பேரழிவு சவால்களை விழிப்புணர்வால் எதிர்கொள்ளலாம்!

பூமிப் பந்தின் உயிரினச் சுழற்சியின் ஆதாரமாக விளங்கும் நீர், நிலம், காற்று, அக்னி, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பை மனிதர்களின் நவீன விஞ்ஞானத்தால் தடுத்து நிறுத்த முடியாமல் போகிறது.
பேரழிவு சவால்களை விழிப்புணர்வால் எதிர்கொள்ளலாம்!

பூமிப் பந்தின் உயிரினச் சுழற்சியின் ஆதாரமாக விளங்கும் நீர், நிலம், காற்று, அக்னி, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பை மனிதர்களின் நவீன விஞ்ஞானத்தால் தடுத்து நிறுத்த முடியாமல் போகிறது.
 அண்மையில் உத்தரகண்டில் மேகவெடிப்பும், அதனால் ஏற்பட்ட வெள்ளச் சீற்றத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பழியான சோகச் சம்பவத்தின் பிடியில் இருந்து அம்மாநிலம் இன்னும் முழுமையாக மீளவில்லை.
 இதுபோன்ற இயற்கைச் சீற்றம் குறித்த விழிப்புணர்வு இன்மை விலை மதிப்பில்லா மனித உயிர்கள் ஏராளமான அளவில் மடிந்துபோகும் நிலைக்குக் காரணம் என்பதால் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுதில்லியில் அமைந்துள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பேரழிவு மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்.) பல்வேறு ஆய்வு, களப்பணி, பயிற்சிகளை அளித்து வருகிறது.
 தில்லியில் உள்ள இந்த மையத்தின் நீர் வளிமண்டலவியல் பிரிவின் தலைவராக (பொறுப்பு) இணைப் பேராசிரியர் கே.ஜே. ஆனந்த குமார் உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இவர் 1985-ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் பணியில் சேர்ந்தவர். பேரழிவு தொடர்பாக எச். சர்வோத்தமன் என்பவருடன் இணைந்து "மேலாண்மை - பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள்' எனும் தலைப்பில் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கொண்ட நூலை எழுதியுள்ளார்.
 இந்தியாவில் பேரிடர், அதன் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இவரிடம் பேசினோம்:
 
 நீர் வளிமண்டலப் பேரழிவு என்பது என்ன?
 நீர் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றால் ஏற்படும் பேரழிவுகள் நீர்வளிமண்டலப் பேரழிவுகள் ஆகும். இவை முக்கியமாக வெள்ளம், வறட்சி, சூறாவளி ஆகியவற்றால் ஏற்படுகின்றன. உலகம் முழுவதும் 1963-இல் இருந்து 2002-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவுகளில் இருந்து முக்கியத்துவமான பாதிப்புகளில் 84 சதவீதம் வெள்ளம், வறட்சி, வெப்பமண்டல சூறாவளியால் ஏற்பட்டவைதான்.
 இந்தியாவில் பேரழிவு பாதிப்பு எதைச் சார்ந்தவையாக உள்ளது?
 அமைவிடம், சீதோஷ்ண மண்டலம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் போது உலகில் அதிகம் பேரழிவு ஆபத்திலிருக்கும் பகுதியாக இந்தியா உள்ளது. நாட்டின் நிலப் பரப்பில் 54 சதவீதம் பகுதி புவி அதிர்ச்சிக்கும், 40 மில்லியன் ஹெக்டேர்கள் வெள்ளப் பாதிப்புக்கும் உள்ளாகும் பகுதியாக உள்ளன.
 இந்தியாவில் நிகழ்ந்த பேரழிவு நிகழ்வுகள் எவை?
 கடந்த 2001, ஜனவரி 26-ஆம் தேதி புஜ் பகுதியில் நிகழ்ந்த பூகம்பத்தில் 13,805 பேர் உயிரிழந்தனர். 2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த சுநாமிப் பேரலையால் 10,749 பேர் மாண்டனர். 5,640 பேர் காணாமல் போயினர். இப்பேரழிவால் தெற்குக் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. நாட்டின் கிழக்கு கடலோரத்தில் ஒரிசாவில் நிகழ்ந்த சூப்பர் சூறாவளியில் 9,893 பேர் இறந்தனர். உலக வங்கி (2003-ஆம் ஆண்டு) நடத்திய ஆய்வில் இயற்கைப் பேரழிவுகள் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கும் தடைக்கல்லாக இருந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் ஏற்பட்ட "தானே' புயல் பாதிப்பு கள ஆய்வு அனுபவம் குறித்து...?
 தமிழகத்திலும், புதுச்சேரியிலும் "தானே' புயல் தாக்கியதன் விளைவாக 53 பேர் உயிரிழந்தனர். கடலூர், புதுச்சேரி பகுதிகளில் பெரிய அளவிலான சொத்துகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட ஆய்வுக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். 2012, ஜனவரி 16 முதல் 21-ஆம் தேதி வரை ஆய்வு செய்து தகவல்கள் திரட்டினோம்.
 மாவட்ட நிர்வாக அமைப்புகள் மட்டுமின்றி, புயல் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் மற்றும், 8 கடலோர கிராம மக்களிடமும் கலந்துரையாடினோம். புதுச்சேரியில் உள்ள அவசரகால நடவடிக்கை மையத்திற்கும் சென்றோம். தொடர்ச்சியாக மக்களிடம் கருத்தறியப்பட்டது. மக்களிடம் பேசிய போது, "தானே' புயல் தாக்குவதற்கு முன்பு அது குறித்த எச்சரிக்கை பற்றி பெரும்பாலும் அறிந்திருந்தனர் என்பது கள ஆய்வின் போது தெரியவந்தது.
 பேரழிவால் ஏற்படும் பிற பாதிப்புகள் எவை?
 அடிக்கடி நிகழும் பேரழிவுகள் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு
 பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பேரழிவுகள் உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஏழ்மை நிலைமையை மேலும் அதிகப்படுத்துவதாக உள்ளது.
 இந்தியாவில் பேரழிவு மேலாண்மையின் வளர்ச்சி எப்படி உள்ளது?
 பேரிடர் மேலாண்மைக்கான தலைமை அமைப்பாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) உள்ளது. மத்திய அரசால் "பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005' உருவாக்கப்பட்ட பிறகு இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பேரிடர் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான கொள்கைகள் உருவாக்கப்
 பட்டுள்ளன.
 வெள்ளம், வறட்சி, சூறாவளி, ரசாயன பேரழிவு போன்றவை தொடர்பாக வழிகாட்டும் நெறிமுறைகளை என்.டி.எம்.ஏ. அளித்துள்ளது. இந்த அமைப்பின் கீழ் தேசியப் பேரழிவு மீட்புப் படை (என்டிஆர்எஃப்) அமைக்கப்பட்டுள்ளது. உடனடி மீட்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 10 பட்டாலியன் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்படையில் பயிற்சி பெற்ற வீரர்கள் மொத்தம் 10,400 பேர் உள்ளனர். அதில் ஒரு பட்டாலியன் தமிழகத்தில் அரக்கோணத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
 பேரிடர் மேலாண்மைச் சட்டம் மூலம் பல்வேறு மாநில அரசுத் துறைகளின் அதிகாரிகளின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி
 களை என்.ஐ.டி.எம். நடத்தி வருகிறது.
 இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்படும் வானிலை எச்சரிக்கைகள் மிகவும் துல்லியமானவை. "தானே', "அய்லா' போன்ற அண்மையில் நிகழ்ந்த புயல் தொடர்பான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் அரசு நிர்வாகத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்தன. சுநாமிக்குப் பிறகு இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் ஒன்றுதான் தேசிய கடல்சார் தகவல் அமைப்பு முறைக்கான மையம் (ஐஎன்சிஓஐஎஸ்). மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாதில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 அக்டோபர் 2007-இல் இருந்து செயல்பட்டு வரும் இந்த மையம், வானிலை, சீதோஷ்ணநிலை தொடர்பான நிகழ்நேர தகவல்களையும், புள்ளிவிவர ஆய்வையும் தரவல்ல உள்கட்டமைப்புகள் அமையப் பெற்ற சர்வதேச தரத்திலான மையமாகும்.
 - வே.சுந்தரேஸ்வரன்
 படம்: டி.ராமகிருஷ்ணன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com