இந்த வார கலாரசிகன்

திரையுலகப் பாடல்கள் கவிதைகள்தானா? அவற்றிற்கு இலக்கிய அந்தஸ்துத் தரப்படலாமா? இப்படி ஒரு சர்ச்சை இன்று நேற்றல்ல, சினிமா என்கிற ஊடகம் வலிமையான  பொழுதுபோக்கு சாதனமாக உருவெடுத்த நாள் முதலாக நடைபெற்று வரும்
Published on
Updated on
3 min read

திரையுலகப் பாடல்கள் கவிதைகள்தானா? அவற்றிற்கு இலக்கிய அந்தஸ்துத் தரப்படலாமா? இப்படி ஒரு சர்ச்சை இன்று நேற்றல்ல, சினிமா என்கிற ஊடகம் வலிமையான  பொழுதுபோக்கு சாதனமாக உருவெடுத்த நாள் முதலாக நடைபெற்று வரும் சர்ச்சைதான். மெட்டுக்கு எழுதப்பட்ட திரைப்படப் பாடல்கள் இலக்கியமோ இல்லையோ, அந்தப் பாடலாசிரியர்கள் நிச்சயம் கவிஞர்கள்தான். படைப்பாளிகள்தான்.

காலத்தை வென்று நிற்பது இலக்கியம் என்றால், இன்றும் ரசிகர்களால் முணுமுணுக்கப்படும் திரைப்படப் பாடல்கள் இலக்கிய அந்தஸ்துப் பெறுவதில் தவறு இல்லை என்பது எனது கட்சி. கவிதை என்கிற அந்தஸ்தைத் தர மறுப்பவர்களுக்குக்கூட, திரையிசைப் பாடல்களுக்கு சாகித்ய அந்தஸ்து வழங்கப்படலாம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாதே...

ஆரம்பகாலத் தமிழ் சினிமாவில் பாட்டெழுதிப் புகழ்பெற்ற பாபநாசம் சிவன், ஆனை வைத்தியநாதய்யர், வேதநாயகம்பிள்ளை, உடுமலை நாராயண கவியிலிருந்து தொடங்கி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கவிஞர் சுரபி, "கண்ணாடி' சீதாராமன், கவிஞர் பூமிபால கவிதாஸ், கவி லட்சுமணதாஸ், கவியோகி சுத்தானந்த பாரதியார், உவமைக் கவிஞர் சுரதா, சுந்தர வாத்தியார், எஸ்.டி.சுந்தரம், கே.டி.சந்தானம், தஞ்சை ராமையாதாஸ், கவி கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கம்பதாசன், மருதகாசி, ஆலங்குடி சோமு என்று திரைப்படப் பாடலாசிரியர்களின் நீளமான பட்டியலையே போடலாம்.

மேலே குறிப்பிடப்பட்டவர்களும் சரி, அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களும் சரி, தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் இதயங்களிலும் தங்களுக்கென தனியிடத்தைப் பிடித்தவர்கள். ஒரே ஒரு திரைப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே எழுதிய ரோஷ்னாரா பேகம் (குங்குமப் பொட்டின் மங்கலம்-குடியிருந்த கோயில்) உள்பட இவர்கள் எல்லோருமே ரசிகர்களின் மனதில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டவர்கள்தான்.

இத்தனை பாடலாசிரியர்களுக்கு மத்தியில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து ஆகிய நான்கு பேர்கள் மட்டும் பரவலாகப் பேசப்படுவதற்குக் காரணம் அவர்களுக்கு அதிகமான வாய்ப்புக் கிடைத்தது மட்டுமல்ல, அவர்களது பாடல்களில் இருந்த மொழி ஆளுமையும், கற்பனை வளமும், மெட்டுக்குச் சட்டெனப் பாட்டெழுதும் சாமர்த்தியமும்தான்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் சமுதாய சிந்தனையும், கவியரசு கண்ணதாசனிடம்  யதார்த்தமான தத்துவக் கருத்துகளும், கவிஞர் வாலியிடம் வார்த்தை வித்தகமும், கவிஞர் வைரமுத்துவிடம் மென்மையான மனித உணர்வுகளைக் கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் நளினமும் இருந்ததுதான் இவர்களை ஏனைய திரையிசைக் கலைஞர்களிடமிருந்து வேறுபடுத்தி நிறுத்தின.

ஏற்கெனவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயணகவி, மருதகாசி, கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலி ஆகியோரின் திரைப்படப் பாடல்களின் தொகுப்புகள்  வெளிவந்துவிட்டன. அந்த வரிசையில், சமீபத்தில் வெளிவந்திருக்கிறது கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்களின் தொகுப்பு. இதுவரை வெளிவந்த திரைப்பாடல்களின் தொகுப்புகளில் சிறந்தது எது என்று கேட்டால், நிச்சயமாக அது இதுதான் என்று சொல்வதில் தயக்கம் இருக்க வழியில்லை.

கால வரிசைப் படுத்தப்பட்டிருப்பதுடன் நின்றுவிடாமல், அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், அதன் இயக்குநர், இசையமைப்பாளர், வெளியான ஆண்டு என்று எல்லா விவரங்களும் இணைக்கப்பட்ட தயாரிப்பு. அகரவரிசைப்படி பாடல்களின் பட்டியலையும் இணைத்திருப்பது அதைவிட சிறப்பு.

