கையில் ஒரு பாடல் நீங்காத இடம் பெற்றது. சுவாமிகள் வட நாட்டு யாத்திரை சென்றபோது, அயோத்தி சென்று ராமரை தரிசனம் செய்தார். வயிற்றுப் பசியுடன் போராடிக்கொண்டிருந்த ஓர் உச்சிவேளைப் போதில், மரத்தடியில் அமர்ந்திருந்தார். அண்ணாந்து பார்த்தபோது, மரத்தில் நிறையக் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன.

எனவே அவருக்கு "வஞ்சம் கொண்டுந்திட ராவண' என்ற பாடல் நினைவுக்கு வரவே, வாய்விட்டுப் பாடினார் சுவாமிகள்.  "குரங்கும் துஞ்சும் கனல் போல் வெகுண்டும் குன்றும் கரடார் மரமதும் வீசி' என்ற வரிகளைப் பாடியபோதுதான் குரங்குகள் சடசடவென்று இறங்கி ஓடின.

சற்றுத் தொலைவில் சில வட இந்தியப் பயணிகள் சுட்டுக்கொண்டிருந்த ரொட்டிகள் சிலவற்றை எடுத்துவந்து அவரருகில் வீசிவிட்டுச் சென்றன. குரங்குகளைத் துரத்திக்கொண்டு வந்த பயணிகள், ஒரு சாது ரொட்டி சாப்பிடுவதைக் கண்டு திரும்பிப் போய்விட்டனர்.  அன்றைய தினம் "ஸ்ரீராம நவமி' என்கிறார் திருப்புகழைப் பரப்புவதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பத் தலைவி சித்ரா மூர்த்தி. 

சமீபத்தில் அவர் "திருப்புகழில் ராமாயணம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு செய்த போது, அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மை மட்டுமல்லாது, அவருக்குத் தமிழின்பால் இருந்த பற்றும் வெளிப்பட்டது. இத்தனைக்கும் முப்பது ஆண்டுகள் தில்லியில் வாழ்ந்தவர் சித்ரா மூர்த்தி. அவர் சொற்பொழிவு செய்த நாள் அருணகிரியாரின் மூல நட்சத்திரத் திருநாள். முருகனுக்கு உகந்த சஷ்டி திதி. 

""தில்லி வாழ்க்கைதான் அறிஞர் ஏ.எஸ். ராகவனை எங்களுக்கு குருஜியாகப் பெறும் வாய்ப்பை அளித்தது. அங்கே அவர் நடத்தும் திருப்புகழ் வகுப்புகள், திருப்புகழ் சொற்பொழிவுகள், விழாக்கள் எல்லாவற்றிலும் கலந்துகொள்ள நேர்ந்ததால், அருணகிரிநாதரின் திருப்புகழை அள்ளி அள்ளிப் பருக முடிந்தது.  அதுவுமல்லாமல், என் கணவர் மூர்த்தியும், அவர் தாயாரும், சகோதரர்களும் திருப்புகழில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். நானும் இந்தத் திருப்புகழ் கோஷ்டியில் சேர்ந்தேன்.  என் மாமியார் மற்றும் கணவரின் உந்துதல்கள் மேலும் மேலும் என் ஆர்வத்தைத் தூண்டின. திருப்புகழ் என்னை அணைத்துக்கொண்டது என்கிறார்'' சித்ரா மூர்த்தி. 

கோவையில் சில ஆண்டுகளுக்கு முன், வசதியான முதியோர் வசிக்கும் காலனி ஒன்றில் முதன் முதலாகத் திருப்புகழ் பற்றிப் பேசினார் சித்ரா மூர்த்தி. ஒரு பாடலைச் சொல்லிவிட்டு, அதற்குப் பொருத்தமான கதையொன்றையும் இணைத்துச் சொன்ன போது அந்தப் பெரியவர்கள் நன்றாக ரசித்தார்களாம்.  தன்னுடைய சொற்பொழிவு முயற்சிக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்டது என்கிறார் சித்ரா. 

தில்லியிலிருந்து சென்னை திரும்பிய பிறகு, திருப்புகழில் ஆழ்ந்து தோய்ந்த திருப்புகழ் அடியார் நடராஜன் அவர்களைச் சந்தித்து, அவர் தரும் அபூர்வமான குறிப்புகளைத் தம் சொற்பொழிவுகளில் குறிப்பிட இவர் மறப்பதில்லை.  புலவர் செங்கல்வராயப் பிள்ளை அவர்களின் நூல்களும் அருணகிரியாரின் படைப்புகளைப் புரிந்துகொண்டு ரசிக்க சித்ராவுக்குத் துணையாக இருந்தனவாம்.

திருப்புகழில் முழு ராமாயணமுமே இருக்கிறது என்பது சித்ரா ராமமூர்த்தி சொல்லும் உண்மை. அருணகிரியார் பாடிய 16000 பாடல்களில் நமக்குக் கிடைத்திருப்பவை சுமார் 1325.  அவற்றுள் ராமனைப் பற்றி மட்டுமே சுமார் 160 பாடல்கள் இருக்கின்றன. சைவ-வைணவ சமரசக் கொள்கையைப் பரப்ப அருணகிரியார் எடுத்துக் கொண்டது திருமால் மகிமை. ஆனால் அவர் வரங்கள் கேட்பது முருகனிடம் மட்டுமே!

சித்ரா மூர்த்தியின் ஆய்வுப்படி, "முத்தைத் தரு பத்தித் திருநகையிலேயே, பத்துத்தலை தத்தக் கணைதொடு'  என்ற பாடலில் ராவணன் பற்றிக் கூறிவிடுகிறார்.  எந்தை வருக, ரகுநாயக வருக, மைந்த வருக, மகனேயினி வருக, என் கண் வருக, எனதாருயிர் வருக, அபிராம வருக என்று கோசலை ராமரைக் குழந்தையாக வரவேற்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 

மகா பெரியவர் கூறுவதுண்டு, ஒரு எஜமானன் கட்டளை இடுவது போல் பேசுவது வேதம்.  இது பிரபு சம்மிதை. நீதிமானான நண்பன், தர்மத்தைச் சற்று வெளிப்படையாக வலியுறுத்துவது போன்று கூறினால் அது ஸஹ்ருத் சம்மிதை. இவ்விரண்டையும் விட இதமாயும், மதுரமாகவும் தர்மத்தை சர்க்கரையில் தோய்த்துச் சொல்லும்போது அது காந்த சம்மிதை. அது பிரியமான பத்தினியின் வாக்குப் போன்றது. உண்மைக் கவிஞன் வெறும் ரஞ்சகமாக மட்டுமில்லாமல், அதற்குள் தர்மமான பயனும் இருக்கிற மாதிரி எழுத வேண்டும் என்கிறார். இம்மூன்று சம்மிதைகளும் சேர்ந்து இருக்கும் நூல்கள்தான் திருப்புகழும் ராமாயணமும் என்கிறார்.

தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றில் வைஷ்ணோதேவி கோயில் பற்றியும், இறை சம்பந்தமான தகவல்களையும் கட்டுரைகளாக எழுதிக்கொண்டிருந்த சித்ரா மூர்த்திக்கு, இப்போது சொற்பொழிவுகள் மூலமும் நல்ல வரவேற்பு கிடைப்பதில் வியப்பெதுவும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.