'உன்னை நான் சந்தித்தேன்', "உதயகீதம்', "உயிரே உனக்காக', "கீதாஞ்சலி', "நினைவே ஒரு சங்கீதம்' உள்பட பல ஹிட் படங்களை இயக்கிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். இப்படம் மார்ச் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை குறித்து பேசியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
இது குறித்துப் பேசியிருக்கும் அவர், " முன்னாடியெல்லாம் சென்னையில அதிகமான ஸ்டுடியோக்கள் இருக்கும். எல்லாரும் இங்க வந்துதான் சினிமா கத்துக்குவாங்க. ஆனால், இன்னைக்கு ஹைதராபாத்ல அதிகமான சினிமா ஸ்டுடியோக்கள் இருக்கு. அதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கு.
நம்மகிட்ட ஒற்றுமையில்லை. சினிமா சங்கங்கள் இரண்டு கட்சியாகப் பிரிந்துவிடுகிறார்கள். அதுவேண்டாம். ஒற்றுமையோட இருந்து, மீண்டும் நம் சினிமாவை, சென்னையை உயர்த்தணும்' என்று பேசியிருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் "டிராகன்' படத்துக்கு இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இப்படத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "டிராகன்' அழகான திரைப்படம். இப்படத்தை அற்புதமாக எழுதிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு வாழ்த்துகள். படத்தில் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது.
படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என்னைக் கண்கலங்கச் செய்தது. இந்த உலகத்தில் ஏமாற்று வேலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படம் சொல்லும் மெசேஜ் மிகவும் முக்கியமானது' எனப் பதிவிட்டிருக்கிறார்.
அஜித் நடிப்பில் இம்மாதம் "விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி இந்த "குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அஜித்துடன் த்ரிஷா "கிரீடம்', "மங்காத்தா', "என்னை அறிந்தால்', "விடாமுயற்சி' போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது ஐந்தாவது முறையாக "குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். த்ரிஷாவும் இப்படத்தில் நடிப்பதாக தகவல் முன்பே பேசப்பட்டது. தற்போது த்ரிஷா படத்தில் நடித்திருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டிருக்கிறது "மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.
பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள "எல் 2 எம்புரான்' படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற "கேம் ஆப் த்ரோன்ஸ்' பட புகழ் நடிகர் ஜெரோம் ஃப்ளின் இப்படத்தில் இடம்பெறும் போரிஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுபாஷ்கரன் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.