கம்பரின் காட்சி இன்பம்

காட்சியமைப்பு, பாத்திரப் படைப்பு, கற்பனை வளம், கவித்துவம், இயற்கையை உற்று நோக்கும் திறன், தான் என்ன சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? என்று எண்ணினாரோ அதனை அவ்வாறே சொல்லுகின்ற ஆற்றல் போன்ற தனிச்
கம்பரின் காட்சி இன்பம்
Published on
Updated on
2 min read

காட்சியமைப்பு, பாத்திரப் படைப்பு, கற்பனை வளம், கவித்துவம், இயற்கையை உற்று நோக்கும் திறன், தான் என்ன சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? என்று எண்ணினாரோ அதனை அவ்வாறே சொல்லுகின்ற ஆற்றல் போன்ற தனிச்சிறப்புகள் கம்பரிடத்தில் குடிகொண்டிருந்த காரணத்தினாலேயே, கம்பரை "கவிச்சக்ரவர்த்தி கம்பர்' என நாம் போற்றுகிறோம்.

கம்பர், தான் நேருக்கு நேராகக் கண்ட புறவழிக் காட்சிகளான கங்கை, கோதாவரி, ஆரண்யம் போன்றவற்றைப் பாடும்போதும், வால்மீகி ராமாயணத்தைப் படித்தபின்பு, இதைத் தமிழில் பாட வேண்டும் என எண்ணி, அக்கதையிலுள்ள கதை மாந்தர்களின் குண இயல்புகளைப் புறம்தள்ளி, கதைமாந்தர்களையும், நிகழ்வுகளையும், கதையையும் முதன்மைப்படுத்தி, அவற்றை அகவிழிக் காட்சிகளாகக் கண்டது மட்டுமல்ல, கதை மாந்தர்களின் குண இயல்புகள் தமிழகப் பண்பாட்டுடன் ஒத்திருக்க வேண்டும் என்ற முடிவுடன் பாடும்போதும், இயற்கையை, போர் நிகழ்வுகளை,  ஆறு, ஏரி, குளம், பொய்கை, பறவைகள், மான்கள், யானைகள், குருவிகள், மயில்கள், மீன்கள் போன்றவற்றைப் பாடும்போதும் தனக்கென ஒரு முத்திரையை, கம்பர் தான் பாடும் ஒவ்வொரு பாடலிலும் பதித்துள்ளார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

சங்க கால இலக்கியங்களுக்குப் பின் கம்பரின் காலம் வரை எழுந்த இலக்கியங்கள் அனைத்தும் தலைவன்-தலைவி கூடி மகிழ்ந்ததை, அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டபோது வாடியதை வெறும் சொற்களால் சுட்டிக்காட்டியதே தவிர, தலைவன்-தலைவி கூடி, காட்சிகளைக் கண்டு மகிழ்ந்ததாகவோ, அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டபோது காட்சிகளைக் கண்டு மனம் வேதனை அடைந்ததாகவோ நமக்குத் தெளிவுபடுத்தவில்லை.

ஆரண்ய காண்டத்தில் ராமன், சீதைக்குப் பல காட்சிகளைக் காட்டி மகிழ்வதுடன், சீதையும் மகிழ்வதாகப் பாடுகிறார் கம்பர். அதுபோல், சீதையைப் பிரிந்த பின்பு ராமன் பல காட்சிகளைக் கண்டு வேதனை அடைவதாகவும், சீதையும் வேதனை அடைவதாகவும் பாடுகிறார். சுருக்கமாகச் சொன்னால், ராமனும் சீதையும் காட்சிகளைக் கண்டு மகிழும்போது நாமும் மகிழ்கிறோம்; அவர்கள் வாடும்போது நாமும் வாடுகிறோம். அப்படி நம் மனதை ஆக்கிவிடுகிறார் கம்பர். இவ்வகையில் பாடுவதென்பது அனைவராலும் முடியாத ஒன்று. கம்பர் கண்ட பல காட்சிகளுள் ஓரிரு காட்சிகளை மட்டும் நாம் கண்டு களிப்போம்.

""குயில் இனம் வதுவை செய்ய

கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை

அயில் விழிமகளிர் ஆடும்

அரங்கினுக்கு அழகு செய்ய

பயில் சிறை அரச அன்னம்பல

மலர்ப் பள்ளி நின்றும்

துயில் எழதும்பி காலைச்

செவ்வழி முரல்வ - சோலை''

(பாலகாண்டம், நாட்டுப்படலம் பா.45)

சோலைகளில் உள்ள சேவலும் பெட்டையுமான குயில்கள் மணம் செய்துகொள்ள மரக்கிளைகளுக்கிடையே ஆடுகின்ற மயில்கள், வேல்போன்ற கண்களை உடைய பெண்கள் ஆடுகின்ற நடன அரங்கத்தைவிட அழகை உண்டாக்க, நெருக்கமாக சிறகுகளை உடைய அன்னப்பறவைகள் பல தாமரை மலர்களாகிய படுக்கைகளில் இருந்து தூக்கம் களைந்து எழுவதற்காக, வண்டும் காலை நேரத்தில் செவ்வழிப் பண்பாடும் என காலைக் காட்சியைக் கம்பர் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

என்ன ஒரு மங்களகரமான காட்சி? குயில்கள் மணம் புரிய ஓர் அழகு அரங்கத்தை மயில்கள் உருவாக்குவதும், குயில்களின் திருமணத்தை அன்னங்களும் காணவேண்டும் என்பதற்காக வண்டுகள் செவ்வழிப் பண்ணை மீட்டுவதும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றதல்லவா?

