சமீபத்திய வெற்றிகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது வாழை. இதன் வெற்றி விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது.... ""முதலில் நான் தமிழ் திரையுலகத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும.
நான் அழைத்த அத்தனை பேரும் இந்தப் படத்தை பார்த்து விட்டார்கள். வாழை படம் இந்தளவுக்கு நன்றாக வருவதற்கு காரணம், என்னுடைய முந்தைய படங்களின் தயாரிப்பாளர்கள்தான். அவர்கள் கொடுத்த சுதந்திரம்தான், இங்கு வரை என்னை அழைத்து வந்திருக்கிறது.
மாரி செல்வராஜ் எந்த தடையுமில்லாமல் மக்களிடம் போய் சேருவதற்கு காரணம் இந்தத் தயாரிப்பாளர்கள்தான். என்னுடைய கண்ணீரையும் கவலையையும் கலை வடிவமாக மாற்றியதுதான் என்னுடைய பெருமை. வாழை எங்களுடைய பெரிய உழைப்பு. எங்களுடைய பெரிய நம்பிக்கை. வாழை இவ்வளவு பெரிய வெற்றி அடைந்த பிறகு நான் வீட்டிலேயேதான் இருந்தேன்.
இந்த படம் பார்த்து விட்டு பலரும் எங்களை இந்த படத்துல காட்சிப்படுத்த மறந்துட்டீங்கனு சொன்னாங்க. இந்த படத்தின் மூலமாக இஸ்லாமிய தோழர்கள்தான் காப்பாற்றினார்கள் என்கிற உண்மை வெளிய வந்திருக்கிறது.
அன்றைக்கு மக்களை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி. என்னுடைய வெற்றியின் வேர் என்னுடைய மனைவியிடம்தான் இருக்கிறது. என்னுடைய தந்தை, தாயை "ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துறாங்க'னு நினைச்சுகிட்டு இருந்த நான், 30 வருஷத்துல இங்க வந்து இந்த கலையின் வடிவில்தான் எனக்கும் எங்க அம்மாவுக்குமான உறவை புரிஞ்சுகிட்டேன்.
எங்க அம்மாவும் இதை ஏத்துகிட்டதுக்கு கலைதான் காரணம். இந்தக் கலைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன். "வாழை-2' நிச்சயமாக எடுப்பேன். இதுக்கு பின்னாடி இருக்கிற கதையை சிவணைந்தானை வைத்து எடுப்பேன். அது என்னை இன்னும் நீங்க புரிஞ்சுகிறதுக்கு வழி வகுக்கும்'' என்றார்.