உலகில் வியக்க வைக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில:
பெல்ராக் லைட் ஹவுஸ்:
உலகிலேயே மிகப் பழமையான கலங்கரை விளக்கமாக, 'பெல்ராக் ஹைட் ஹவுஸ்' உள்ளது. இது ஸ்காட்லாந்து நாட்டில், 'அங்கஸ்' என்ற கடற்கரையில், கடலுக்கு உள்ளேயே இருக்கிறது. 1807 முதல் 1810-ஆம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் கட்டப்பட்டு, 1813-இல் செயல்படத் தொடங்கியது.
'ஆர்போர்' துறைமுகத்துக்கு வரும் கப்பல்
களுக்கு வழிகாட்ட அந்தக் காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு இடையே இதை அமைத்திருக்கின்றனர். 35 மீட்டர் உயரமுள்ள இதன் ஒளியை கடலில் 56 கி.மீ. தொலைவில் இருந்தே காண முடியும்.
எந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அந்தக் காலத்தில், கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கமானது, உலகில் தொழில்ரீதியில் வகைப்படுத்தப்பட்ட அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளுக்கு நடுவே கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றிவிட்டனர். ஸ்காட்லாந்து நாட்டுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் ரசிக்கும் இடங்களில் முதலிடத்தில் உள்ளது.
ஹைபர் சோனிக் ஏவுகணை:
ஈரான்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போரில் நடக்கும் தாக்குதலில், இஸ்ரேலை குறிவைத்து ஏவப்பட்டதாகக் கூறப்பட்ட 'ஹைபர் சோனிக்' ஏவுகணைகள் குறித்த தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.
ஏவுகணைகளில் குறைந்த தொலைவு பறந்து வெடிக்கும் குரூஸ் ஏவுகணை முதல் ஒரு விநாடியில் ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமாகப் பயணிக்கும் 'ஹைபர் சோனிக்' ஏவுகணைகள் வரை உள்ளன. இதில், 'ஹைபர் சோனிக்' ஏவுகணைகளை வடிவமைப்பது என்பது பலவகையான தளங்களில் இருந்து ஏவப்படும் வகையைச் சேர்ந்தது.
ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக் கூடியவை. ஒரு மணி நேரத்தில் 6,175 கி.மீ. தொலைவைக் கடந்து இலக்கைத் தாக்கும். இது தாக்கும் இடத்தில் இருக்கும் கட்டடங்கள் உள்பட அனைத்துமே அழிந்துப் போகும்.
அதிலும், ஈரான் ஏவிய ஹைபர் சோனிக் ஏவுகணையானது இதற்கு ஒரு படி மேலே வேகத்தைக் கொண்டது. இந்த ஏவுகணை விநாடிக்கு 5.1 கி.மீ. அல்லது 3.2 மைல் வரை பாயும். இந்த வேகத்தில் இது செல்லும்போது, மிக அதிக வெப்ப நிலையை உருவாக்கும் என்பால், இதனை ரேடியோ தகவல் தொடர்புக் கருவிகளால் கண்டறிய முடிவதில்லை. எந்தத் தடையும் தாண்டி இது இலக்கை சுக்குநூறாகச் சிதறடிக்கும். இதை கண்காணிப்பதும் கடினம்தான்.
வண்ண, வண்ண வைரங்கள்:
வைரங்கள் என்றாலே பளபளவென்று வெண்மைநிற வைரங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், மெல்லிய இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, பழுப்பு, சிவப்பு, ஆழமான கருப்பு , நீலம் என பல்வேறு வண்ணங்களில் வைரங்கள் உண்டு.
உலக அளவில் சில நாடுகளில் உள்ள வைரச் சுரங்கங்களில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்த வைரங்களில், 0.01 சதவீதம் மட்டுமே வண்ண வைரங்கள் கிடைத்துள்ளன. சிவப்பு நிற வைரங்கள் மிகவும் அரிதான ஒன்றாகும். சிவப்பு வைரங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்கைல் வைரச் சுரங்கத்தில் இருந்து கிடைத்தவையாகும்.
நீல நிற வைரங்கள் சந்தையில், இரண்டாவது அரிய வைரமாகும். கண்டெடுக்கப்பட்ட வண்ண வைரங்களில் 1 % மட்டுமே நீல வைரங்களாகும். இந்த வகை வைரங்கள் மிகவும் மங்கலான நீலம் முதல் ஆடம்பரமான தெளிவான நீலம் வரை இருக்கலாம். அடுத்ததாக, டிரெஸ்டன் என்ற பச்சை வைரமும் பிரபலமான வைரங்களில் ஒன்றாக இருக்கிறது.