சோதனையை வென்ற ஜோஷ்னா!
By | Published On : 03rd June 2012 12:00 AM | Last Updated : 20th September 2012 05:32 AM | அ+அ அ- |

விளையாட்டில் காயம் என்பது தவிர்க்க முடியாததுதான் என்றாலும், அது சிலரின் விளையாட்டு வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.
அதிலிருந்து மீண்டு மறுபடியும் சாதனை படைப்பது என்னவோ ஒரு சிலர் மட்டுமே. அந்த வரிசையில் சோதனையைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறார் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா.
முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 7 மாதங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஸ்குவாஷில் தனது அதிரடியைத் தொடங்கியுள்ளார் "இந்திய ஸ்குவாஷின் சானியா மிர்சா' என்றழைக்கப்படும் இந்த 25 வயது ஜோஷ்னா.
சென்னை ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வாகை சூடியதன் மூலம் தனது ஸ்குவாஷ் வாழ்க்கையில் 6-வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் தமிழக ஸ்குவாஷ் வீராங்கனையான ஜோஷ்னா.
கடந்த வாரம் நடைபெற்ற சென்னை ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் ஜோஷ்னா 3-1 என்ற கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் சாரா ஜானி பெர்ரிக்கு அதிர்ச்சித் தோல்வியளித்து, சொந்த மண்ணில் முதல்முறையாக சாம்பியன் ஆனார்.
அறுவை சிகிச்சையின் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்த அவர், தரவரிசையில் முதல் 40 இடங்களில் இருந்து 71-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், சில வாரங்களுக்கு முன்பு குவைதில் நடைபெற்ற ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில் தீபிகா பலிக்கலுடன் இணைந்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்தார்.
இப்போது சென்னை ஓபன் ஸ்குவாஷ் போட்டியிலும் வெற்றி கண்டிருப்பதன் மூலம், அடுத்த மாதம் வெளியாகவுள்ள தரவரிசையில் மிகப்பெரிய ஏற்றத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்குவாஷ் குடும்பம்: தனது குடும்பத்தில் இருந்து 4-வது தலைமுறையாக ஸ்குவாஷ் விளையாட வந்தவர் ஜோஷ்னா. அவருடைய தந்தை அஞ்சன் சின்னப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா ஆகியோரும் ஸ்குவாஷ் வீரர்களே. ஜோஷ்னாவின் தந்தை அஞ்சன், தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர்.
பிரிட்டிஷ் ஸ்குவாஷை வென்ற முதல் இந்தியர்: பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2003-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றார் ஜோஷ்னா. இதன்மூலம் பிரிட்டிஷ் ஸ்குவாஷ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இளம் சாம்பியன்: இந்திய விளையாட்டு வரலாற்றிலேயே தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையும் ஜோஸ்னாவையே சேரும். அவர் தனது 14-வது வயதில் தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.
ஜோஷ்னாவுக்கு அடுத்தபடியாக தங்களின் 15-வது வயதில் விஜய் அமிர்தராஜ் (டென்னிஸ்), விஸ்வநாதன் ஆனந்த்
(செஸ்), ரமேஷ் கிருஷ்ணன் (டென்னிஸ்), பிரகாஷ் படுகோனே (பாட்மிண்டன்) ஆகியோர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றவர்கள்.
நம்பிக்கை பெற்ற ஜோஷ்னா: வெற்றி குறித்துப் பேசிய ஜோஷ்னா, "சென்னை ஓபனில் இதற்கு முன் இருமுறை இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தாலும், இந்த முறை பட்டம் வென்றது மிகச்சிறந்த வெற்றி. இது மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் எனக்குள் ஏற்படுத்தியுள்ளது. எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், எனது பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
சி.பி.ஜான்ஸ்டன் விருது: 1998-ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு சி.பி.ஜான்ஸ்டன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அகாஸியின் ரசிகை: ஜோஸ்னா ஸ்குவாஷ் விளையாடினாலும், அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் ஆன்ட்ரூ அகாஸியையே தன்னுடைய முன்மாதிரியாகக் கொண்டுள்ளார்.
கடந்து வந்த பாதை: தனது 8-வது வயதில் ஸ்குவாஷ் விளையாடத் தொடங்கிய ஜோஷ்னாவுக்கு, அப்போதைய பயிற்சியாளர் அவருடைய தந்தை அஞ்சன்
சின்னப்பாதான்.
ஸ்குவாஷ் மீது தீராத காதல் கொண்டிருந்த ஜோஷ்னா, அடுத்த 3 ஆண்டுகளில் தேசிய ஜூனியர் ஸ்குவாஷ் (14 வயது) சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்தார்.
பின்னர் சிங்கப்பூர், ஹாங்காங், ஸ்காட்காலந்து ஜூனியர் பிரிவு ஸ்குவாஷ் போட்டிகளிலும் அவர் பட்டம் வென்றார். 2003-ல் பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றதோடு, அதே ஆண்டில் ஆசிய ஜூனியர் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி கண்டார்.
2004-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அவர், 2005-ல் 2-வது முறையாக பிரிட்டிஷ் ஓபனில் சாம்பியன் ஆனார். தொடர்ச்சியாக பல்வேறு வெற்றிகளைப் பெற்ற அவர், 2007-ம் ஆண்டு தரவரிசையில் 42-வது இடத்துக்கு முன்னேறினார்.
இதன்பிறகு தொடர் வெற்றிகளால் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஜோஷ்னாவின் ஸ்குவாஷ் வாழ்க்கையில், முழங்கால் காயத்தால் சறுக்கல் ஏற்பட்டது. இப்போது அதிலிருந்து மீண்டு, இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜோஷ்னா.
நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும்!
சென்னை ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் பட்டம் வென்ற ஜோஷ்னா நமக்களித்த பிரத்யேக பேட்டி:
சென்னை ஓபன் ஸ்குவாஷில் பட்டம் வென்றது குறித்து...
சென்னை ஓபன் ஸ்குவாஷ் மிகச்சிறந்த போட்டி. இந்தப் போட்டிக்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டதால், முதல் ஆட்டம் தொடங்கி கடைசி ஆட்டம் வரை சிறப்பாக விளையாட முடிந்தது. இந்தப் போட்டியில் முதல் மற்றும் இறுதிச்சுற்று கடும் சவாலாக இருந்தது. சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஆசிய அணி சாம்பியன்ஷிப்பில் தீபிகா பலிக்கலுடன் இணைந்து பட்டம் வென்ற அனுபவம் பற்றி...
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது. நாட்டுக்காக முதல்முறையாக தங்கம் வென்றபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் போட்டியின் மூலம் நல்ல அனுபவம் கிடைத்தது.
உங்களின் அடுத்த இலக்கு என்ன?
காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும். சர்வதேச தரவரிசையில் முன்னேற வேண்டும். நாட்டுக்காக தொடர்ந்து பதக்கங்களை வென்று குவிப்பதே
லட்சியம்.