மலையாள இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது இயங்குவதுண்டு. இந்த முறை மலையாளத் திரைப்படக் குழுவினர் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பெயர் சேவகர். பிரஜின், ஷகானா, போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் கோபிநாத் எழுதி இயக்கியுள்ளார். சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது...
'நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அங்கே அனைத்து அட்டூழியங்களும் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் இருக்கிறார். அவருக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள்.
உற்று நோக்கிய போது அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த அநியாயத்தின் பின்னணியில் ஓர் இணைப்புப் பின்னல் இருப்பது புரிகிறது.இதைக் கண்டு கதாநாயகன் பிரஜின் குமுறுகிறார். தன் இயல்புப்படி அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பிரஜின், ஒரு மக்கள் சேவகனாக இருக்கும் தனது நீதியின் பாதையில் குறுக்கிடும் தீயசக்திகளை அழிக்க நினைக்கிறார். அப்போது போலீசையும் எதிர்த்துத் தாக்க வேண்டிய சூழல் வருகிறது. இதனால் அவருக்குப் பல வகையில் தொல்லைகள். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அவருக்குக் காவல்துறையில் இதயம் உள்ள ஒருவரின் புரிதல் கிடைக்கிறது. அப்படி வரும் ஒரு காவல் அதிகாரி தான் போஸ் வெங்கட். அதன் பிறகு கதையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதைச் சொல்லும் படம் தான் இது'' என்றார் இயக்குநர்.