இரண்டு நாடகங்கள்

"சிரத்தா' நாடகக் குழுவின் "அஸ்திரம்' இன்றைய இந்தியாவின் பழைய கிராமம் ஒன்றில்

"சிரத்தா' நாடகக் குழுவின் "அஸ்திரம்' இன்றைய இந்தியாவின் பழைய கிராமம் ஒன்றில் நடக்கிற நவீன நிகழ்வு.  எனவே கிராமத்து வீடு, பக்கத்து வீடு, அடுத்த வீடு என்று மேடை முழுக்க கிராமத்தின் ஒரு சிறு பகுதி பளிச்சென்று தெரிகிறது. தபால்காரர், காவல்காரர் எல்லோரும் சைக்கிளில் வந்து போகிற அளவுக்கு டீப் செட்.  (மோகன் பாபுவுக்கும், விஜயகுமாருக்கும் சபாஷ் போடலாம்.)

இந்த கிராமத்தில், அஸ்வின், சூர்யா என்ற இரண்டு தீவிரவாதிகள் வந்து ஒரு வீட்டில் தங்குகிறார்கள். பெரியசாமி தேவரின் எண்ணெய் ஆலையில் நடக்கும் ரெசின் (ஒரு வகை விஷம்) ஆராய்ச்சியில் உள்ள ரகசியத்தைக் கண்டுபிடித்து, கிராமத்துக் குளத்தில் விஷத்தைக் கலந்து அப்பாவி மக்களைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறான் அஸ்வின். இதற்கு உதவ, சூர்யா என்ற கெமிக்கல் இஞ்சினீயரைக் கடத்திக்கொண்டு வந்து, அவனை மனவளர்ச்சி குன்றிய தன் சகோதரனாக நடிக்க வைக்கிறான்.

ரெசினுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர் அலியும், அவருக்கு உதவியாக சந்துருவும் இன்னொரு வீட்டில் குடியிருப்பதுதான், தீவிரவாதி அஸ்வின் அந்த கிராமத்துக்கு வரக் காரணம்.

பெரியசாமித் தேவர் பிராமணப் பெண்ணைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டிருப்பதாகக் கதையில் கொண்டுவந்திருப்பதால், அவ்வப்போது அவருடைய அசைவ உணவு ஆசையைத் தீர்க்க பூக்காரியை நுழைத்திருக்கிறார் கதாசிரியர் விவேக் சங்கர். அதை ஆமோதிக்கிற பிராமண மனைவியாக அன்னம்மா. அவர்களின் வளர்ப்பு மகள், பள்ளிக்கூட மாணவி மீரா என்று பாத்திரங்களுக்குப் பஞ்சமேயில்லை.  கூடவே கலகலப்புக்கு காத்தாடி ராமமூர்த்தி சேதுவாக வந்து, அவருக்கே உரித்தான பாணி நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார். 

அந்த கிராமத்தில் தேவரின் பெண்ணைப் பாராட்டுவதற்காக டாக்டர் கலாம் வரும்போது, அவரிடம் தம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஆராய்ச்சியாளர் அலி காத்திருக்கிறார். மிடுக்கான போலீஸ் இன்ஸ்பெக்டர், மற்றும் சைக்கிளில் வந்து கண்காணிக்கும் கான்ஸ்டபிள் என்று கதை அமைந்திருந்தாலும் ஒரு சிறு கிராமத்தில் புதிய நபர்களின் வருகை, போலீசின் நடமாட்டம் எல்லாம் பரபரப்பை உண்டாக்காதா என்று கேள்வி எழலாம். ஆனால் நாடகத்தின் வட்டத்துக்குள் அதை எல்லாம் கொண்டுவந்தால் கதையின் மையக் கருத்து சிதறிப் போய்விடக் கூடும் என்று கதாசிரியர் காரணம் சொல்லக்கூடும்.

கிராமத்தில் எல்லாம் ஆராய்ச்சி நடக்குமா என்பது அடுத்து எழும் இன்னொரு கேள்வி. கிராமங்களில் ஆராய்ச்சி நடக்கக்கூடாது என்று ஒதுக்கிவிட முடியுமோ?

ஆனால் நாடகம் அதன் போக்கிலேயே தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. வெட்டு ஒன்று - துண்டு இரண்டு என்று கதையும் வசனமும் இருந்துவிட்டால் பிரச்னைக்கே இடமில்லை. விவேக் சங்கர் இதைப் புரிந்துகொண்டிருப்பார். "சிரத்தா' தன் முதல் நாடகமான "தனுஷ்கோடி'யில் ரசிகர்களிடம் ஏற்படுத்திய பிரமிப்பை மீண்டும் உண்டாக்க வேண்டுமானால், அடுத்து அழுத்தமான கதையோடு விவேக் சங்கர் மேடை ஏற வேண்டும்.

"ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்' வழங்கிய "பிள்ளையார் பிடிக்க...' வெகு நாட்களுக்குப் பிறகு, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற நகைச்சுவை நாடகம். நாடகாசிரியர்-இயக்குநர் எஸ்.எல். நாணுவும் காத்தாடி ராமமூர்த்தியும் கைகோர்த்துக்கொண்டால், மேடையில் நகைச்சுவை அதிர்வேட்டுத்தான்!

இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது நாடகத்தின் கரு. முன்பு பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டத்தை, இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் செய்வதாக உல்டா பண்ணியிருப்பது மட்டுமல்ல, அதில் நகைச்சுவையை வெகு இயல்பாக வாரி வழங்கி இருக்கிறாரே நாணு, அங்கேதான் அவருடைய நகைச்சுவை உணர்வு பளிச்சிடுகிறது. நகைச்சுவைக்கு மிகைப்படுத்தல் கொஞ்சம் அவசியம்தான்.  ஆனால்  மிகையும் இல்லாமல், படுத்தலும் இல்லாமல் தன் நகைச்சுவையை அதிரடியாக அள்ளித் தந்திருக்கிறார் நாணு.

முதலில், பெண்ணைப் பெற்ற கருப்பூர் வைத்தியராக வருபவர் (ஸ்ரீதர்) அடிக்கிற கூத்து அரங்கை அதிர வைக்கிறது.  பின்னர் சுரேஷ் (மகேசுவர்) தன் நிறுவனத்தில் வேலை தேடி வரும் நந்தினியை (ஜெயந்தி) விரும்புவதை அறிந்து, அவள் தந்தை கணேசனிடம் சுரேஷின் விருப்பத்தைத் தெரிவித்து சம்மதம் பெற, உறவினர் செம்பூர் செல்லப்பாவை (நாணு) அனுப்பி வைக்கிறார் தந்தை சிவராமன் (காத்தாடி).  எப்படியாவது சுரேஷுக்கு கல்யாணம் நடந்தால் போதும் என்று,  நந்தினி போடும் கண்டிஷனுக்கெல்லாம் தலையாட்டிவிட்டு வந்து நிற்கிறார் செம்பூர் செல்லப்பா.

அதில்  ஒரு கண்டிஷன், பையனுக்கு அப்பா-அம்மா இருக்கக்கூடாது. தந்தை சிவராமனை சித்தப்பா என்றும், அவர் மனைவி லலிதாவை (ஹேமலதா) சித்தி என்றும் சொல்லிவிட்டு, பின்னர் ஓர் இக்கட்டான கட்டத்தில், திடீரென்று வந்து நிற்கும் கருப்பூர் வைத்தியிடம் சிவராமன் மாட்டிக்கொண்டு முழிக்கிறாரே, அங்கே நகைச்சுவை ரகளைதான் நாணு எழுதிய அந்த சிரிப்பு வெடிகளை சர வெடிகளாக காத்தாடி வெடிக்கும் அந்தக் காட்சி, அசல் நகைச்சுவை விருந்து.

நந்தினியின் தந்தை கணேசன் (முரளி) மதுரை மணியின் ரசிகர் என்று காட்டி, ஒரு சின்ன கேரக்டரை உருவாக்கியிருப்பதுடன், அங்கங்கே மதுரை மணியின் குரலையும் கேட்க வாய்ப்புத் தந்திருப்பதை வரவேற்கலாம். இதில் உள் அடக்கமான நகைச்சுவையும் நாசுக்காக இருக்கிறது. சுரேஷைத் திருமணம் செய்துகொள்ள நந்தினி ஒரு கட்டத்தில் சம்மதித்தாலும், பிறகு அவள், பிள்ளைக்கு அப்பா-அம்மா இருக்கக்கூடாது என்று தான் போட்ட கண்டிஷனுக்காக சித்தப்பா-சித்தி என்று சுரேஷின் வீட்டில் நாடகமாடியதை அறிந்த பின், திருமணத்துக்கு மறுத்துவிடுகிறாள். (சஸ்பென்சுக்கு நாணு தன் செல்லப்பா பாத்திரம் மூலம் ஒரு சிறு சம்பவத்தை நுழைத்திருப்பதை இங்கே போட்டு உடைத்துவிடக் கூடாது.  அது தர்மமல்ல.) ஆனால் இறுதியில் நந்தினி மனம் மாறி  சுரேஷைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்.       

சிச்சுவேஷன் ஹ்யூமர், வசனத்தில் ஹ்யூமர் இரண்டுமே ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு மாறி மாறி வருகையில் யோசிக்கவே இடம் இல்லாமல் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது பாருங்கள், அங்கெல்லாம் நாடகாசியர் நாணுவும் நாடகப் பாத்திரங்களும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். பண்பட்ட நடிகர் டிடிஎஸ் நாடக இயக்கத்தின் மேற்பார்வைப் பொறுப்பைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com