Enable Javscript for better performance
ஊர் கூடித் தமிழ் வளர்ப்போம்!- Dinamani

சுடச்சுட

    

    ஊர் கூடித் தமிழ் வளர்ப்போம்!

    By  க.தங்கராஜா  |   Published on : 09th June 2013 09:04 AM  |   அ+அ அ-   |    |  

    16

    சேலம் கந்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் எஸ்.பார்வதி. தமிழ் இலக்கியம் படித்துள்ள பார்வதி தமிழ் விக்கிபீடியா இணையதளத்தின் நிர்வாகியாக உள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு இ-மெயில் வசதிக்காக இணையம் இவருக்கு அறிமுகமாகியுள்ளது. நாவல் அரசி வை.மு.கோதைநாயகி அம்மாளைப் பற்றிய ஒரு குறிப்புக்காக 2010-ம் ஆண்டு தமிழில் தேடுபொறியில் தேடும்போது, தமிழ் விக்கிபீடியா குறித்து அறிந்தார்.
     தமிழ் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிபீடியாவில் ஆங்கிலத்தை ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவிலேயே கட்டுரைகள் இருப்பதை அறிந்த பார்வதி, இணையத் தமிழ் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பாக விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் முயற்சியில்
     ஈடுபட்டார்.
     இனி அவரே சொல்கிறார்:
     
     ""சீன தேசத்தைப் பற்றி நான் எழுதிய முதல் கட்டுரை, ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டிருந்ததால் அழிக்கப்பட்டது. எனது கட்டுரை ஆர்வத்தை அறிந்த பிற கட்டுரையாளர்கள் இணையம் மூலமாகவே கலைக்களஞ்சியத்துக்கு கட்டுரை எழுதுவது, தலைப்பிடுவது, உள்ளீடு செய்வது உள்ளிட்ட விவரங்களைக் கற்றுக் கொடுத்தனர்.
     அதன் பிறகு ஆன்மிகம், சிற்றிலக்கியம், 108 வைணவத் தலங்கள், நோபல் பரிசு பெற்ற பிரபலமாகாத அறிவியல் அறிஞர்கள் என பல்வேறு தலைப்புகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழில் எழுதினேன்.
     இதைத் தவிர சிறுவர்களுக்கான தமிழ் கதைகள், நீதிக் கதைகள் என 12 கதைகளையும் எழுதியுள்ளேன்.
     "விக்கி- பொதுவகம்' என்ற அரிய புகைப்பட சேமிப்பு வங்கிக்கு 700 புகைப்படங்களை வழங்கி, விக்கி ஊடகப் போட்டி 2012-க்கான தொடர் பங்களிப்பாளர் விருது பெற்றேன்.
     தமிழ் விக்கிபீடியாவுக்கு அளித்த தொடர் பங்களிப்பால் இப்போது விக்கிபீடியாவின் நிர்வாகியாகவும் முன்னேறியுள்ளேன்.
     புதிய பதிவாளர்களின் கட்டுரைகளைத் திருத்தம் செய்வது, கூடுதல் விவரங்களைச் சேர்த்து கட்டுரையை முழுமையாக்குவது, தேவையற்ற கட்டுரைகளை அழிப்பது உள்ளிட்டவை எனது பணிகளாகும். தமிழ் விக்கிபீடியாவின் முதல் பக்கத்துக்காக ஓணம், வலசை போதல் (விலங்கினங்களின் இடம்பெயர்வு), கணிதமேதை கப்ரேக்கர் உள்ளிட்ட 30 கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.
     புதிய புதிய கட்டுரைகளை தமிழில் எழுத வேண்டும் என்பதற்காக இதுவரை 500-க்கும் மேற்பட்ட நூல்களைப் படித்துள்ளேன். எனது கட்டுரைகளுக்காக தமிழ் நூல்களையே முதல் தரவு தளமாகக் கொண்டிருக்கிறேன்.''
     கூடுதல் விவரங்களுக்காக இணையதளம், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் உள்ள விக்கிபீடியாக்களையும் தேடுவதாகக் கூறுகிறார்.
     ""உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் தமிழ் விக்கிபீடியாவுக்கு கட்டுரைகளை பங்களிப்பு செய்ய பதிவு செய்திருந்தாலும் தொடர் பங்களிப்பில் உள்ளவர்கள் என்னவோ வெறும் 275 பேர் மட்டுமே. இவர்கள் இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள், இலங்கை, ஆஸ்திரேலியா, நார்வே, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
     தமிழறிவுடன் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இருந்தாலே நல்ல தமிழ் கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய முடியும். இணைய கட்டுரை எழுதுவதில் பெண்களுக்கான இடம் இன்னும் காலியாகவே உள்ளது. என்னையும் சேர்த்து மொத்தம் 4 பெண் பதிவர்களே இருக்கின்றனர். அவர்களில் இருவர் நிர்வாகியாகவும் பொறுப்பு வகிக்கின்றனர். இதில் வயது வரம்பின்றி கட்டுரைகளை பதிவு செய்யலாம், தற்போது 13 வயது முதல் 80 வயதானவர்கள் வரையிலும் தமிழில் கட்டுரை எழுதுகின்றனர்.
     விக்கிபீடியாவுக்கு அதிக பங்களிப்பு செய்யும் விக்கிபீடியன்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் "விக்கிமேனியா' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த 2006 முதல் தமிழ் விக்கிபீடியா செயல்பட்டு வருகிறது. அதில் தற்போது சுமார் 53,600 தமிழ் கட்டுரைகள் உள்ளன.
     "விக்கிமேனியா' கூட்டத்தில் அடுத்து வரும் ஆண்டுக்கு திட்டமிடுவது, கட்டுரை சமர்ப்பித்தல், புதிய பதிவர்களை ஈர்க்க திட்டமிடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.
     கடந்த 2009-ம் ஆண்டு முதல் தமிழ் விக்கிபீடியன்கள் இந்த விக்கிமேனியாவில் பங்கேற்று வருகின்றனர். 2013-ம் ஆண்டுக்கான விக்கிமேனியா வரும் ஆகஸ்ட் 9 முதல் 11-ம் தேதி வரை ஹாங்காங்கில் நடைபெற உள்ளது. இதில் நான் கலந்து கொள்ள உள்ளேன். என்னுடன் அறிஞர் செங்கை பொதுவன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
     விக்கிபீடியாவுக்கு கட்டுரை எழுதுவதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. எனவே கட்டுரை எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் பல பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளேன். மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் தொடர்ந்து அவர்களின் பங்களிப்பை கேட்டும் வருகிறேன்'' என்று கூறும் பார்வதியின் கணவர் என்.நாராயணன் ஓர் ஆன்மிக சொற்பொழிவாளர்.
     பார்வதியைத் தொடர்ந்து இவரது மகள் அபிராமியும் விக்கிபீடியாவில் கட்டுரைகளைத் தொகுக்கத் தொடங்கியுள்ளார். ஓக் மரம், பாகவதம், நளாயினி உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்கள் குறித்த கட்டுரைகளை பதிவேற்றி வரும் அபிராமி பத்தாம் வகுப்பு மாணவி.
     க.தங்கராஜா
     படம்: பா. விஜயகுமார்
     
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp