Enable Javscript for better performance
காந்தியை சந்திக்க ரயிலை நிறுத்தினேன்!- Dinamani

சுடச்சுட

  

  காந்தியை சந்திக்க ரயிலை நிறுத்தினேன்!

  By வி.ரவிச்சந்திரன்  |   Published on : 07th October 2012 06:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lagumaiah1

  இந்த ஆண்டு அக்டோபர் 2-இல் காந்திகிராமம் உருவாகி 65 ஆண்டுகள் ஆகின்றது. காந்தியின் ஆசைப்படி இந்த கிராமம் உருவாவதற்கு காரணமாக இருந்த காந்தியவாதி எல்.கே.பி. லகுமையாவுக்கு 100 வயது.

  செயற்கரிய செயல்கள் செய்தவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பது பலரின் விருப்பம். அதன்படி காந்திகிராமம் உருவாக்க 1946ஆம் ஆண்டில் 25 ஏக்கர் நிலம், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை தானமாகக் கொடுத்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், காந்தியவாதியுமான எல்.கே.பி. லகுமையா அக்.2ஆம் தேதி தனது 100வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். காந்திகிராம அறக்கட்டளை, காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம் இணைந்து லகுமையாவின் 100வது பிறந்த நாளை அக்.2ஆம் தேதி கொண்டாடியது. பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லகுமையா தனது மகன் ராஜேந்திரன் உதவியுடன் தம் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

  டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் டி.எஸ். சௌந்தரம்,  காந்தியடிகளின் உத்தரவின்படி காந்திகிராமத்தைத் தொடங்க தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். காந்திகிராமத்தில் ஆறு இருக்க வேண்டும், அல்லது மலை அடிவாரத்தில் ஊர் அமைய வேண்டும், பிரதான சாலைக்கு வெகு அருகில் இடம் கிடைக்க வேண்டும் என கருதினார். இதேபோன்ற இடம் சௌந்தரத்திற்கு கிடைத்தும் இணைப்புச் சாலைக்கு 60 அடி முதல் 100 அடி வரையிலான இடத்தைக் கொடுக்க சிலர் மறுத்து விட்டதால் பல இடங்கள் கிடைத்தும் அதை அவரால் தேர்வு செய்ய முடியவில்லை.

  காந்தியின் கனவு கிராமம் எனது ஊருக்கு அருகில் அமைய வேண்டும் என்ற ஆவலில் அன்றைய மதுரை மாவட்டம் சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் எனக்கு இருந்த 25 ஏக்கர் நிலத்தை காந்திகிராமம் அமைய தானமாக அளிப்பதாகவும், இதில் கட்டடம் கட்ட ரூ.25 ஆயிரம் ரொக்கம் நன்கொடையாக தர விருப்பம் உள்ளதாகவும் டி.எஸ். சௌந்தரத்தின் சகோதரர் டி.எஸ். கிருஷ்ணாவிடம் தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி கிராம வழக்கப்படி புதிய கட்டடம் கட்ட நாள் குறிக்கப்பட்டு காந்திகிராமம் உருவானது.

   

  காந்தியடிகளை சந்தித்தது பற்றி...

  2.2.1946ஆம் ஆண்டு காந்தியடிகள் அம்பாத்துரை வழியாக மதுரைக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். விவசாய கூலிகள், பொது மக்கள் அனைவரும் காந்தியை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தள்ளப்பட்டிருந்தனர். அப்போது இளைஞராக இருந்த நான் மற்ற இளைஞர்களை ஒன்று திரட்டி மதுரை சென்று கொண்டிருந்த ரயிலை நிறுத்தினேன். எங்களின் விருப்பத்தை அறிந்த காந்தியடிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கி பொது மக்களிடம் பேசினார். அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே அவரின் பாதம் பட்ட இடத்தில் ஒரு நினைவு சின்னம் ஏற்படுத்தப்பட்டு இன்றும் அந்த இடம் பூஜிக்கப்பட்டு வருகிறது.

  சுதந்திரப் போராட்ட காலம், பிற தலைவர்களுடன் ...

  அந்நாட்களில் சின்னாளபட்டி நூல் உற்பத்தியிலும், புடவை உற்பத்தியிலும் சிறந்து விளங்கியதன் காரணமாக வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி நடந்தது. இங்கு செல்வச் செழிப்புடன் இருந்த போளிச்செட்டியார்-அம்மணி அம்மாள் தம்பதியினரின் மகனாக 2.10.1913ஆம் ஆண்டு நான் பிறந்தேன். இளமைக் காலத்தில் தொழில் நிமித்தமாக நூல், சாயப்பொடி வாங்க மதுரைக்கு சென்று வரும் காலத்தில் "மதுரை காந்தி' என்று அழைக்கப்படும் என்.எம்.ஆர். சுப்புராமன் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய  16ஆவது வயதில் சின்னாளபட்டிக்கு வந்த சுப்புராமன் கதர் வேஷ்டி, கதர் சட்டை, கதர் துண்டை கொடுத்தார். அன்று முதல் கதர் ஆடையை மட்டுமே அணிந்து வருகிறேன்.

  இதனைத் தொடர்ந்து சுப்புராமனின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று கைதாகி சிறை சென்றதும் உண்டு. 25 ஆண்டுகள் மாநில காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராக இருந்துள்ளேன். ஜெய்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக பிரதிநிதியாகப் பங்கேற்றேன்.

  முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகர், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருடன் ஒரே சிறையில் தங்கியிருந்ததைத் தொடர்ந்து ஆர்.வெங்கட்ராமனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. குடியரசுத் தலைவராக இருந்த அவர் பலமுறை தன்னுடைய மாளிகையில் எனக்கு விருந்து கொடுத்து கௌரவித்துள்ளார்.

  உங்களுடைய மக்கள் பணி குறித்து ...

  சுதந்திரப் போராட்ட வேள்வியில் ஈடுபட்ட நான், நாடு விடுதலை பெற்றதும் சமூக மேம்பாட்டு பணியில் ஈடுபடத் துவங்கினேன். கடும் முயற்சிக்குப் பின்னர் 1951ஆம் ஆண்டில் தான் சின்னாளபட்டிக்கு மின்சார வசதியைப் பெற்றுத் தர முடிந்தது. சின்னாளபட்டி ஊராட்சித் தலைவராக தேர்வு பெற்ற போது ஆத்தூர் அருகில் கொடைக்கானல் மலைச் சரிவில் விழும் மழைநீரை சேமித்து அணைகட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த முதல்வர் காமராஜரை தொடர்பு கொண்டு கட்டப்பட்ட காமராஜ் சாகர் நீர்த்தேக்கம் இன்று விவசாயத்திற்கு மட்டுமின்றி ஆத்தூர், சின்னாளபட்டி, திண்டுக்கல் நகரங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு             வருகிறது.

  உங்களது கல்விப் பணி குறித்து ...

  8ஆம் வகுப்பு படிக்கும் போது சுதந்திர வேட்கையால் பள்ளிப் படிப்பை துறக்கும் நிலை வந்தது. 1950ஆம் ஆண்டுக்கு முன் வரை இப்பகுதியில் உள்ள மக்கள் உயர்நிலை கல்வியை கற்க திண்டுக்கல் செல்ல வேண்டியிருந்தது. நான் மட்டும் பொருளுதவி செய்தால் போதாது மகத்தான பணிகளில் மக்கள் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "மகிமை' என்ற புதிய திட்டத்தை துவங்கினோம்.

  இதன்படி ஒவ்வொரு நெசவாளரின் வீட்டிலும் ஓர் உண்டியலைக் கொடுத்தோம். ஒவ்வொரு சேலையை நெய்து கூலியைப் பெறும் போது இந்த பணத்தில் கால் அணா அல்லது அரையணாவை கல்விக்கூடத்திற்காக சேகரிக்க வலியுறுத்தினோம்.

  இதன் காரணமாக 1950ஆம் ஆண்டில் சின்னாளபட்டியில் மிகப்பொலிவுடன் தேவாங்கர் உயர்நிலைப் பள்ளி உருவானது. நி.பஞ்சம்பட்டி, வெள்ளோடு, செட்டியபட்டி, சாமியார்பட்டி, கொடைரோடு, நிலக்கோட்டை, வண்ணப்பட்டி என 15 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த கிராம மாணவர்கள் இப்பள்ளியில் உயர்நிலை கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட்டது.

  தியாகிக்கான பென்ஷனை வாங்கி வருவது ஏன்?

  கல்வி மற்றும் தேசத் தொண்டை அங்கீகரிக்கும் வகையில் அரசு என்னை திண்டுக்கல் கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாக 1964ஆம் ஆண்டில் நியமனம் செய்தது. சுதந்திரப் போராட்டத் தியாகிக்கான அரசு பென்ஷன் எனக்கு கிடைத்தது. ஆனால் பென்ஷனை வாங்க முதலில் நான் மறுத்து விட்டேன். நாட்டுக்கு செய்த கடமைக்கு கூலி வாங்க எனக்கு விருப்பம் இல்லை. இதனால் பென்ஷன் அனுமதிக்கப்பட்டதிலிருந்து 2 ஆண்டுகள் வரை நான் பென்ஷனை வாங்கவில்லை.

  என்னைச் சந்தித்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் ""பென்ஷனை ஏன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்? அதை வாங்கி ஏழை மாணவர்களுக்கு கொடுத்து உதவலாமே'' எனக் கூறினார். இதன் பிறகு தான் தியாகி பென்ஷனை வாங்கி வருகிறேன். இந்தப் பணத்தை ஏழை மாணவர்களுக்கு சீருடை வாங்க கொடுத்து வருகிறேன்.

  படம்:  ஜி.விமல்கண்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai