சமூக சேவையே உயிர் மூச்சு!

ராமநாதபுரத்தில் தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்கும் இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் சமூக சேவையின் மகத்துவத்தை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்
சமூக சேவையே உயிர் மூச்சு!

ராமநாதபுரத்தில் தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்கும் இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் சமூக சேவையின் மகத்துவத்தை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் மதுரை கோரிப்பாளையத்தில் கியூர் அறக்கட்டளையை நடத்தி வரும் வி.பி.இளையபாரி. தொண்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டு சிறந்த மனித நேய மருத்துவர் என டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி விருதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தாதேவி அவருக்கு வழங்கியிருக்கிறார். தொடர்ந்து 10 ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் சிறந்த ரத்ததானக் கொடையாளர் விருது உட்பட 20-க்கும் மேற்பட்ட சமூக சேவகர் விருதுகளையும் பெற்றவர். அறுவைச் சிகிச்சை கருவிகள் விற்பனை செய்து வந்த இவர் தற்போது அந்தத் தொழிலையே விட்டு விட்டு, முழுநேரமும் சமூக சேவைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.
 உடல் தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம், ரத்த தானம் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்தல், மதுப் பழக்கத்திலிருந்து மனிதர்களை விடுவித்தல், சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு அதிகச் செலவில்லாமல் இயற்கை மருத்துவம் மூலம் பலரையும் காப்பாற்றுதல் என இவரது சேவைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவரிடம் பேசினோம்:
 ""1980 முதல் தொடர்ந்து 33 ஆண்டுகளாகப் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறேன். கடந்த 2005-இல்தான் கியூர் அறக்கட்டளையை உருவாக்கினேன். எனது தாத்தா சிவகங்கை மாவட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி சேது ராமச்சந்திரன். அவரது சேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட நானும், தேசத்திற்கு எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக சமூக சேவை செய்யத் தொடங்கினேன்.
 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் போக்குவரத்து விதிமுறைகள், நல்லொழுக்கக் கல்வி, சுகாதாரக் குறிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டு வழிகாட்ட ஆளின்றி தவித்த எத்தனையோ ஏழைகளுக்கு அவர்களை நேரில் சந்தித்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, தேவைப்பட்டால் பொருள் உதவியும் செய்து காப்பாற்றியிருக்கிறேன். இந்த உதவியில் எனக்கு மறக்க முடியாத சம்பவங்களும், அனுபவங்களும் அதிகம்.
 மதுரை, சென்னை அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்ற சடலங்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவற்றை நல்லடக்கம் செய்துள்ளேன். மூளைச்சாவு ஏற்பட்டவரின் குடும்பத்தினரிடம் பேசி, உடல் உறுப்புகளைப் பெற்று, அவற்றை பிறருக்குப் பொருத்தியிருக்கிறோம்.
 ஆதரவற்ற குழந்தைகளை இனம் கண்டு அவர்களை வசதியானவர்களின் வீடுகளில் தங்க வைத்து அவர்களின் பாதுகாவலனாகவும் உள்ளேன்.
 கிட்னி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜிஞ்சர் தெரபி என்ற இயற்கை மருத்துவம் ஒன்றை இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தோம். இந்த மருத்துவ முறையை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அம் மருத்துவத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்கிற அனைத்து விவரங்களையும் இணையத்தில் யூ.டியூப்பிலும், பேஸ்புக்கிலும் போட்டு வைத்
 துள்ளோம்.
 சித்தர்கள் கண்டறிந்த இந்த ஜிஞ்சர் தெரபி முறையைப் பயன்படுத்தினால் எந்த சிறுநீரக நோயாளியும் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. பக்க விளைவுகள் இல்லை. முக்கியமாக டயாலிசிஸ் செய்யத் தேவையில்லை. இம் மருத்துவத்தால் மட்டுமே இதுவரை 532 பேரை காப்பாற்றி இருக்கிறோம். இச் சேவைக்கு எனக்கு சங்கரநாராயணன் என்ற விஞ்ஞானியும் பேருதவியாக இருந்து வருகிறார்.
 தொடர்ந்து 25 ஆண்டுகளாக பலரிடம் ரத்தம் தானமாக பெற்று பலருக்கும் வழங்கியுள்ளேன்.
 சமூக சேவைக்காக மட்டுமே எனது ரூ. 25 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அர்ப்பணித்திருக்கிறேன். இப்போது என்னிடம் போதுமான பொருளாதார வசதி இல்லையென்றாலும், மருத்துவ உதவி தேவைப்படும் எந்த ஏழையும் என்னிடம் தொடர்பு கொண்டால், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com