Enable Javscript for better performance
கீழ்கோதாவரியில் ஒரு சுற்றுலா- Dinamani

சுடச்சுட

  

  கீழ்கோதாவரியில் ஒரு சுற்றுலா

  By - மு.ஸ்ரீனிவாஸன்  |   Published on : 21st December 2012 02:09 PM  |   அ+அ அ-   |    |  

  ஆறுகள் நமக்கு வாழ்வாதாரம். அவை நமக்குப் புனிதமானவை. அவற்றின் கரைகளெங்கும் ஆலயங்கள். அப்படிப்பட்ட ஒரு நதி கோதாவரி. புனிதத்தில் அது கங்கைக்கு ஒப்பாக தட்சிண கங்கை என்று அழைக்கப்படுகிறது. கோதாவரி மகாராஷ்டிரத்தில் த்ரயம்பக் ஜோதிர் லிங்கத் தலத்திற்கு அருகிலுள்ள பிரம்மகிரியில் உற்பத்தியாகி, அங்கிருந்து இறங்கி நாசிக் வழியாகக் கிழக்கு நோக்கி 800-900 மைல்கள் ஓடிக் கடலில் கலக்கிறது. அதைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் பூரண அழகை பத்ராசலத்திலிருந்துதான் காண முடியும். அங்கிருந்து ராஜமுந்திரி வரை அகண்ட கோதாவரி. அதன்பிறகு பற்பல கிளைகளாகப் பிரிந்து கோடிப்பள்ளிக்கருகில் வங்கக் கடலில் கலக்கிறது. பத்ராசலம் சென்று சீதாராம தரிசனமும் கோதாவரி தரிசனமும் செய்திருக்கிறேன். ஆனால் ஐம்பதாண்டுகள் கொல்கத்தாவில் வாழ்ந்தும், ஆண்டுக்கு ஓரிரு முறை தவறாது அங்கிருந்து சென்னைக்குச் சென்றும் கூட வழியிலுள்ள ராஜமுந்திரியில் இறங்கியதில்லை. இவ்வாண்டு 2012-ல் தான் அக்கனவு பலித்தது.

  சென்னையிலிருந்து காலையில் ஹெüரா கொரமாண்டல் விரைவு ரயிலில் ஏறி மாலையில் ராஜமுந்திரி சென்றடைந்தேன். அடுத்த இரண்டு நாள்களும் ராஜமுந்திரியையும், கீழ் கோதாவரியின் சில முக்கியத் தலங்கள், கோதாவரி சங்கமம் வரை சென்று பார்த்தேன்.

  ராஜமகேந்திரவரம் என்ற இன்றைய ராஜமுந்திரியைக் கட்டியவன் ராஜராஜ நரேந்திரன். அவன் வெங்கியின் கீழைச் சாளுக்கிய மன்னன். தஞ்சாவூர் சோழர் பரம்பரையில் வந்தவன். தெலுங்கின் ஆதி கவியான நன்னயர் அவனது குரு. அவனது காலத்தில்தான் அவர் தெலுங்கு மகாபாரதத்தை எழுதினார்.

  ராஜமுந்திரியில் கோதாவரிக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு மைல் நீளமுள்ள பாலம் இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாலம். அதற்கு மேலே மோட்டார் வாகனங்கள் போகும் பாலம். ரயில் வண்டியிலிருந்து ஜன்னலின் வெளியே பார்த்தால், மேற்கே வெகு தூரத்தில் குன்றுகளின் கூட்டம். ஆற்றின் நடுவே இரு பக்கங்களிலும் பல தீவுகள். அவற்றில் பல குடிசைகள். கோதாவரி ஆற்றைக் கடப்பது ஓர் இனிய அனுபவம். நதிக்கரையில் கெüதமி காட், கோடிலிங்க காட், புஷ்கர் காட், ஆர்யசமாஜ் சிரத்தானந்தா காட், இஸ்கான் ராதாகிருஷ்ண மந்திர், மார்க்கண்டேய சிவாலயம் முதலியன உள்ளன. ஆந்திராவின் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு மறுமலர்ச்சியின் முன்னோடிகளில் ஒருவர். பெண்களுக்கான கல்விக்கூடம் நிறுவியதுடன், விதவைகள் இல்லத்தையும் தொடங்கினார்.

  அவர் வாழ்ந்த இல்லத்தில் நன்றியோடு ஆந்திர அரசு நிறுவியுள்ள கண்டு கூரி வீரேசலிங்கம் பந்துலு நினைவாலயத்தை தரிசித்தேன்.

  மறுநாள் காலையில் புறப்பட்டு கீழ்க்கோதாவரியிலுள்ள மூன்று தலங்களையும் பார்த்து வந்தேன். முதலில் ராஜமுந்திரியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள திராட்சாராமா என்ற சைவத் திருத்தலத்திற்குச் சென்றேன். போகும் வழி கோதாவரியின்

  டெல்டா பகுதி. எங்கு பார்த்தாலும் கோதாவரியின் கிளை நதிகள், கால்வாய்கள், நீரோடைகள், நீண்ட பெரும் வயல்வெளிகள் எல்லாமாகப் பச்சைப் பசேலென்று கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டும் காட்சிகள். ராஜமுந்திரியிலிருந்து 1850-ல் சர். ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயப் பொறியியல் வல்லுனரால் கட்டப்பட்ட தெüலேசுவாமி தடுப்பணையைத் தாண்டி கோதாவரியைக் கடந்து திராட்சாராமாவை அடைந்தேன். இது என்ன பெயர்?

  சமஸ்கிருதத்தில் ஆராமா என்றால் தோட்டம். இந்த இடத்தில்தான் தட்சயக்ஞம் நடந்ததாம். எனவே இத்தலம் தட்சஆராமா- தட்சாராமா என்று பெயர் பெற்றது. அதுவே நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் திரிந்து திராட்சைத் தோட்டம் என்று பொருள்படும் திராட்சாராமா ஆகிவிட்டது தட்சன் தோட்டம். புராணக் கூற்றுப்படி மிகப் பெரிய லிங்கம் உடைந்து, அதன் பகுதிகள் ஐந்து இடங்களில் விழுந்து, அவையே பஞ்ச ஆராமாக்கள் ஆயின. அந்த மூலலிங்கம் சூரியனால் நிறுவப்பட்டு, சப்தரிஷிகளால் வழிபடப்பட்டது. அந்த ஏழு ரிஷிகளும் சப்த கோதாவரிகள் ஆனார்கள். அவர்கள் தத்தம் கிளையாறுகளிலிருந்து கொண்டு வந்த நீர் இத்தலத்தில் திருக்குளம் அல்லது புஷ்கரணி ஆயிற்று.

  இங்குள்ள இறைவனது திருநாமம் பீமேசுவரசுவாமி. அம்பாள் மாணிக்யாம்பா. இக்கோவில் கீழைச் சாளுக்கிய மன்னர் வெங்கிபீமனால் 9-10-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது.

  நாற்புறமும் கோபுரங்களோடு கூடிய இக்கோவிலின் தலையாய சிறப்பு பாரதத்திலுள்ள எல்லாக் கோவில்களையும்விட அதிகமான கல்வெட்டுகளை உடையது. தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதத்தில் மொத்தம் 381 கல்வெட்டுகள் உள்ளன. மற்றொரு புதுமை உட்பிரகாரத்தில் இக்கோவிலின் சிறிய அளவு மாடல் (மாதிரிக் கோவில்) ஒன்று காணப்படுகிறது. சிற்பியின் கற்பனையில் பிறந்த கோவிலுக்கு ஒரு முன் மாதிரி செய்து கொண்டு, பிறகு கோவிலை இன்றுள்ள பெரிய அளவுக்குக் கட்டினார்கள் என்பது தெளிவாகிறது.

  அடுத்து திராட்சாராமாவிலிருந்து 18 கி.மீ. தூரத்திலுள்ள கோடிப்பள்ளிக்குச் சென்றேன். இந்த ஊருக்கருகில்தான் கோதாவரி கடலோடு கலக்கிறது. இது பலரது பாவம் தீர்த்த தலம். சந்திரன் தான் செய்த மாபாதகச் செயலால் தன் ஒளியை இழந்தான். அதற்குப் பரிகாரமாக அவன் கோடிப் பள்ளிக்கு வந்து நீராடி வழிபட்டு இழந்த தேஜசை மீண்டும் பெற்றான். உடனே சந்திரன் இங்கே கோமேஸ்வர லிங்கத்தையும் ராஜராஜேஸ்வரி தேவியையும் பிரதிஷ்டை செய்தான். இது போகலிங்கம். ஸ்படிகத்தாலானது. ஐந்தடி உயரம். வளர் பிறை நாள்களில் பிறை நாட்களுக்கேற்ப அதன் ஒளி வளருமாம். இங்கே கோடிலிங்கேஸ்வரர் என்ற மற்றொரு கோவில். அங்கே சிவலிங்கம் எப்போதும் நீருக்கடியிலேயே இருக்கிறது. அகலிகையை கெüதமர் உருவில் வந்து வஞ்சகமாகப் புணர்ந்த பாவம் துடைக்க இந்திரன் இந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது. வாமனாவதாரத்தோடு தொடர்புடைய இங்கு மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பி தேவர்களுக்குக் கிருபை செய்த விஷ்ணு úக்ஷத்ர பாலகராக ஸ்ரீதேவி பூதேவியுடன் சித்தி ஜனார்த சுவாமி என்ற திருநாமத்தில் உறைகிறார். இங்கே கோதாவரி சங்கமத்தில் ஆஸ்திகர்கள் பித்ரு தர்ப்பணம் செய்கிறார்கள். கோவிலுக்கு எதிரிலுள்ள பெரிய குளத்தில் ஒரு பெரிய சிவனும் வீற்றிருக்கிறார்.

  கோடிப்பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ரயாலி என்ற தலத்திற்குச் சென்றேன். சிறிய கோவில். ஆனால் அங்கே ஒரு அற்புதச் சிற்பம். சுவாமியின் பெயர் ஜகன் மோகினிகேசவர். விஷ்ணு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். சிலை ஐந்தடி உயரம், மூன்றடி அகலம். இச்சிலையில் விஷ்ணுவின் உடலிலேயே மோகினியும் இருக்கிறாள். எங்கே என்று கேட்டால் சிலைக்குப் பின்புறம் சென்று பார்க்க வேண்டும். அதுவோ அகலமற்ற இடைவெளி. அர்ச்சகர் கற்பூரத்தையேற்றிப் பின்னால் காட்டுகிறார். அந்த தீபவொளியில் ஒரு பெண்ணின் முடிந்த கொண்டையும் அழகான ஒப்பனையும், கால்கள் வரையில் பெண்ணுக்குரிய ஆடை தரித்து, பிற நகை அலங்காரத்தோடு காட்சியளிக்கும் தலையிலிருந்து கால் வரையிலான பெண்ணின் பின்புறத்தைப் பார்க்கிறோம். சதுர் புஜ சங்கு சக்கரத்தோடு கூடிய விஷ்ணுவின் பிரபையில் தசாவதார வடிவங்களும், ஸ்ரீதேவி, பூதேவி, கிருஷ்ணர், கருடன், நாரதர், தும்புரு, ரம்பை, ஊர்வசி, ஆதிசேஷன் சிற்பங்கள் காணப்படுகின்றன. காலடியில் நீர் ஊற்றாக வந்து விஷ்ணுவின் திருப்பாதங்களைக் கழுவுகிறது. இது ஆகாச கங்கை என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  மிகுந்த மகிழ்ச்சியோடு கீழ்க் கோதாவரி சுற்றுலாவை முடித்துக் கொண்டு மறுநாள் காலையில் அதே கொரமாண்டல் ரயிலில் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp