கூவல் என்பது ஒரு சிறு கிணறு அல்லது குட்டை; கலங்கல் நீரை உடையது; பெரும்பாலும் கடும் பாலை நிலங்களில் மட்டுமே இது இருப்பதாகச் சங்க இலக்கியம் பகர்கின்றது. தாகத்தால் நீர்பெறாது தவிக்கும் உயிரினங்களுக்கு இதுவே தாகம் தவிர்க்கும் பணியைச் செய்கிறது.
""வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெüவும் கானம்'' (நற்-240)
எனும் நற்றிணைப் பாடல் வரிகள் கூவலின் தோற்றத்தையும் தன்மையையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.
÷அது ஒரு காடு. அங்கே மாடு மேய்க்கும் ஆயர்கள் வெயிலால் தகிக்கின்ற பரற்கற்கள் நிறைந்திருக்கிற ஒதுக்குப்புறத்தில் கணிச்சி என்கிற குந்தாலியால் குழிதோண்டியிருக்கின்றனர். அதில் சிறிது தண்ணீர் தேங்கியிருக்கிறது; அதுதான் கூவல். தாகத்தால் அலையும் யானைக் கூட்டம் அந்தக் கூவலில் தண்ணீர் பருகுகிறது. நற்றிணை காட்டும் இந்தக் காட்சி கூவலின் அருமையை நமக்கு உணர்த்துகிறது.
÷வறண்ட பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் தண்ணீர்த் தேவைகளுக்காகச் செம்மண் நிலத்தில் சிறு கிணறு தோண்டி, அதில் கிடைக்கும் கலங்கல் தண்ணீரை வீட்டின் முற்றத்தில் உள்ள பழைய மண் பானைகளில் ஊற்றிவைத்து, கடுக்காய் முதலியன போட்டுத் தெளியவைத்துப் பயன்படுத்தினார்கள் என்கிற செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகிறது.
""பூவற் படுவில் கூவல் தோண்டிய
செங்கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
யாம் கஃடு உண்டென வறிது மாக இன்று'' (புறநா.319)
÷மண்ணைத் தோண்டிக் கூவல் உண்டாக்குவது தவிர, சில இடங்களில் பறைகளை உடைத்துக் குழி செய்து, அதில் மழைநீர் தேக்கும் கூவல் வாழ்க்கையை மற்றொரு புறநாநூற்றுப் பாடல் காட்டுகிறது.
""கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல்
வில் ஏர் வாழ்க்கைச் சீரூர்'' (புறம்-331)
மிகவும் துன்பப்பட்டு இந்தக் கூவல் உருவாக்கப்படுகிறது. "வல்உவர்க் கூவல்' என்றால், மிகுந்த சுவையற்ற, தெளிவற்ற உவர் நீர் கொண்ட சிறு பள்ளம் என்று பொருள். இந்நீரைக் கொண்டுதான் அங்குள்ள மக்கள் வாழ்க்கை நடத்தினர். இவ்வாறு மிகவும் துன்பப்பட்டுத் தோண்டிய கூவலில், யானைகள் வந்து நீருக்குப் போராடிக் கலக்குவதால், உண்பதற்கு ஒவ்வாத நீராக அது மாறிவிடுவதாகப் புறநானூறு சுட்டுகிறது.
""களிறுபொரக் கலங்கு, கழல் முள்வேலி
அரிது உண் கூவல்'' (புறம்-306)
"கொடிய பாலை வெளிகளில் நடந்து செல்பவர்கள் தங்களின் நடை வருத்தம் தீர அந்தச் சிறு குளங்களில்தான் நீர் பருகுவர். அவ்வளவு கொடிய காட்டுவழி அது' என்கிறது நற்றிணை.
""சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர்? மலிசிறு கூவலின் தணியும்
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ?'' (நற்-41)
"மலி சிறுகூவல்' என்பது, மிகவும் மலிவான, கலங்கலான நீர்கொண்ட சிறு கிணறு அல்லது குளம் ஆகும். கொடிய பாலை வெளிகளில் பறக்கும் நாரை, தனது தண்ணீர் வருத்தம் தீர இந்தக் கூவலில் நீருக்குத் துழாவியதாகப் பதிற்றுப்பத்து இலக்கியம் காட்டுகிறது.
""கூவல் துழந்த தடந்தாள் நாரை'' (ப.ப.51)
கூவல் என்பது சிறு மலைப் பகுதிகளில் குகைபோல இருந்தது என்பதை, ""கூவல் அன்ன விடரகம் புகுமின்'' என்ற மலைபடுகடாம் (366) வரிமூலம் அறியலாம். கலங்கிய உவர்நீரைக் கொண்ட கூவல், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தாகம் தீர்க்கும் பணியைச் செய்ததோடு, துணிகள் துவைப்பதற்கும் பயன்பட்ட செய்தியைப் புறநானூறு மூலம் அறியமுடிகிறது.
""களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை'' (புறம்-311)
துணிவெளுக்கும் வண்ணாத்தி களர் நிலத்தில் கிணறு தோண்டி, தூய வெள்ளை ஆடைகளின் அழுக்கைத் துவைத்தாள், அந்தக் கிணறும் கூவல் எனப்பட்டது.
தேங்கிய குட்டை, தோண்டிய சிறுபள்ளம், சிறுகுளம், சிறு கிணறு என்றெல்லாம் கூறப்படும் இப்படிப்பட்ட கூவலும் தேனூற்றிய பாலைவிடச் சுவையானதாக இருக்கிறதாம் ஒரு ஐங்குறுநூற்றுத் தலைவிக்கு.
""அன்னாய் வாழி வேண்டன்னை நம் படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய - அவர் நாட்டு
உவலைக் கூவல் கீழ்
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே'' (ஐங்.203)
அத்தலைவி, ""நம் தோட்டத்துத் தேன் கலந்த பாலைவிட இனிமையானதாக இருக்கிறது, என்னவர் நாட்டில் சருகுகளும் செத்தைகளும் கிடக்க, மான் முதலிய விலங்கினங்கள் குடித்துக் கலக்கிய தண்ணீர்'' என்று கூறுகிறாள்.
÷காதலன் நாட்டின் கலங்கல் நீரும் இனிக்கிறது என்றால், சுவைப்பது நீரா? இல்லை அவனுடைய அன்பா?