ஒவ்வொரு பாடலுக்கும் கவிஞர் வைரமுத்து சிறு குறிப்பு ஒன்றைத் தருகிறார். ஒவ்வொரு குறிப்புமே ஒரு புதுக்கவிதை. 1999-இல் வெளிவந்த "என்றென்றும் காதல்' திரைப்படத்தில் வரும் "உலகெல்லாம் ஒருசொல் காதல்' பாடலுக்குக் கவிஞர் வைரமுத்துத் தரும் குறிப்பு என்ன தெரியுமா? ""எத்தனையோ உயிர்கள் சுவாசித்த பின்னும் காற்று தீரவில்லை; யுகம் யுகமாக நேசித்த பின்னும் காதல் தீரவில்லை''.

மெட்டுக்குப் பாடலெழுதும் வித்தகத்தில் கவிஞர் வாலிக்குப் பிறகு தனி முத்திரை பதித்திருக்கும் கவிஞரான வைரமுத்துவின் பல திரைப்படப்பாடல் வரிகளில், புதுக்கவிதையின் தாக்கம் மட்டுமல்ல, கவித்துவத்தின் காரணத்தால் இலக்கியத்தரம் கூடக் குதித்தெழுந்து வந்து ஜாடை காட்டும் அதிசயத்தைக் காண நேரும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.

பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரி உழைப்பு தெரிகிறது. ஏனைய தொகுப்புகளைப்போல அல்லாமல் ஒவ்வொரு பாடலையும் கவிஞரே ரசித்துப் பொறுக்கிச் சேர்த்திருக்கும் நேர்த்தியைப் பார்த்து வியக்கிறேன். தாய் தான் பெற்றெடுத்த குழந்தையைச் சீவி, முடித்து, அலங்கரித்து அழகு பார்க்கும் வாஞ்சையை கவிஞர் வைரமுத்து அச்சுவாகனம் ஏற்றி இருக்கும் ஒவ்வொரு பாடலிலும் கண்டு சிலிர்க்கிறேன்.

கவிஞர் வைரமுத்துவின் "ஆயிரம் பாடல்கள்' புத்தகத்தை ஆவணப்பதிவு என்று நினைத்து அலமாரியில் அடுக்கி வைத்துவிடாதீர்கள். ஒரு கவிதை நூலைப் படிக்கும் "சுகானுபவத்'தை அவரது குறிப்புகள் தருகின்றன. அதை அனுபவிக்காமல் போக நேர்ந்துவிடும்.

*****

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து தனிச்சுற்றுக்கு மட்டும் என்று குறிப்பிட்டு,  "களத்து மேடு' என்கிற படைப்பிலக்கியத் திங்களிதழ் ஒன்று தொடங்கி இருக்கிறார்கள். முனைவர் இரா.காமராசு பொறுப்பாசிரியராக இருந்து வெளிக்கொணர்ந்திருக்கும் முதல் இதழில், "மன்னார்குடியில் மகாகவி பாரதி' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ளது மேலநாகை கிராமம். இங்குதான் மகாகவி பாரதியார் 1918-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் தேடப்பட்ட காரணத்தால் கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் வீட்டில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். அங்கிருந்த ஒரு பழமையான மண்டபத்தில் பாரதியார் தனது சகாக்களுடன் தினந்தோறும் தியானம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பாரதியார் தங்கியிருந்த அந்த வீடு 1970-களில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தில் முற்றிலுமாக சிதைந்துவிட்டது. தியான மண்டபமும் முழுவதுமாக சேதமடைந்துவிட்டது.

கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரின் குடும்ப வழித்தோன்றலான மன்னார்குடி எஸ்.ரங்கநாதன், பாரதி வந்து தங்கிய இடத்தை ஒரு நினைவிடமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் "களத்துமேடு' கட்டுரை குறிப்பிடுகிறது.

பாரதி அன்பர்களின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுவந்துவிட்டேன். இனி உங்கள் பாடு, மன்னார்குடி ரங்கநாதன் பாடு என்று விட்டுவிட முடியாதல்லவா? பாரதியின் 13-வது நினைவு நாளன்று, அவரது பாதையில் நடைபோட சபதம்  ஏற்றுத் தொடங்கப்பட்ட "தினமணி' இந்த முயற்சிக்கு எப்படித் துணைபுரிய வேண்டும் என்பதை நமது வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

*****

மாட்டுத் தொழுவத்திலிருந்து ஒரு துளி மை கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் அ.தமிழ்ச்செல்வன். இந்த மை அவர் கைபட்டுக் கவிதையாகி இருக்கிறது. கவிதை - நம் இதயத்தில் விழும் விதையாகி இருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதி, கிராமங்களுக்குக் கிரீடம் சூட்டுகிறது. கிராமத்தைப் பிரிந்துவந்த நகரவாசியின் ஆழ்மன அதிர்வுகளை அசைபோடுகிறது'' என்கிற கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதி, "மாட்டுத் தொழுவத்திலிருந்து ஒரு துளி மை'.

கவிதைத் தொகுதியைப் படித்து முடித்துவிட்டு யோசித்துப் பார்த்தேன். இதைவிட சிறப்பாகவோ, அதிகமாகவோ அ.தமிழ்ச்செல்வனின் கவிதைகளைப் பற்றி எடுத்தியம்பமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. "வாழ்வு' என்றொரு சின்ன, ஆனால் அற்புதமான ஒரு கவிதை.

ஏர்பிடித்து உரமேறிய

கைகள்

விவசாய பூமியின்

வெளியெங்கும் நடந்து திரிந்த

கால்கள்

பச்சைப் பயிர்களோடு

சிநேகம் வளர்த்த கண்கள்-என

எல்லாம் இறந்துபோயின

பொருந்தாத

வாட்ச்மேன் யூனிபார்ம் போட்டு

நகரத் தெருக்களில்

நாய் மேய்த்து

சாலையோர கல்லிலோ

மரத்திலோ

அவை சிறுநீர் கழிக்க

காத்திருக்கும் பொழுதுகளில்

வாழ்கிறது

வயிறு மட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.