சுடச்சுட

  
  29k12

  அண்ணாந்து பார்த்துக் கிடந்தது அந்த அணில், சாலையின் நடுவில். அது சாதாரண அணில் அல்ல, மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் வாழும் மலையணில். சாலையைக் கடக்கும் போது ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போய், அதன் வெண்மஞ்சளான அடிப்பாகம் தெரிய வானத்தைப் பார்த்து அண்ணாந்து கிடந்தது அந்த மலையணில். அதன் காலிலுள்ள கூரிய நகங்கள் தார்ச் சாலைக்குப் பழக்கமானவையல்ல. மரத்தின் கிளைகளைப் பற்றி ஏறுவதற்கும், இறங்குவதற்குமே ஏதுவானது.

   அது சாலையைக் கடக்கும்போது நிச்சயமாக வேகமாகத்தான் போயிருக்க வேண்டும். அது தரையில் நடந்து நான் இதுவரை பார்த்ததில்லை. ஒருவேளை சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறமுள்ள மரத்திற்கு தாவும்போது எதிரேயுள்ள கிளையைப் பற்றமுடியாமல் கீழே விழும் வேளையில், எதிர்பாராதவிதமாக கடந்து செல்லும் வாகனத்தில் மோதி இறந்திருக்குமோ? அப்படியும்கூட இருக்கவே முடியாது என்றே தோன்றியது.

   மரத்திற்கு மரம் மலையணில் தாவுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். தன்னால் எவ்வளவு தூரம் தாவ முடியும் என்று அவற்றுக்குத் தெளிவாகத் தெரியும். கிளைக்குக் கிளை தூரம் அதிகமாக இருந்தால், ஒரு முனையில் இருந்து சற்று நிதானித்து தாவி இறங்கவேண்டிய கிளைப்பகுதியை உற்று நோக்கும். முடியாது எனத் தோன்றினால் தாவ முடிந்த வேறோர் கிளைக்குச் சென்றுவிடும்.

   விபத்து எப்படி நடந்திருந்தால் என்ன? இந்த அழகான மலையணில் இப்போது உயிரற்று பரிதாபமாக சாலையில் கிடந்தது. நம் வீட்டினருகில் தென்படும் முதுகில் மூன்று வரியுள்ள சிறிய அணிலைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் மலையணிலை முதன்முதலில் பார்க்கும்போது நிச்சயமாக மலைத்துப் போவார்கள். காட்டில் மலையணில் துள்ளித் திரியும் காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும். உருவில் பெரிய இம்மலையணில்களின் உடலின் மொத்த நீளம் (தலையிலிருந்து வால்முனை வரை) சுமார் இரண்டு அடி. உரோமங்களடர்ந்த வால் மட்டுமே ஒரு அடிக்குக் குறையாமல் இருக்கும்.

   இந்தியாவில் மூன்று வகையான மலையணில்கள் உள்ளன. இந்திய மலையணில், சாம்பல் நிற மலையணில் மற்றும் மலேய மலையணில். முதலிரண்டு மலையணில்களும் கங்கை நதிக்கு தெற்கேயுள்ள வனப்பகுதிகளில் தென்படுகின்றன. மலேய மலையணில் இந்தியாவின் அஸ்ஸôம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் முதலிய வடகிழக்கு மாநிலங்களில் பரவி காணப்படுகிறது. இதன் மேலுடல் கரும்பழுப்பாகவும் கீழே வெளிறிய நிறத்திலும் இருக்கும்.

   இந்திய மலையணில் பசுமைமாறாக் காடுகளிலும், வறண்ட மற்றும் ஈர இலையுதிர் காடுகளிலும், இப்பகுதிகளை அடுத்த தோட்டங்களிலும் இம்மலையணில் தென்படும். தானியங்கி துப்பாக்கி முழக்கமிடும் ஓசையை ஒத்த இதன் உரத்த குரலின் மூலமும், இவை வசிக்கும் இடத்தைச் சுற்றிலும் மரத்தின் மேலுள்ள பெரிய கூடை போன்ற கூடுகளை வைத்தும் இதன் இருப்பிடத்தை அறியலாம். இவற்றின் மேல் பகுதி கருஞ்சிவப்பு நிறத்திலும், கீழ்ப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்திலும், வால் கரிய நிறத்துடனும் இருக்கும். இம்மலையணில் அகநானூற்றில் "வெளில்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மத்திய இந்தியாவின் வனப்பகுதிகளிலும் தென்படுகின்றன. இவற்றில் 7 உள்ளினங்கள் இடத்திற்கு இடம் உடல்நிறத்தில் சற்று மாறுபட்டு காணப்படும். உதாரணமாக நீலகிரி பகுதியில் உள்ள இம்மலையணிலின் வால் முனை வெண்மையாகவும், ஆனைமலைப் பகுதியிலுள்ளவவை கரிய நிற வாலுடனும் இருக்கும்.

   சாம்பல் மலையணில் அல்லது நரை மலையணில் அரிதானது. இம்மலையணிலை, வறண்ட இலையுதிர் காடுகள், ஆற்றோரக் காடுகள் மற்றும் பசுமைமாறா காடுகளில் காணலாம். இவை உருவில் இந்திய மலையணிலைப் போல் இருந்தாலும் இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த பழுப்பாகும். கூச்ச சுபாவம் உள்ள இவ்வணிலை இவற்றின் உரத்த குரலின் மூலம் கண்டுகொள்ளலாம். இந்தியாவில் இவை காணப்படும் இடங்கள் மிகக் குறைவே. மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரின் கிழக்குப் பகுதியிலுள்ள சரிவில் சுமார் 10 இடங்களில் இவை காணப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கென்றே ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் சாம்பல் மலையணில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காவிரி சரணாலயம், பழனியை அடுத்த வனப்பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. இம்மலையணில்கள் மரத்திலுள்ள பழங்கள், விதைகள், பூக்கள், இலைகள், மரப்பட்டை, சிலவேளைகளில் பூச்சிகள், பறவைகளின் முட்டை போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. பகலில் சஞ்சரிக்கும் இவை மரவாழ்விகள்.

   காட்டில் அருகருகே உயர்ந்தோங்கி வளர்ந்துள்ள மரங்களின் உச்சியில், கிளைகளும் இலைகளும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்து ஒரு தனி அடுக்கை ஏற்படுத்தியிருக்கும். இப்பகுதி மரஉச்சி அல்லது விதானம் எனப்படும். இவ்விதானப் பகுதியில்தான் பலவித உயிரினங்கள் வாழ்கின்றன. விதானவாழ் உயிரிகள் மரக்கிளைப் பற்றியும், மரத்துக்கு மரம் தாவிக் குதித்தும் இடம்விட்டு இடம் செல்லும். மரக்கிளைகள் ஒன்றோடொன்று இணைந்து நெருக்கமாக அமைந்திருப்பதால் விதானப்பகுதியும் ஒரு முக்கியமான வாழிடமாகிறது. உண்ண உணவு, பாதுகாப்பான, மறைவான உறைவிடம் இருப்பதால், இப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் தரைக்கு வருவது மிக அரிதே.

   மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்படும் இந்திய மலையணிலை மலபார் மலையணில் என்றும் அழைப்பர். இவற்றை இயற்கைச் சூழலில் கண்டு ரசிப்பதில் ஏற்படும் பரவசத்தை சொல்லில் அடக்கிவிட முடியாது. இவை மரம் விட்டு மரம் தாவுவதே கண்கொள்ளாக் காட்சியாகும். பாம்புக்கழுகு அல்லது கருங்கழுகு விதானத்திற்கு மேல் வட்டமிடும்போது அவற்றைக் கண்டவுடன் இவை உரத்த குரலெழுப்பி மற்ற விலங்குகளை எச்சரிக்கை செய்யும்.

   மழைக்காடுகளில் உள்ள சில மரங்களில் மர உச்சியில்தான் கிளைத்து இருக்கும். அவ்வகையான நெடிந்துயர்ந்து நிற்கும் மரங்களிலும் தமது கூரிய நகங்களின் உதவியால் செங்குத்தாக ஏறும் அதே லாகவத்துடன் மலையணில் தலைகீழாக இறங்கவும் செய்யும். இவை பொதுவாக குட்டி ஈனுவதற்கு இரண்டு கூடுகளைக் கட்டும். ஒரு வேளை குட்டியிருக்கும் கூட்டினருகில் ஏதேனும் அபாயம் ஏற்படின், தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேறோர் கூட்டிற்கு இடமாற்றம் செய்யும். மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே தென்படும் அரிய பழுப்பு மரநாய் இரவில் சஞ்சரிக்கும் பண்புள்ளது. சில நேரங்களில் இவை பகலில் மலையணிலின் பழைய கூட்டில் உறங்குவதைக் கண்டிருக்கிறேன். மரஉச்சிப் பகுதியே மலையணில்களின் உலகம். அவை அங்குதான் பிறக்கின்றன, உணவு தேடுகின்றன, உறங்குகின்றன, தமது துணையைத் தேடி இனப்பெருக்கம் செய்கின்றன, வேறு விலங்குகளால் வேட்டையாடப்பட்டு இறக்கின்றன.

   தேசியப் பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்களின் ஊடே செல்லும் சாலைகள், மனிதர்களின் சௌகரியத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், அக்காட்டுப் பகுதியின் தாவரங்கள், மரங்கள் மற்றும் அங்கு நடமாடும் விலங்குகளின் பாதுகாப்பை முதன்மையாக கருத்தில் கொண்டு சாலைகளை அமைத்திட வேண்டும். காட்டுப்பகுதியில் செல்லும் சாலைகளை அகலப்படுத்துதல், காட்டின் குறுக்கே கிட்டத்தட்ட ஒரு மதில் சுவரைக் கட்டுவதற்குச் சமம். சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு இடம்பெயரும் வனவிலங்குகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாதவண்ணம் சாலைகளை அமைக்கவேண்டும். தகுந்த இடைவெளியில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்.

   சாலையோரத்திலுள்ள மரங்களை வெட்டிச் சாய்க்காமல், சாலையை அகலப்படுத்த முடியாது. இதனால் விதானத்தில் ஏற்படும் இடைவெளி மலையணில், சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), கருமந்தி, பழுப்பு மரநாய், தேவாங்கு போன்ற மரவாழ் விலங்குகளின் இடப்பெயர்விற்குப் பேரிடராக அமையும். இதனாலேயே இவை தரையில் இறங்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றன. பல வேளைகளில் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்தும் போகின்றன. காட்டுக்குள், சாலைகளின் மேலே நீல வானம் முழுவதும் தெரியாமல் மரக்கிளைகள் இரு புறத்திலிருந்தும் ஒன்றோடொன்று உரசி கொண்டிருந்தால், அதுவே நல்ல சாலை. நிழலான சாலையில் பயணிக்க யாருக்குத்தான் பிடிக்காது? நிழலிருந்தால் சாலையோரங்களில் களைச்செடிகள் பெருகுவதும் வெகுவாகக் குறையும். இவ்வகையான சாலைகளைப் பெற, சாலையோரத்தில் இருக்கும் காட்டு மரக்கன்றுகளையும் மற்ற சிறு செடிகளையும் அகற்றக் கூடாது. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் எதிரில் வாகனங்கள வருவதை வாகன ஓட்டுநர்கள் அறிந்து கொள்ள, ஒரு சில இடங்களில் சாலையோரத் தாவரங்களை அகற்றுவது தவிர்க்க இயலாது. அங்கும் தேவையான அளவிற்கு மட்டுமே தாவரங்களை அகற்ற வேண்டும். தகரை, காட்டுக் காசித்தும்பை போன்ற அழகான சிறு செடிகளை அகற்றுவது தேவையில்லாதது. இவை தமது வேரினால் மண்ணை இறுகப் பிடித்து மண்ணரிப்பைத் தடுப்பதோடு அல்லாமல், சாலையோரங்களையும் அழகுபடுத்துகின்றன.

   காட்டுப் பகுதியிலிருக்கும் சாலைகளைச் செப்பனிடும்போதோ, புதிதாகத் தயார் செய்யும் போதோ நெடுஞ்சாலைத் துறையினரும், வனத்துறையினரும், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஆலோசனை செய்து செயல்படுவது அவசியம். நம் வாகனத்தை காட்டுப்பகுதிக்குள் இட்டுச்செல்லும் முன், மனிதர்களாகிய நாம் அமைத்த சாலை நமக்கு மட்டுமானது இல்லை என்பதையும், அங்குள்ள வனவிலங்குகளுக்கும் சேர்த்துத்தான் என்பதை கருத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai