வெற்றிமாறன் இயக்கி வெளிவந்துள்ள படம் 'விடுதலை 2'. இதில் பண்ணையார் கதாபாத்திரத்தில் ஜெயவந்த் நடித்திருந்தார். இவர் 'மத்திய சென்னை, 'காட்டுப்பய காளி' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர். விடுதலை 2 அனுபவம் குறித்து அவர் பேசும் போது... ' வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சின்ன கதாபாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்காக இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் முயற்சி செய்துகொண்டிருந் தேன். அப்படித்தான் இந்தப் பட வாய்ப்புக் கிடைத்தது. நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் கதையில் எனக்கும் முக்கியத்துவம் இருந்ததில் மகிழ்ச்சி.
வெற்றிமாறன், விஜய் சேதுபதி ஆகியோரிடம் நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இதில் என் நடிப்பைப் பலர் பாராட்டுகிறார்கள். என் நடிப்பின் மீது இப்போது நம்பிக்கை வந்திருக்கிறது. நிறைய படங்களில் நடிப்பதைவிட, நாலே நாலு நல்லப் படங்களில் நடித்தால் போதும்.
அந்த எண்ண ஓட்டத்தில்தான் ஓடிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், நான் டூயட் ஆட மாட்டேன். பஞ்ச் வசனம் பேச மாட்டேன்.. என்று இங்கே எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அடுத்த படத்திலேயே அதில் நடிக்க வைத்து விடுவார்கள். அதனால் வார்த்தைகளை விட்டு விடக் கூடாது.
அதுவே நாளைக்கு ஆயுதமாகி நம்மைத் தாக்கும் என்கிற ஆபத்தையும் நான் உணர்ந்திருக்கிறேன். பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்.
இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இனி வரும் படங்கள்தான் எனக்கான ஸ்டார்ட் பட்டன்' என்றார்.