இந்தவாரம் கலாரசிகன்

தமிழர்தம் சரித்திரத்தில் தனிநாயகம் அடிகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுவதற்குக் காரணமே இலங்கையைச் சேர்ந்த இந்தக் கிறிஸ்தவப் பாதிரியார்தான். அவர் தனது மதத்தை நேசித்ததைக் காட்டில
இந்தவாரம் கலாரசிகன்

தமிழர்தம் சரித்திரத்தில் தனிநாயகம் அடிகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுவதற்குக் காரணமே இலங்கையைச் சேர்ந்த இந்தக் கிறிஸ்தவப் பாதிரியார்தான். அவர் தனது மதத்தை நேசித்ததைக் காட்டிலும் தமிழை நேசித்தார். அவரைச் சந்தித்திருக்கிறேன், அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கிறேன் என்பதே இந்தப் பிறவியில் நான் அடைந்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.

அருள்தந்தை சேவியர் தனிநாயகம் அடிகள் தனிமனித சுதத்திரத்தைப் போற்றியவர். அதற்காக அவர் அடைந்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. தனிநாயகம் அடிகள் இத்தாலிக்குச் சென்று படிக்க விரும்பியதை இலங்கை பிஷப் அனுமதிக்கவில்லை. அதற்காக அவர் வருத்தப்படவில்லை. திருவனந்தபுரம் "மலங்கராச் சர்ச்'சின் டையோசிஸில் உறுப்பினராகி, அதன்மூலம் ரோமுக்குக் கல்வி பயிலச் சென்றார். அவர் தூத்துக்குடி டையோசிஸில் சேர்ந்த பிறகுதான் ஆய்வுப் பணிகளில் ஈடுபட முடிந்தது.÷

யாழ்ப்பாணத்தில் சிங்களரின் ஆதிக்கம் மேலோங்கியபோது, தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இதை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த தனிநாயகம் அடிகளை இலங்கை அரசு கண்காணிக்கத் தொடங்கியது. தனது தனிமனித உரிமை பறிக்கப்படுவதை அந்தத் தமிழுணர்வுள்ள பாதிரியாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் தான் தங்கியிருந்த அறையைப் பூட்டிச் சாவியைக் கொடுத்துவிட்டுத் தமிழகத்துக்கு வந்துவிட்டார் அவர்.

ஈழத் தமிழர்களின் "தந்தை' என்று போற்றப்படும் "செல்வா' என்கிற செல்வநாயகத்தின் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஒரு நினைவுச் சொற்பொழிவு நடத்தப்பட்டு வந்தது. இப்போதுதான் யாழ்ப்பாணமே தமிழிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதே, பிறகு நினைவாவது, சொற்பொழிவாவது? 1980-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவாற்றினார் தனிநாயகம் அடிகள்.

"தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்' என்கிற தலைப்பில் அடிகள் நிகழ்த்திய அந்தச் சொற்பொழிவு ஒரு சரித்திரப் பதிவு மட்டுமல்ல, தமிழ் இலக்கியப் பதிவும்கூட. அந்தச் சொற்பொழிவு நிகழ்த்திய ஐந்து மாதத்தில் தனிநாயகம் அடிகள் காலமாகிவிட்டார். ஒருவேளை அதுதான் அவரது கடைசிச் சொற்பொழிவோ என்னவோ தெரியாது.

"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும் தனிநாயகம் அடிகள் நிகழ்த்திய அந்த இரண்டு சொற்பொழிவுகளும் ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அடேயப்பா, தனிநாயகம் அடிகளின் தனி முத்திரை வார்த்தைக்கு வார்த்தை, கருத்துக்குக் கருத்து அதில் பளிச்சிடுகிறது. அதில் அவர் சொல்லியிருக்கும் சில கருத்துகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. இன்னும் சில, நாம் நினைவில் கொள்ள வேண்டியவை.

""தமிழ் பக்தியின் மொழி என்று நான் அடிக்கடி கூறி வருகின்றேன். ஏனெனில் தமிழிலுள்ள பக்தி இலக்கியங்களைப்போல அழகிலும், ஆழத்திலும், பரப்பிலும் இத்துணை இலக்கியம் வேறெந்த மொழியிலும் இருப்பதாக நான் அறியேன்''.

""தமிழ் மக்கள் இத்துணை நூற்றாண்டுகளாகத் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச் சமயத்தைச் சார்ந்தாலும் தாம் தமிழ் மக்கள் என்று தமிழர் பண்பாட்டையும் கொள்கைகளையும் அவர்கள் கடைபிடித்தே வந்தனர், இன்றும் கடைபிடித்தே வருகின்றனர்''.

""பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும்' செய்யுள் வரலாற்று உண்மை நிறைந்த அரிய செய்யுள். அவருடைய "யாமறிந்த மொழிகளிலே' என்னும் செய்யுள் தமிழர்கட்கு எழுச்சி தரும் செய்யுள். இவ்விரு செய்யுட்களையும் நம் சிறுவருடைய பாட நூல்களிலே எது காரணம் பற்றி சேர்க்காமலிருக்கிறார்களோ நானறியேன். நம் மொழிப்பற்றையும், நாட்டுப் பற்றையும் குறைப்பதற்காகவே இவ்விருட்டடிப்பு ஒரு சூழ்ச்சி என்று கருதுகின்றேன்''.

""தமிழ்மக்கள் ஈழவள நாட்டில் விஜயன் வருமுன்னரே வாழ்ந்து வந்தனர். விஜயன் வந்தபொழுதே பெரும் நாகரிகமடைந்த மக்கள் ஈழநாட்டில் வாழ்ந்தார்கள் என்பதற்கு மகாவம்ச நூலே சான்று. தமிழர் பண்பாடு இந்த நாட்டில் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் தொடங்கி தனிப் பண்பாடாக வளர்ந்துள்ளது''.

""நாம் எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளோம்; நம் உரிமைகள் அனைத்தையும் இழந்து வாழ்கின்றோம். தந்தை செல்வா, ஈழத் தனிநாட்டை - தமிழ் ஈழத்தை - அக்காலத்தில் கேட்கவில்லை. ஆனால் நமக்கு இத்துணை ஆண்டுகளாக இழைத்து வந்த தீமைகளால் தனிநாடு கேட்கத் தூண்டப்படுகிறோம்''.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தனிநாயகம் அடிகள் பேசியது இவை. "தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்' காப்பாற்றப்படுமா என்கிற ஆதங்கத்துக்கு ஆறுதலளிப்பதுபோல அமைந்திருக்கிறது தனிநாயகம் அடிகளின் அந்தச் சொற்பொழிவு!

******

இரண்டு வாரங்களுக்கு முன்பு "கலைமாமணி' விக்கிரமன், கவிஞர் "தமிழ்ஒளி' பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. எனது புத்தகக் குவியலில், கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல செ.து.சஞ்சீவி தொகுத்து வெளியிட்டிருக்கும் "தமிழ்ஒளி கட்டுரைகள்' என்கிற புத்தகத்தைத் தேடிப்பிடித்துப் படிக்கத் தொடங்கினேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் வேறுபாடு இருக்கத்தானே செய்கிறது. புதுமைப்பித்தன் பற்றியும், சிதம்பர ரகுநாதன் பற்றியும் கவிஞர் "தமிழ்ஒளி'யின் கருத்துகள் பல ஏற்புடையவை அல்ல என்றாலும், அவர் முன்வைக்கும் மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் நாம் தவிர்க்க வேண்டியதில்லையே. விமர்சனங்கள் மூலம் மட்டுமே ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சி ஏற்படும் என்பதை ரகுநாதனே கூட ஏற்றுக்கொள்வார்.

கவிஞர் "தமிழ்ஒளி'யின் அற்புதப் படைப்பு எது என்றுகேட்டால், "வீராயி'யும், "வள்ளுவர் கண்ட காதல் வாழ்வு'ம்தான் என்பேன். "வீராயி' நூலுக்குக் கவிஞர் "தமிழ்ஒளி' எழுதியிருக்கும் முன்னுரை இருக்கிறதே, அதை ஒவ்வொரு படைப்பாளியும் தினமும் ஒருமுறை படித்தால் கூடத் தேவலாம்.

"சிறு பிள்ளைகளிடம் பலூன்களை ஊதவிட்டு வேடிக்கை காட்டுவதுபோல் வெறும் உவமைப் பிதற்றலும் கனவுலக மாயாவாதக் கதைகளும் இன்றைய தமிழ்நாட்டை சாவுப் படுக்கையில்  வீழ்த்தும் கொடிய தொத்து நோய்களைப் போன்றவை' என்று அந்த முன்னுரையில் குறிப்பிடும் கவிஞர் "தமிழ்ஒளி', ஒரு வேண்டுகோளையும் முன் வைக்கிறார். அது, "எழுத்தாள நண்பர்களே! கற்பனை உலகைப் படைக்கும் கவிஞர்களே! உங்களுக்கு நான் "வீராயி' மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். மக்களுக்காக, மக்கள் உயர, மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்' என்பதுதான் அது.

இந்தத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் வீ.அரசு கூறியிருப்பதைப்போல, "பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை என்ற வரிசையில் பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை என்று நேர் செய்யவேண்டிய தேவையுண்டு. வரலாற்றில் விடுபட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளியை வருங்காலச் சமூகம் நேர்செய்யும் என்று நம்பிக்கை கொள்ளலாம்'.

கவிஞர் "தமிழ்ஒளி'யின் கவிதைத் தொகுப்பு எங்கே என்று புத்தகக் குவியலில் தேடி அலுத்துவிட்டேன். யார் எடுத்துக்கொண்டு போனார்களோ, தெரியவில்லை. அவர்கள் கொண்டுபோனதில் வருத்தமும் இல்லை. அவர்கள் படித்துத் தமிழ்ஒளி பெறுவார்கள் என்று நம்புவோமே, என்ன தவறு!

******

விமர்சனத்துக்கு வந்திருந்த கவிதைப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் பிரித்தேன். கவிதைத் தொகுப்பின் பெயர் "தொலைந்தவைகளில் சில...'. படைத்திருப்பவர் கவிஞர் கவிபாலா. புத்தகத்தைப் பிரித்ததும் கண்ணில் பட்ட கவிதையின் தலைப்பு "உயர்திணை'. கவிதை இதோ -

சாதிக் கலவரங்களால்

சரிந்து போகாது

மதக்கலவரங்களாலும்

மடிந்து போகாது

இயற்கைச் சீற்றங்களையும்

முன்னரே அறிந்து

செயல்படுமாம்

எறும்பும், நாயும் கூட!

எப்படி ஏற்றுக்கொள்வது,

மனிதருக்கு

ஆறறிவாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com