Enable Javscript for better performance
முயற்சி...  முயற்சி...  வெற்றி!- Dinamani

சுடச்சுட

    

    முயற்சி...  முயற்சி...  வெற்றி!

    Published on : 20th July 2014 08:48 AM  |   அ+அ அ-   |    |  

    13

    ஒரு தொழிலாளி தனது வாழ்வில் எத்தகைய இன்னல்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியுள்ளது என்பதை ஒரு தொழிலாளியின் மகனாக இருந்து அனுபவித்த அண்ணாதுரை, இன்று எத்தனையோ லட்சம் தொழிலாளர்களின் துயர் துடைக்கும் உயர் அதிகாரியாக உயர்ந்துள்ளார் என்பது சாதாரண விஷயமல்ல.
     57 தொழிலாளர் உதவி ஆணையர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்டத் தேர்வின் முடிவை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் வெளியிட்டது. இதில், அகில இந்திய அளவில் 33-ஆவது இடத்தையும், தமிழக அளவில் 2-ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் அண்ணாதுரை.
     இத்தகைய சாதனைக்குச் சொந்தக்காரரான அவரை நாம் சந்தித்தோம். அவர் எப்படி இந்த வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடித்தார்? இதோ அவரே மனம் திறக்கிறார்:
     ""தேனி மாவட்டம், பெரியகுளம்தான் எனது சொந்த ஊர். எனது தந்தை சன்னாசி, தாய் சுருளியம்மாள் இருவருமே கூலித் தொழிலாளர்கள். எனக்கு 2 சகோதரிகள், 5 சகோதரர்கள். எனது பெற்றோர் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கும் பணம் குடும்பத்தை நடத்தவே போதுமானதாக இருந்தது. இருப்பினும், தனது பிள்ளைகளை எப்படியாவது நன்கு படிக்க வைத்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதில் எனது தந்தையும், தாயும் உறுதியாக இருந்தனர். அதனால், அவர்கள் சந்திக்கும் கஷ்டம் எங்களுக்குத் தெரியக் கூடாது, எங்களது படிப்பு பாதித்துவிடக் கூடாது என்று நினைத்தார்கள். இருப்பினும், எங்களது பெற்றோர் பட்ட கஷ்டத்தை உணர்ந்துதான் நான் வளர்ந்தேன்.
     நான் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பெரியகுளத்தில் உள்ள பாரதியார் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். நான் 11-ஆம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் மின்சார வசதி கிடையாது. மண்ணெண்ணெய் விளக்கில்தான் படித்தேன். அதன் பின்னர், மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் பட்டய ஆசிரியர் படிப்பை முடித்தேன்.
     கல்லூரி வாழ்க்கை என்பது எனக்கு வெறும் கனவுதான். கல்லூரியின் படிக்கட்டுகளைக்கூட மிதித்ததில்லை. குடும்பச் சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி வாயிலாக பி.ஏ. தமிழ் இலக்கியம்
     படித்தேன்.
     2009-ஆம் ஆண்டு எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்தது. தேனி மாவட்டம், மயிலாடும் பாறை ஒன்றியத்தில் அரசரடியில் உள்ள ஊராட்சிப் பள்ளியில்தான் முதலில் ஆசிரியராகப் பணியாற்றினேன். தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரியாக விரும்பினேன்.
     இந்தத் தருணத்தில் ஐஏஎஸ் அதிகாரியான கோலப்பனைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தச் சந்திப்பு என்னுள் இருந்த ஐஏஎஸ் கனவை விரைந்து நனவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகரித்து. இதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் போட்டித் தேர்வுக்குத் தயாராவது குறித்து தகவலைத் திரட்டினேன். நகர்ப்புறப் பகுதியில் இருந்தால் மட்டுமே அதற்கான வசதிகள் கிடைக்கும் என்று அனைவரும் கூறியதால், திருவள்ளூர் மாவட்டத்துக்குப் பணியிட மாறுதல் பெற்றேன். கதிர்வேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து கொண்டே சென்னையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானேன். ஐஏஎஸ் தேர்வு பாடத் திட்டத்துக்குரிய புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன. நான் முதல் வகுப்பில் இருந்து ஆசிரியர் படிப்பு வரை தமிழ் வழியிலேயே படித்ததால், ஐஏஎஸ் தேர்வுக்கான புத்தகத்தில் ஒரு வரிகூட புரியவில்லை. இருப்பினும், நான் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அகராதியின் துணையுடன் மெல்ல ஆங்கிலத்தைக் கற்க முயற்சித்தேன்.
     2004-இல் ஆரம்பித்த எனது முயற்சி ஒவ்வோர் ஆண்டும் தோல்வியையேச் சந்தித்தது.
     2010-வுடன் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் எனக்கு முடிந்துவிட்டன. என்றாவது ஒரு நாள் ஐஏஎஸ் அதிகாரியாவோம் என்ற கனவு தகர்ந்தது.
     இதனிடையே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் 2009-ஆம் ஆண்டு வெற்றி பெற்றேன். தலைமைச் செயலகத்தில் உள்துறையில் உதவிப் பிரிவு அலுவலராகப் பணியில் சேர்ந்தேன். இருப்பினும், யுபிஎஸ்சி நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று உயரதிகாரியாக வேண்டும் என்று விரும்பினேன். இந்த நிலையில்தான், மத்திய தொழிலாளர் நலத் துறைக்கு நேரடியாக 57 உதவி ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு தீவிரமாகத் தயாரானேன். இந்த உதவி ஆணையர் தேர்வானது ஐஏஎஸ் தேர்வில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தத் தேர்வில் சட்டம் சார்ந்த கேள்விகளே இடம் பெற்றிருக்கும். இந்தத் தேர்வுக்கு தயாராவதற்கு, சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற எனது மனைவி மீரா பெரும் உதவியாக இருந்தார். நம்பிக்கையுடன் தேர்வு எழுதினேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். இந்த நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். தாய் மொழியில் பேச அனுமதி கிடையாது. தமிழ் மட்டுமே தெரிந்த எனக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தத் தருணத்தில் கேரளத்தில் உள்ள ஓர் ஆங்கிலோ இந்தியரை எனது மனைவி அறிமுகப்படுத்தி வைத்தார். அவருடன் 15 நாள்கள் தங்கியிருந்து பயிற்சி பெற்றேன். அப்போதுதான் நேர்முகத் தேர்வை ஆங்கிலத்தில் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. அதேபோல, ஆங்கிலத்தில் நேர்முகத் தேர்வை தைரியமாகச் சந்தித்தேன்.
     தேர்வு முடிவு வெளிவந்த போது அகில இந்திய அளவில் 33-ஆவது இடத்தையும், தமிழக அளவில் 2-ஆவது இடத்தையும் நான் பிடித்து சாதனை படைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். எனது வாழ்வில் இந்த வெற்றி மிகப் பெரியதுதான். ஆனால், நான் இப்படியொரு நிலையை அடைய வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எனது தந்தை இப்போது என்னுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கு இல்லை. அவர் கடந்த ஆண்டு விபத்தில் மரணமடைந்துவிட்டார். இந்தத் துயரைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது வெற்றியை எனது பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என்றார் அண்ணாதுரை. வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு இந்த அண்ணாதுரையும் ஒரு முன்னுதாரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
     - நீதி செங்கோட்டையன்
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp