மணக்க மணக்க பேசுங்கள்!

ஒருநாளைக்கு சுமார் 20 பேரையாவது அலுவலகத்திலோ, வெளியிலோ சந்திக்கிறோம். நாம் வெளி நபர்களைச் சந்திக்கும்போது டிப்-டாப்பாக ஆடை அணிய வேண்டாம் என்றாலும், குறைந்தபட்சம் மற்றவர் முகம் சுளிக்காத அளவிற்காவது ஆட
மணக்க மணக்க பேசுங்கள்!

ஒருநாளைக்கு சுமார் 20 பேரையாவது அலுவலகத்திலோ, வெளியிலோ சந்திக்கிறோம். நாம் வெளி நபர்களைச் சந்திக்கும்போது டிப்-டாப்பாக ஆடை அணிய வேண்டாம் என்றாலும், குறைந்தபட்சம் மற்றவர் முகம் சுளிக்காத அளவிற்காவது ஆடை அணிவோம். ஆடைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போன்று நம்முடைய வாய்க்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம் வாயிலிருந்து துர்நாற்றம் வீசினால் நம் எதிரே நின்று பேசுவதற்கே மற்றவர்கள் விரும்பமாட்டார்கள். மேலும் நம் சுகாதாரம் குறித்து பிறரிடம் கேலி பேசுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வாய் துர்நாற்றத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

 வாய் துர்நாற்றத்திற்கு பொதுவான காரணங்கள் மோசமான வாய் சுகாதாரம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், நீர்சத்து குறைவாக இருத்தல் ஆகியவையே. ஒரு சிலருக்கு தீராத குடல் நோய் மற்றும் புண் காரணமாக இருக்கும். ஈறுகளில் பிரச்னை, சர்க்கரை நோயும் கூட இதற்குக் காரணமாக இருக்கிறது. அசைவ உணவுத் துணுக்குகள் வாயில் தங்கினால் கேட்கவே வேண்டாம்; வாய் துர்நாற்றம் உறுதி.

 துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வாயில் உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்விளக்க வேண்டும். ஒரு டீ குடித்து முடித்தால் கூட வாய் கொப்பளிப்பது நல்லது. குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரை அணுக வேண்டும்.

 வாய் சுகாதாரம்: ""நான் தினமும் பல்விளக்குகிறேன். உயர்தர, விலை உயர்ந்த பற்பசை, பிரஷ்ஷைத்தான் உபயோகிக்கிறேன். ஆனாலும், ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது'' என்று நீங்கள் எண்ணக்கூடும். நீங்கள் உபயோகிக்கும் பொருள்களினால் பலன் இல்லை; அதனை எவ்வாறு உபயோகிக்கிறீர்களோ அதுதான் பலனளிக்கும். துலக்கும்போது கடமைக்காக இரண்டு தேய் தேய்த்துவிட்டு போகக்கூடாது. குறைந்தது 2 நிமிடங்களாவது பல் துலக்கும் பிரஷ் வாயில் இருக்க வேண்டும். வாயில் தங்கியிருக்கும் துணுக்குகளை முறையாக பல் விளக்குவதன் மூலம் வெளியேற்ற வேண்டும்.

 நாக்கு வழிப்பான்: "டங்க் க்ளீனர்' என்று அழைக்கப்படும் நாக்கைச் சுத்தம் செய்யும் சாதனத்தின் அருமை பலருக்குத் தெரியாது. பல் விளக்கும்போது நாக்கையும் சுத்தம் செய்தால் வாய் துர்நாற்றத்தை 85 சதவீதம் தடுக்கலாம். பிரஷ், டங்க் க்ளீனர் வாங்குவதில் எல்லாம் கணக்குப் பார்க்காதீர்கள். தரமான பொருள்களையே வாங்கி உபயோகியுங்கள்.

 தண்ணீர்...தண்ணீர்: நிறைய தண்ணீர் குடியுங்கள். தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் வாய் துர்நாற்றத்திற்கும் தண்ணீருக்கும் என்ன சம்பந்தம்? அதிகமாக தண்ணீர் குடித்தால்தான் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். வாயிலும் தேவையான அளவு உமிழ்நீர் சுரக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் அதிகமாக குடிக்கவில்லையென்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து உமிழ்நீர் சுரப்பது குறையும்; உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்ந்துவிட்டால் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் வாயில் குடிகொண்டுவிடும். உமிழ்நீர்தான் வாயின் சுகாதாரத்திற்காகப் போர்புரியும் வீரர்கள்.

 மல்லி...கொத்துமல்லி: கொத்துமல்லி இலைகளை மென்று தின்றால் வாய்துர்நாற்றம் விடைபெறும். கொத்துமல்லி இலைகள் வாயில் உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுகிறது. மேலும் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் அலசி வெளியேற்றுகிறது. வேப்பிலை, வேப்பங்குச்சிகளையும் மெல்லலாம்.

 சூயிங்கம்: ஏலக்காய், பட்டை,புதினா சுவையுள்ள சூயிங்கங்களை மெல்லவும் செய்யலாம். இந்த வகை சூயிங்கங்களை எப்போதும் கைவசம் வைத்திருப்பது நல்லது. சூயிங்கங்கள் வாயில் எச்சில் ஊறுவதை அதிகரிக்கிறது.

 டீ குடியுங்கள்: உங்கள் சாப்பாட்டுக்குப் பின்பு ஒரு டீ குடித்தால் வாய் துர்நாற்றம் எளிதில் உங்களைத் தாக்காது. அதுவும் இஞ்சி டீ என்றால் மிகவும் நல்லது. சோம்பு சேர்த்த டீயையும் அருந்தலாம். வெறும் சோம்பைக் கூட மெல்லலாம். வாய் துர்நாற்றத்தை உடனடியாக நீக்குவதற்கு சோம்பு உதவும்.

 அதிக பசி: சிலர் அதிக பசியோடு வெகுநேரம் இருப்பார்கள். தங்களுக்கு ஆக வேண்டிய வேலையை முடித்துவிட்டு தான் சாப்பிடுவதாக சபதம் எடுத்துக்கொள்வார்கள். அதிக நேரம் பசியோடு இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே குறிப்பிட்ட சமயத்தில் சாப்பிட முடியாதவர்கள் சிறிய தின்பண்டங்களையாவது இடையிடையே சாப்பிட வேண்டும்.

குறிப்பு:

*  வாய் துர்நாற்றம் 10,000 வகைப்படும் என நிபுணர்கள் வகைப்படுத்துகின்றனர்.

 *  உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா என்பதை பரிசோதிக்க உங்கள் மனைவி/கணவனை வைத்து பரிசோதிக்கச் சொல்லுங்கள்.

 *  வாய் துர்நாற்றத்தைக் கண்டுபிடிக்க குழந்தைகள்தான் பொருத்தமானவர்கள்; அவர்கள்தான் உண்மையை சரியாகச் சொல்வார்கள்.

 *  உங்களை நீங்களே பரிசோதிக்க உங்கள் மணிக்கட்டில் சிறிது எச்சிலை வையுங்கள்; ஐந்து வினாடிகள் கழித்து அதனை முகர்ந்து பாருங்கள்.

 *  ஒருவர் தன்னுடைய வாய்துர்நாற்றத்தை மேற்கூறிய பரிசோதனைகளால் அல்லாமல் தாமாகவே உணர முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com