சுடச்சுட

  

  இத்தனை நாள்களாக நான் ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் போனேன் என்று என்னை விசனப்பட வைத்துவிட்டது மு.அருணாசலம் எழுதியிருக்கும் "தமிழ் இசை இலக்கிய வரலாறு' நூல். புத்தகம் பெரிதாக இருந்ததால், படிக்க நேரம் கிடைக்காதது ஒரு காரணம். சொல்லப்போனால் அதுதான் நிஜமான காரணம்.

  பிரமிக்கத்தக்க ஆய்வு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு உந்துதல், உள்ளிருந்து செயல்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று நம்மை வியக்க வைக்கும் ஆய்வு அருணாசலத்துடையது.

  ""பத்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கிய வரலாற்றை முறையாக, பல தொகுதிகளாக எழுதத் திட்டமிட்டு எழுதி வரும்போது, தமிழ் இசை இலக்கியத்திலும் மனம் சென்றது. இசைப் பாடல்களும் இலக்கியமே ஆதலால் அவற்றின் வரலாற்றை ஆய்வதும் நமக்கு அவசியமாயிற்று'' என்று தனது முகவுரையில் எழுதியிருக்கும் அருணாசலம் கூறியிருக்கும் இன்னொரு கருத்தும் மனதில் கொள்ளத்தக்கது.

  ""திடமாகச் சொல்வதானால் இசை பற்றிய பேச்சு தமிழில்தான் மிகவும் பழமையாகத் தொடங்கும். இந்திய நாட்டில் பிற எந்த மொழியும் தமிழ் அளவு பழமை உடையது அல்ல. ஆதலால், அங்கெல்லாம் இசையும் இயலும் பற்றிய பேச்சுக்கள் பழமை இல்லை'' என்கிறார் அவர்.

  இப்படி கர்நாடக சங்கீதம் எனப்படுவது தமிழ் இசைதான் என்பதைத் தர்க்க ரீதியாக நிரூபிக்க முனைந்திருக்கிறார் மு.அருணாசலம். ""ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்த தமிழ்ப் பண்ணிசை பண்பாடுதல் மரபு. இல்லையேல் "கர்நாடக இசை' என்ற பெயரே தோன்ற வழியில்லை. பண்டைப் பழம் பண்ணிசைக்குப் பின்னையோர் தந்த புதுப்பெயரால் - வடமொழிப் பெயரால் - பழமை மாறிவிட்டது.

  இப்போது வழங்கிவரும் வடமொழி நாட்டிய சாஸ்திரம், தமிழ்ப் பரதர் செய்தது. மொழிதான் வடமொழி. அது சொல்லும் பொருள்கள் யாவும் தமிழருடைய பொருள்கள். பிறமொழிக் கல்வியாளர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியப் பொதுமொழியான வடமொழியில் தாம் தமிழில் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தை தமிழரான பரதாசாரியர் வடமொழியில் எழுதினார் என்கிறார் அவர்.

  தமிழிசையின் வளர்ச்சியை, அதன் அத்தனைப் பரிணாமங்களையும் விலாவாரியாக அலசி ஆராய்ந்திருக்கும் ஆசிரியர் மும்மூர்த்திகள், பிரசித்த இசைவாணர்கள் பற்றிய குறிப்புகள் தந்திருப்பது அற்புதமான பதிவு. அத்துடன் நின்றுவிடவில்லை அவர். வாத்திய இசைவாணர்கள் தமிழில் பிறமொழி இசைவாணர்கள், சிறந்த சாகித்ய கர்த்தாக்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் பதிவு செய்திருப்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

  மு.அருணாசலம் எழுதியிருக்கும் "தமிழ் இசை இலக்கிய வரலாறு' பற்றிய ஆய்வு நூலை உல.பாலசுப்பிரமணியன் பதிப்பித்திருக்கிறார்.

  மதுரை பாண்டியன் ஹோட்டலில் பதிப்பாசிரியர் உல.பாலசுப்பிரமணியனைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. ""புத்தக விமர்சனத்துக்கு இரண்டு படிவங்கள் அனுப்பப்பட வேண்டுமே'' என்று நான் கேட்டதும் அவர் தயங்கியதும்கூட நினைவுக்கு வருகிறது.

  இந்தப் புத்தகத்தின் மூலநூல் ஆசிரியரின் பணிக்கு எள்ளளவும் குறைவில்லாதது அவரது பணி. இந்தப் புத்தகம் பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள், பாலசுப்பிரமணியம். எப்போதோ நான் படித்திருக்க வேண்டிய புத்தகத்தை இப்போதுதான் படிக்க முடிந்ததும்கூட ஒருவகையில் இறையருள்தான். பாருங்களேன், சென்னையில் இசைவிழா தொடங்க இருக்கும் நேரம்.

  சென்னை இசைவிழாவில் எல்லா சபாக்களிலும் இந்தப் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். இசை உலகத்துக்குப் பெரும் தொண்டாற்றிவரும் நல்லி குப்புசாமிச் செட்டி போன்றவர்கள் இந்தப் புத்தகத்தை அத்தனை இசைவாணர்களும், இசை ஆர்வலர்களும் படிக்கும் விதமாக விளம்பரப்படுத்தி, இசை விழாவின்போது மறு வெளியீடு நிகழ்ச்சிக்கு உதவவேண்டும் என்பது என் போன்ற இசை ரசிகர்களின் வேண்டுகோள்.
  மலேசியாவில் வாழும் தமிழர்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. கி.பி.1012-இல் "கெடாரங்கொண்டான்' என்கிற சிறப்புப் பெற்றவரான ராஜேந்திர

  சோழன் முடிசூட்டப்பட்டான். இவன் நக்காவரம் (நிக்கோபார்). அந்தமான், இலங்கை, ஜாவா, இந்தோனேசியா, வடமலாயா முதலிய கடல்கடந்த நாடுகளையும் தனது குடைக்கீழ்க் கொண்டு வந்தான் என்பது சரித்திரம். அன்று மலேய மண்ணிலே பறக்கவிடப்பட்ட சோழரின் புலிக்கொடி, இன்றும் தேசியச் சின்னமாக மலேசியாவில் தொடர்கிறது என்பதுதான் உண்மை.

  சோழர்கள் மட்டுமல்ல, பல்லவ மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே, ஈப்போ, கங்கைசிப்புட் பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. பல்லவர்கள்தான் இப்பகுதியில் புத்த சமயத்தைப் பரப்பிய தமிழர்கள் என்று தெரிகிறது. ஆதியில் குடியேறிய இவர்கள் புத்தக் கலாசாரப் பொருள்களையும், சிற்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். பெüத்த மத குருவான நமது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மன் கூட, சீனாவில் பெüத்த மதத்தைப் பரப்ப மலேசியா வழியாகச் சென்றிருக்கக்கூடும்.

  அதேபோல சோழர் காலத்தில் இங்கு உருவாக்கப்பட்ட ஆண்டாள் சிலை, சிவலிங்கப் பீடம், குவளைகள், கண்ணாடி வளையல்கள், பல்லக்கு, கல்நாற்காலி, செப்புச் சிலைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  அத்துடன் நின்றுவிடவில்லை. மலாய நாட்டுக்கு பெüத்த, இந்து, இஸ்லாமிய சமய நெறிமுறைகளை முதன் முதலில் கொண்டு வந்தவர்கள் தமிழர்கள்தான். சொல்லப்போனால், சிலாங்கூர், அரசர்கள் சோழ வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றுகூடச் சொல்லப்படுகிறது.

  இந்த விவரங்கள் மட்டுமல்ல, இன்றைய மலேயா தமிழர்கள் நிலை என்ன என்பதுவரை புள்ளிவிவரங்களுடன், சரித்திர எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்திருக்கிறார் இர.ந.வீரப்பன். அவர் எழுதியிருக்கும் "மலேசியத் தமிழர்கள்' என்கிற புத்தகம் மதிப்புரைக்கு வந்திருந்தது. படிக்கப் படிக்க வியப்புதான் மேலிடுகிறது.

  புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆய்வு நூல்கள் மட்டுமல்லாமல், கடல் கடந்த தமிழரின் சரித்திரத்தைக்கூட யாராவது புத்தகமாகத் தொகுத்தால் நல்லது. ஏற்கெனவே தொகுக்கப்பட்டிருந்தால், அதை எனது பார்வைக்குக் கொண்டுவாருங்களேன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai