Enable Javscript for better performance
ஏழு ஸ்வரங்களில்... - Dinamani

சுடச்சுட

  
  12

  இந்திய இசையின் நுணுக்கங்களைப் பயின்றுவிட்டால், உலகின் எந்த இசையையும் எளிதில் கற்றுத் தேர்ந்து விடலாம். ஏழு ஸ்வரங்களையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள உதவும் ஒரே வாத்தியக் கருவி வீணைதான். உருவ அமைப்பின் காரணமாக அதனை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தினால் மெல்ல மெல்ல இந்த அற்புதமான வாத்தியம் வழக்கொழிந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த உயர்ந்த வாத்தியத்தை முழுவதுமாக ஸ்வீகரித்து, அதன் மேல் ஆளுமை கொண்டு ரசிகர்களைக் கவர்ந்த கலைஞர்கள் சிலர் இல்லாமல் இல்லை. அந்த சிலரில் காயத்ரி முதன்மையானவர். ஆறு வயது முதலே அரங்கத்தில் இசைக்கத் தொடங்கி இப்போதும் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். இவர் பெயர்கூட வீணையிலிருந்து பிரிக்கமுடியாமல் இணைந்துவிட்டது வீணை காயத்ரி என்று. சிறந்த வீணைக்கலைஞரான கமலாவிற்கும், தெலுங்கு திரையுலகில் இசையமப்பாளராக கோலோச்சிய அஸ்வத்தாமாவிற்கும் மகளாகப் பிறந்த இவருக்கு இசை இயல்பாகிப் போனதில் ஆச்சர்யம் இல்லை! இன்று வீணைகாயத்ரி இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். அவரே தொடர்கிறார்...
   ""இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே கொலுசு அணிந்த எனது பிஞ்சுக் கால்களால் நான் எந்த தாளத்தையும் சரியாகப் போடுவதைக் கண்டு எனது பெற்றோர் அதிசயித்தனராம். வீணையின் நீண்ட வடிவம் கைக்கு எட்டாதபோதும் தொடர்ந்து நான்கு, ஐந்து மணி நேரம் வீணை வாசிப்பதை நிறுத்தமாட்டேன். எனக்குள் கனன்று கொண்டிருந்த இசைதாகத்தை என் பெற்றோர் புரிந்து கொண்டனர். எனது தாய் கமலாவும், தந்தை அஸ்வத்தாமாவும் எனது குருவாக அமைந்தனர். ஆறு வயதிலேயே சிறிய அளவில் கச்சேரிகள் செய்யத் தொடங்கினேன். ஒன்பதாவது வயதில், பேராசிரியர் இராமநாதன் போன்ற இசை வல்லுநர்கள் முன்னிலையில், முறையான கச்சேரி செய்து பாராட்டுதல்கள்
   பெற்றேன்.
   அதன்பின், ஆர்வத்துடன் அலுப்பின்றி செய்த பயிற்சியும் கைகோக்க, இசையுலகில் மேலும் முன்னேறினேன். பேபி காயத்ரி என்ற செல்லப் பெயருடன் வலம் வந்த நான், நாளடைவில் வீணை காயத்ரி என அழைக்கப்பட்டேன்.
   இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் கச்சேரி நிமித்தம் பயணம். பாலரத்னா, வீணாகான வினோதினி, யாழ்இசைச்செல்வி, நாதசுதார்ணவா, இசைப்பேரொளி, சங்கீதகலா நிபுணா, யுகாதி புரஸ்கார், சங்கீதகலா சிகாமணி... என்று எனதுப் பட்டப் பட்டியல் மிக நீண்டது. தினமணி கூட "பூமிக்கு வந்த ஸரஸ்வதி' என்று என்னைப் பாராட்டியதை மறக்க முடியாது.
   தவிர, தமிழக அரசின் கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாதமி விருது, பல ஆதீனங்களின் ஆஸ்தான கலைஞர் விருது போன்ற உயர்ந்த விருதுகளை மிகச் சிறிய வயதிலேயே நான் பெற்றேன். இந்திய கலை மற்றும் கலாசார வளர்ச்சி அமைப்பின் உறுப்பினர், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவின் பொறுப்பாளர், திருவயாற்றிலுள்ள தியாகப் பிரும்ம கான சபையின் ஆலோசகர், தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் 2013ஆம் ஆண்டு தமிழக அரசு இசை மற்றும் நுண்கலைளுக்கென ஒரு பல்கலைக் கழகம் உருவாக்கி, அதன் முதல் துணை வேந்தராக தமிழக முதல்வர் என்னை நியமித்திருக்கிறார்.
   இந்த பல்கலையின் கீழ் எட்டு இசைக் கல்லூரிகள் இயங்குகின்றன. அவற்றில் மகாபலிபுரத்திலுள்ள சிற்பக்கல்லூரியும் ஒன்று. ஒரு முழுமையான இசைக் கலைஞராக மாணவர்கள் உருவாகும் வகையில் பாடத்திட்டத்தில் பல புதுமைகள் செய்ய வேண்டும் என நினைத்தேன். முதுகலை(எம்.ஏ) பட்டம், முதுகலை டிப்ளமோ, மற்றும் ஆராய்ச்சி (பி.எச்.டி) ஆகியவற்றை இந்த பல்கலை அளிக்கிறது. முதுகலையில் இசையை முக்கிய பாடமாக எடுக்கும் மாணவர் தனது துணைப் பாடமாக வயலின், வீணை, புல்லாங்குழல் தவிர மிருதங்கம், தவில் போன்றவையும் கற்கலாம். மியூசிகாலஜி எனப்படும் இசையறிவு துறையும் எடுக்கலாம். மேலும் பரதநாட்டியம், டிஜிடல் புகைப்படக்கலை, விஷுவல் கம்யூனிகேஷன் இவற்றையும் படிக்கலாம். இதன் மூலம் இசையைப் பதிவு செய்வதில் உள்ள நவீன யுக்திகளை மாணவப் பருவத்திலேயே தெரிந்து கொள்ளமுடியும். தவிர, துணைப்பாடமாக பரத நாட்டியம் பயின்றால், படிப்பு முடிந்ததும் நாட்டியத்திற்கு மேடைப் பாடகராக ஒரு பணியும் அமைத்து கொள்ளலாம்'' என்கிறார் வீணை காயத்ரி.
   இந்த பல்கலையின் தேர்வுக்கட்டுப்பாட்டாளராக பொறுப்பேற்றுள்ளவரும், தற்போது ராணி மேரி கல்லூரியின் இசைத்துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவருமான டாக்டர் எம்.ஏ.பாகீரதி இசைப் பல்கலைக் கழகம் குறித்து மேலும் விளக்கினார்:
   ""இதில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இசை மற்றும் கலைகளின் மேற்படிப்பு, ஆராய்ச்சி, ஆவணங்கள் பதிப்பித்தல், ஒலி ஒளி நாடாக்கள் வெளியிடுதல் போன்ற பல புதிய வழிமுறைகள் கையாளப்படவிருக்கின்றன. மேலும் அனிமேஷன், இதழியல், ஒலி பதிப்பித்தல் ஆகியனவும் உண்டு. உலகெங்கும் பின்பற்றப்படும் கிரெடிட் சிஸ்டம் என்னும் மதிப்பெண் பெறும் முறையும் உண்டு. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். மும்மூர்த்திகள் கீர்த்தனைகள் தவிர தமிழ்ப்பாடல்கள், தேசபக்தி பாடல்கள், நடனத்திற்கான கீர்த்தனைகள் ஹரிகதா, அன்னமாச்சார்யா கிருதிகள், பஜனைப் பாடல்கள் என பாடத்திட்டத்திலும் பயிற்சி முறையிலும் புது முயற்சிகள் இடம் பெறுகின்றன. மாணவர்கள் வாரந்தோறும் ஒரு கச்சேரி நிகழ்த்த வேண்டும். மைக் வசதி இருப்பதால் பாடிப்பழகுவது அவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். வாரம் ஒருமுறை செயல் முறை விளக்கம் அளிக்கவும் பயிற்சி தரப்படும். இந்தப் பயிற்சி இதுவரை எந்த கல்லூரியிலும் அளிக்கப்படாதது. தவிர, புல்லாங்குழல், தவில் போன்ற இசைக் கருவிகளுக்கு எம்.ஏ முதுகலை பட்டமும் எந்தப் பல்கலைக் கழகமும் இதுவரை ஏற்படுத்தவில்லை.
   மேலும் திருநங்கைகளுக்கு இங்கு பயிலும் வாய்ப்பு தரப்படும். பரதம் பயிலும் ஆண் பெண்களுக்கென தனித்தனி அறைகள் இருப்பதுபோல் இவர்களுக்கென தனிஅறை வசதி உண்டு. மேலும் இசை பயில வரும் முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் படியேறவேண்டிய அவசியம் இன்றி மேடை(ராம்ப்) அமைக்கப்படும். நூலகத்தில் பார்வையற்றோருக்காக பிரெய்ல் வசதியும் உண்டு என்றார். மேலும், இசை கற்கும்போது மற்ற வகுப்பறைகளிலிருந்து வரும் ஒலி மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாதவாறு ஒவ்வொரு வகுப்பறையும் ஒலி கடத்தாத விதத்தில் ஸவுண்ட் புரூப் ஆக அமைக்கப்பட இருக்கின்றன'' என்றும் கூறினார்.
   சரியான தருணத்தில், தமிழக அரசு, கலைகளுக்கென்றே ஒரு பல்கலை கழகத்தை உருவாக்கியிருக்கிறது. இதை மிக சரியான முறையிலும் சிறப்பான வகையிலும் நடைமுறைப்படுத்த ஆவல் கொண்டிருக்கிறார் இதன் முதல் துணைவேந்தரான வீணை காயத்ரி.
   } சந்திரிகா ராஜாராம்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai