3 லட்சம் செயற்கை கால்கள்!

சென்னை மீனம்பாக்கம் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது விமான நிலையம்தான். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி காலை இழந்தவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது முக்தி.
3 லட்சம் செயற்கை கால்கள்!

சென்னை மீனம்பாக்கம் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது விமான நிலையம்தான். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி காலை இழந்தவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது முக்தி. "முக்தி' என்பது செயற்கைகால் பொருத்தும் இலவச சேவை மையம். கடந்த 30 ஆண்டுகளாக இதனை எந்தவித ஆர்ப்பாட்டமோ, விளம்பரமோ இல்லாமல் நடத்தி வருகிறார் மீனா தாதா. கால்களை இழந்தவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பது மட்டுமல்லாமல் செயற்கை காலை இலவசமாக அளித்து அவர்களை மீண்டும் இந்த உலகில் நடமாடச் செய்கிறார் இவர். இவரது சேவையைப் பாராட்டி அரசு பல விருதுகளையும் இவருக்கு அளித்துள்ளது. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 ""எனக்கு பூர்வீகம் கொல்கத்தா. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டில் ஆக வேண்டிய சூழல். இங்கே வந்தபோது மொழி பிரச்னை இருந்தது. இருந்தாலும் வீட்டில் சும்மா இருப்பது பிடிக்கவில்லை. பரத நாட்டியம் கற்றுக்கொண்டு, பயிற்சி வகுப்புகளும் எடுத்துவந்தேன். குழந்தைகள் வளர்ந்த பிறகு நிறைய நேரம் கிடைத்தது. அதில் தூங்கி பொழுதைக் கழிக்க மனமில்லாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்ன செய்வது?
 திருமணத்திற்கு முன்பு நிறைய சமூக சேவைகள் செய்திருக்கிறேன். அதன் தாக்கம் எனக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. ஒருமுறை ராஜஸ்தான் அசோசியேஷன் மூலமாக ஜெய்ப்பூரில் இருந்து செயற்கை கால்களை எடுத்துக் கொண்டு சென்னை சௌகார்பேட்டையில் நடந்தது. ஜெயின் அசோசியேஷன் கேம்ப்பிற்கு வந்திருந்தேன். அதற்காக 300 செயற்கை கால்களை கொண்டு வந்திருந்தோம். ஆனால் மேலும் 500 பேர் செயற்கை காலுக்காக காத்திருந்தனர். இந்த எண்ணம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதனால் செயற்கை கால் வாங்கி பொருத்திக் கொள்ள முடியாதவர்களுக்கு உதவ நினைத்தேன். இதன் காரணமாக உருவானதுதான் முக்தி. 1986-இல் துவங்கினோம்.
 இதற்காக ராஜஸ்தானுக்குச் சென்று செயற்கை கால்களைச் செய்வதைக் கற்றுக் கொண்டு வந்தோம். அதன்பிறகு நாங்களே செயற்கை கால்களைத் தயாரித்து இலவசமாக வழங்க ஆரம்பித்தோம். லிம்ஸ், கேலிபர் என்ற இரண்டு வகை செயற்கை கால்களைச் செய்கிறோம். லிம்ஸ் என்பது விபத்தில் கால் இழந்தவர்களுக்கு பொருத்துவது. கேலிபர் என்பது போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவது. ஒருநாளில் ஒரு காலை செய்துவிடலாம். ஆனால் மாதத்திற்கு 800 பேருக்கு மேல் செயற்கை கால்கள் தேவை இருப்பதால் உடனடியாக ஈடுகட்ட முடியவில்லை. அதனால் ஒருவர் பதிவு செய்த மூன்று மாதங்களுக்கு பிறகே காலை பொருத்துகிறோம். உடனடியாக தேவை என்பவர்களிடம் 3000 ரூபாய் பெற்றுக் கொண்டு 15 நாளில் காலை செய்து தருகிறோம். இதுவரை 3 லட்சம் பேருக்கு செயற்கை கால் அளித்திருக்கிறோம். எங்களிடம் கால்களை பெற வந்த சிலர் பல ஆண்டுகளாக எங்களிடமே வேலையும் செய்கிறார்கள். விபத்துகளின் மூலம் திடீரென்று காலை இழந்த ஒருவர், அந்த குடும்பத்திற்கே சுமை ஆகிவிடுகிறார். இதனால் அவர்களுடைய அன்றாட கடமைகளை கூட வேறு ஒருவர் உதவி இல்லாமல் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு வாழ்க்கையே வீணாகிவிடுகிறது. இந்த நிலையில் கால் இழந்த ஒருவரை செயற்கை கால் மூலம் எழுந்து நிற்கச் செய்யும்பொழுது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
 முக்தி துவங்கிய ஆரம்பகாலங்களில் கால் இழந்து வருபவர்களைக் கண்டதும் மனதில் பயம், படபடப்பு இருக்கும். கடவுள் ஏன் இவரை இப்படி செய்துவிட்டார் என்று அழுகை கூட வரும். அப்போது மனநல மருத்துவர் சாரதா மேனன் என்னிடம் கூறினார். உடலில் உள்ள ஊனம் ஒரு குறையே இல்லை. மனதில் உள்ள ஊனத்தைதான் முதலில் நிவர்த்தி செய்யவேண்டும். இங்கே கால் இழந்து வருபவர்களுக்கு தேவை முதலில் நம்பிக்கை. அதுதான் அவர்களுக்கு மறுவாழ்வை அளிக்கும். நமது பயமே பெரிய பயமாக இருக்கும் அதிலிருந்து வெளியே வந்துவிட்டால், எதையும் சமாளிக்கின்ற தைரியம் வந்துவிடும் என்றார். அந்த வார்த்தை எனக்கு தைரியத்தை கொடுத்தது. அதன்பிறகு இங்கே வருபவர்களிடம் வருத்தத்தையோ, பரிதாபத்தையோ காண்பிப்பதில்லை அதற்கு பதில் உன்னால் முடியும் எழுந்து நில், எழுந்து சென்று உன் வேலைகளை செய் என்று நம்பிக்கை கொடுக்கிறேன்.
 வெளியூர்களில் இருந்தும் முக்தியைப் பற்றி கேள்விப்பட்டு இங்கே வந்து காலை பொருத்திக் கொள்கிறார்கள். பல ஆயிரங்களைச் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளிலும், வெளி நாடுகளுக்குச் சென்றும் காலை பொருத்தியவர்கள் கூட அது சரி வராமல் மீண்டும் எங்களிடம் வந்து காலை பொருத்திச் செல்கிறார்கள்.
 எங்களது இந்த சேவைக்காக நாங்கள் இதுவரை யாரிடமும் பணம் கேட்டு சென்றதில்லை. யாரோ வருகிறார்கள், உதவி செய்கிறார்கள். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் கடவுள் கொடுக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிதான் 30 ஆண்டுகளாக முக்தி வளர்ந்திருக்கிறது. இதை தவிர நான் ஆழ்வார்பேட்டையில் ஒரு ஆர்ட் காலரி வைத்து நடத்தி வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தையும் முக்திக்காக செலவு செய்கிறேன். இதற்கு முன்பு மரப் பொருள்கள் வாங்கி விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தையும் செலவு செய்து வந்தேன். இது தவிர எங்கள் நண்பர்கள், நலம் விரும்பிகள், ரோட்டரி, லயன் கிளப் இவர்களும் உதவுகிறார்கள். சௌகார்பேட்டையில் உள்ள ஜெயின் அசோசியேஷன் மூலம் மார்ச் மாதத்தில் கேம்ப் நடத்துவோம் அவர்களும் உதவி செய்வார்கள். இப்படி பல பேர் இணைந்து செய்யும் உதவி ஒரு நபரை மட்டும் போய் சேராமல் அவர்களது குடும்பத்தையே வாழ வைக்கிறது.
 மெக்சிகோ, பிரேசில், கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்குச் சென்று 700 பேருக்கு மேல் பயிற்சியும் அளித்திருக்கிறோம். இது தவிர முக்தியைப் பற்றி இணையம் மூலம் தெரிந்து கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை யூ.கே. போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இந்தியா வந்து எங்களிடம் செயற்கை கால் செய்வது குறித்து பயிற்சியும் எடுத்துச் செல்கிறார்கள்'' என்றார்.
 - ஸ்ரீ
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com