கம்பரின் "நாணக் காட்சி'யை ஒரு பாடல் வழிக் காணலாம்.

""பாண் இள மிஞிறு ஆக படுமழை பணை ஆக

நாணின தொகுபீலி கோலின நடம் ஆடல்

பூணியல் நின சாயல் பொலிவது கண்ணின்

காணிய எனல் ஆகும் களிமயில் - இவை காணாம்''

(அயோத்தி.கா.வனம்புகு படலம்: பா.2002)

அணிகளை இயல்பாக உடைய சீதையே! மகிழ்ச்சி நிறைந்த மயில்கள் இளைய வண்டு பாட்டுப்பாடும் பாணன் ஆகவும், பொழிகின்ற மழையின் ஒலி, பறை ஒலியாகவும் கொண்டு வெட்கமுற்றனவாய் சுருக்கிக்கொண்ட தம் தோகைகளை விரித்து வளைத்தனவாய் நடனம் ஆடுதல், உன்னுடைய சாயல் தம்மிடத்தே விளங்குவதை தம்முடைய தோகையில் உள்ள பல கண்களால் காண்பதற்கு என்று சொல்லும் அளவுக்கு உள்ள இக்காட்சியைக் காண்பாய் என, ராமன் தான் கண்ட காட்சியை சீதைக்குக் காட்டுவதாகக் கம்பர் நமக்குக் காட்டுகிறார்.

காலம் கார்காலம். வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளது. இத்தகைய குளிர்ந்த வேளையில் இளைய வண்டின் ரீங்காரம் பாட்டுப்பாடும் பாணனின் பாடல்போல் அமைகிறது. அவ்வேளையில் பொழிகின்ற மழையின் ஒலி, அப்பாடலுக்கு ஏற்ற தாளம்போல பறைஒலியாக அமைகிறது. இத்தகைய சூழ்நிலையில், மகிழ்ச்சி நிறைந்த மயில்கள் தாங்கள் சுருக்கி வைத்திருந்த தோகையை விரித்து, வளைத்து நடனம் ஆடத்தொடங்குகின்றன. அதேவேளையில், தம் அருகே உள்ள சீதையைப் பார்த்து, சீதையின் சாயல் தம்மிடம் உள்ளதே என வெட்கப்படவும் செய்கின்றன. அத்துடன், தம் தோகையில் உள்ள பல கண்களால் உன்னைக் காண்பதற்கு என்று சொல்லும் அளவுக்கும் உள்ளது. ஆகா! என்ன அற்புதமான காட்சி. தானும் மகிழ்ந்து சீதையையும் மகிழ்விக்கிறான் ராமன். மயில்களுடன் சீதையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் ராமனைவிட கம்பருக்குத்தான் எத்தனை பெருமை - இன்பம் பாருங்களேன்.

தலைவியின் அழகை, தலைவன் எடுத்துச்சொல்வதில் தலைவனுக்கு ஏற்படும் இன்பம் எத்தகையது என்று சொல்ல இயலுமோ? அதனைக் கேட்டு நாணமுற, அதனால் தலைவிக்குப் புதியதோர் அழகுகூட, அதனைக் கண்ணுற்ற தலைவனுக்குத்தான் எத்தகையதோர் சுகம். அதனால், தலைவிக்கு ஏற்படும் மகிழ்ச்சி போன்றவற்றை எவராலும் கூற இயலுமோ? இப்படிப் பல காட்சிகளை, கம்பர் நமக்குக் காட்சிப்படுத்துவதை வர்ணித்துக்கொண்டே போகலாம். அத்தனை காட்சிகளையும் தானும் கண்டு, ரசித்து அனுபவித்து, நம்மையும் அனுபவிக்கச் செய்யும் கம்பரின் கவித்திறனுக்கு இன்னொருவரை ஒப்பிட்டுக்கூற முடியுமோ?

"யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற வாய்மொழிக்கு இலக்கணமாய் கம்பர் திகழ்ந்துள்ளார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. காட்சி இன்பத்தை வாரி வழங்கக்கூடிய மதிநுட்பம் கொண்ட கம்பரைவிட இன்னொருவர் இவ்வுலகில் இனி பிறக்கவும் கூடுமோ...?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.