ஒரு தலைமைக் காவலரின்மனித நேயம்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உளவுப்பிரிவுக் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகின்றார் 40 வயதுள்ள
ஒரு தலைமைக் காவலரின்மனித நேயம்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உளவுப்பிரிவுக் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகின்றார் 40 வயதுள்ள சுபாஷ் சீனிவாசன். கடந்த 1997இல் காவலராகப் பணியில் சேர்ந்த இவர், வீரதீர செயலுக்கான முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 3.10.2013 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா
1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தவிர உளவுப்பிரிவு ஐ.ஜி.அம்ரேஸ்பூஜாரியும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டியிருக்கிறார்.
முன்னாள் டி.ஜி.பி.தேவாரம், தமிழக கடலோரக் காவல் குழும ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு, உளவுப்பிரிவு எஸ்.பி. பாண்டியன் ஆகியோரும் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளனர். தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் அவரைச் சந்தித்து பேசினோம்..
""நான் வசிக்கும் தேவிபட்டிணம் வடக்குத் தெருவில் தரை மட்ட அளவில் பாழடைந்த நிலையில் கிணறு ஒன்று உள்ளது. அக்கிணற்றுக்கு 3 வயது சிறுமி மகேசுவரியும் அதன் பெரியம்மா வசந்தியும் தண்ணீர் எடுக்க சென்றுள்ளனர். அப்போது சிறுமி மகேசுவரி தவறி கிணற்றுக்குள் விழுந்து விடவும், அதைப் பார்த்து பதறிப்போன சிறுமியின் பெரியம்மா வசந்தி சிறுமியைக் காப்பாற்ற அவரையும் அறியாமல் கிணற்றில் குதித்து விட்டார். கிணற்றின் மொத்த ஆழம் 25 அடியில் தண்ணீர் மட்டும் 10 அடி இருந்திருக்கும். இருவருமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டும் உயிர் பயத்தில் அலறிக் கொண்டும் இருந்துள்ளனர்.
வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் அலறல் சத்தம் கேட்கிறதே என்று கிணற்றைப் பார்த்த போது இருவரும் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்து எனது நெஞ்சம் பதைபதைத்தது. உடனடியாக சற்றும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்து விட்டேன். ஆனால் எனக்கு நீச்சல்
தெரியாது.
எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று நினைத்துத் தான் ஏதோ ஒரு தைரியத்தில் கிணற்றுக்குள் குதித்து விட்டேன். நான் வேகமாக ஓடிச்சென்று,கிணற்றுக்குள் குதிப்பதை பார்த்து விட்ட சிலர், ஓடி வந்து எங்கள் 3 பேரையும் காப்பாற்ற முடிவு செய்து கிணற்றுக்குள் ஒரு சேலையின் முனையை விட்டனர். மறுமுனையை அவர்கள் கையில் பிடித்துக் கொண்டனர். தண்ணீருக்குள் தத்தளித்த சிறுமியை முதலில் மீட்டு சேலையில் கட்டிக் கொண்டேன். பின்னர் வசந்தியை கிணற்றின் உட்பகுதியில் இருந்த ஒரு சிறு விளிம்பில் மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீரிலிருந்து மீட்டு அதில் உட்கார வைத்தேன். முதலில் நானும் சிறுமியுமாக சேலையின் மூலமாக கிணற்றுக்குள்ளிருந்து வெளியில் வந்தோம்.
சிறுமியைக் கிணற்றுக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வந்து விட்டு பிறகு மெதுவாக மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி வசந்தியை அதே சேலையின் மூலம் கட்டி வெளிக்கொண்டு வந்தோம்.பின்னர் நான் கிணற்றுக்குள்ளிருந்து வந்தேன். வசந்தி மிகவும் ஒல்லியானவராக இருந்ததால் மேலே இருந்தவர்களும் வெகுவாக இழுத்து தூக்கி விட்டார்கள். ஒரே நேரத்தில் இரு உயிர்களும் காப்பாற்றப்பட்டன.
எனது செயலைக் கேள்விப்பட்ட உளவுப்பிரிவு ஐ.ஜி.அம்ரேஷ்பூஜாரி ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். அத்தொகையினை தேவிபட்டிணம் ஸ்ரீதிலகேசுவரர் ஆலயத்தில் அர்ச்சகராக இருக்கும் ஏழ்மை நிலையில் இருந்த ரவிசாஸ்திரி குருக்களின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவச் செலவுக்காக கொடுத்து உதவி செய்தேன்.
அவர் அண்மையில் உயிரிழந்து விட்டார். தற்போது எனக்கு முதல்வர் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.
அத்தொகை கிடைத்தவுடன் அதனை முதலீடாக வைத்தும்,மீதித் தொகைக்கு வங்கியில் கடனுதவி பெற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் வாங்கப் போகிறேன்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் விபத்துக்களால் பாதிக்கப்பட்டோரின் உயிரையும்,உடமைகளையும் பாதுகாக்க அந்த வாகனம் இலவச சேவை செய்யும்.
தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம்-2023 என்ற கருத்தை மையமாக வைத்து தேவிபட்டிணம் ஸ்ரீதிலகேசுவரர் ஆலயத்தின் உட்புறத்தை சுத்தம் செய்து பூங்கா ஒன்றும் அமைத்துள்ளேன். தேவிபட்டிணம் பேருந்து நிலையத்தில் கோடை காலங்களில் நீர்,மோர் பந்தல் அமைத்து பலரின் தாகத்தையும் தீர்த்து வருகிறேன்'' என்கிறார் சுபாஷ் சீனிவாசன்.




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com