சுடச்சுட

  

  எனது மேஜையில் பல திருக்குறள் உரைகள் இருந்தாலும், சட்டென நான் எடுத்துப் புரட்டுவது என்னவோ நாமக்கல் கவிஞரின் திருக்குறள் உரையைத்தான். பள்ளியில் படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியரின் வழிகாட்டுதல்படி மதுரை புதுமண்டபத்தில் உள்ள புத்தகக் கடையில், பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் அந்த எளிய உரையை வாங்கியதுகூட இன்றும் நினைவிருக்கிறது.

  ""கெழுதகை நண்பர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் திருக்குறளுக்கு உரை கண்டனர் என்று கேட்டு மகிழ்வெய்துகிறேன். உரை என் முன்னிலையில் படிக்கப்பட்டது. கவிஞரை ஈன்ற மணி வயிற்றின் தவமே தவம்.

  புது உரை பழைமைக்கு முரண்படாதது; புதுமைக்கு அரண் செய்வது; காலத்துக்கு ஏற்றது; அதன்கண் காந்திய மணங்கமழ்கிறது; அந்த மண் தமிழ்நாட்டை வெல்க'' என்கிற தமிழ் முனிவர் திரு.வி.க.வின் அணிந்துரையைவிட சிறப்பாக அந்த உரையைப்பற்றி யாரும் சொல்லிவிட முடியாது.

  நாமக்கல் கவிஞர் பற்றிய நினைவு வரக்காரணம், நான் சமீபத்தில் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள நாமக்கல் சென்று வந்ததுதான். தமிழகம் கண்ட மிகப்பெரிய கவிஞர்களில் ஒருவர், அதிலும் தமிழகத்தின் அரசவைக் கவிஞராக இருந்தவர் தனது சொந்த ஊரில் மரியாதை செலுத்தப்படுவதில்லை என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

  என்னைச் சந்திக்க வந்திருந்த காங்கிரஸ்காரரான "தினமணி' முகவர் சித்திக்குக்கும் ஒரே வருத்தம். பெயருக்கு நாமக்கல் கவிஞர் குடியிருந்த வீட்டை நினைவிடமாக்கி, அங்கே ஒரு நூல் நிலையம் இயங்குகிறது. ஒருசில புகைப்படங்கள் மட்டும் பெயருக்கு அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்திலும், சுதந்திர இந்தியாவிலும் நாமக்கல் கவிஞர் சந்திக்காதத் தலைவர்கள், அவர் சம்பந்தப்படாத நிகழ்வுகளா?

  நாமக்கல் கவிஞர் செய்த தவறு, அவர் காங்கிரஸ்காரராக இருந்தது. அதைவிடப் பெரிய தவறு, அவர் மூதறிஞர் ராஜாஜிக்கு நெருக்கமாக இருந்தது. அதனால், திராவிடக் கட்சிகளும் அவருக்கு மரியாதை தரவில்லை, காங்கிரஸ்காரர்களும் அவரை மதித்துப் போற்றாமல் விட்டுவிட்டார்கள்.

  அரசவைக் கவிஞராக இருந்தவரின் நினைவை நினைவுறுத்தும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் 1976-இல் கட்டப்பட்ட அரசு அலுவலக வளாகத்துக்கு "நாமக்கல் கவிஞர் மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது, "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. அன்றைய திமுக அரசுக்கு நெருக்கமாக இருந்ததால், முதல்வர் கருணாநிதியிடம் நாமக்கல் கவிஞரின் பெயரை அந்த வளாகத்துக்குச் சூட்டவேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததாகக் கூறுவார்கள்.

  இப்போதைய அதிமுக அரசு மீண்டும் தலைமைச் செயலகத்தைப் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்கே மாற்றியிருக்கிறது. இல்லையென்றால், அடுத்த சில ஆண்டுகளில் அந்த வளாகம் தொல்பொருள் ஆராய்ச்சித் துறைக்கோ, ராணுவத்துக்கோ திருப்பிக் கொடுக்கப்பட்டு, அவர்களால் நாமக்கல் கவிஞர் மாளிகை இடிக்கப்பட்டிருக்கும்.

  "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது! சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்கிற நாமக்கல் கவிஞரின் பாடலைப் பாடியபடிதான் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்குச் சென்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தங்கள் நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர் என்பது வரலாறு.

  அதுமட்டுமா? தமிழகத்துக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த திரைப்படம் நாமக்கல் கவிஞரின் கதை-வசனத்தில் வெளியான "மலைக்கள்ளன்' என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

  வருகிற அக்டோபர் 19, நாமக்கல் கவிஞரின் பிறந்த நாள். அந்த மாபெரும் கவிஞனுக்கு அவரது சொந்த ஊரான நாமக்கல்லில் ஒரு முழு உருவச் சிலைகூட வைக்கப்படவில்லை என்று நான்தான் ஆதங்கப்படுகிறேன். நாமக்கல் வாழ் மக்களுக்கோ, தமிழ் உணர்வாளர்களுக்கோ, ஏன், காங்கிரஸ்காரர்களுக்கோ அப்படி ஒரு நல்லெண்ணம் தோன்றமாட்டேன் என்கிறதே, என் செய்ய?

  ************************************

  கே.எஸ்' என்று பரவலாக அறியப்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநர் கே.எஸ்.சுப்பிரமணியம், இலக்கிய வட்டத்தில் நன்கு பரிச்சயமானவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை இருப்பது என்பது பெரிய விஷயமல்ல. இரண்டு மொழி இலக்கியங்களிலும் ஈடுபாடு இருப்பதும், ரசித்து மகிழ்வதும் எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதல்ல. கே.எஸ். அந்த விதத்தில் பாக்கியசாலி.

  கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தபோது எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போதுதான் எனக்கு "கே.எஸ்' "நேரில்' அறிமுகமானார். சமீபத்தில் மீண்டும் நான் அவரைச் சந்தித்ததும் கோவையில்தான். இந்தமுறை கவிஞர் சிற்பியின் பவளவிழாவின்போது.

  டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் "இலக்கிய ஆளுமைகள்' என்கிற புத்தகம் அவர் பல்வேறு நிகழ்வுகளில் வாசித்த 20 கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கட்டுரையும் முனைவர் பட்ட ஆராய்ச்சியின் சுருக்கம் என்றுதான் கூறவேண்டும்.

  எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் கே.எஸ். நானும் மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபட்டவன் என்கிற வகையில் அவரது அனுபவப் பகிர்வுகளை வழிமொழிகிறேன்.

  ""மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் படைப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு ரசனை கலந்த ஈடுபாடு வேண்டும்; அது உற்சாகமுள்ள ஒரு பணியாக இருக்க வேண்டும். ஐற் ள்ட்ர்ன்ப்க் க்ஷங் ஹ ப்ஹக்ஷர்ன்ழ் ர்ச் ப்ர்ஸ்ங். மூலப்படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் கூடுதல் சிறப்பு அம்சமாய் விளங்கும்'' என்கிற அவரது கருத்தும்,

  ""ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு, ஒரு படைப்பை பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால் - இது எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்டதுதான். இச்சவால், தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு இடம் பெயரும்போது, பேருருவம் கொள்கிறது. அடிப்படையான கலாசார இடைவெளிதான் இதற்கான இயங்கு காரணி'' என்கிற கருத்தும் நூற்றுக்கு நூறு உண்மை.

  அதைப்போல, அசோகமித்திரனின் படைப்புகள் நகர்ப்புற மத்தியதர வர்க்க மனிதர்களையே சுற்றிச் சுற்றி வருகின்றன என்கிற விமர்சனம் பற்றி "கே.எஸ்' வெளியிட்டிருக்கும் கருத்தும் சரியான கணிப்பு என்று பாராட்ட வைக்கிறது.

  ""ஒரு படைப்பாளி எதைப் பற்றி எழுத வேண்டும் என்ற சட்டாம்பிள்ளைத்தனமான அணுகுமுறையே ஓர் அத்துமீறல்தான். எடுத்தாளப்படும் கதைக்கருவும், கதாப்பாத்திரங்களும் எந்த அளவுக்கு உண்மைத் துடிப்புடனும், ஒத்துணர்வுடனும், கலாநேர்த்தியுடனும் கையாளப்படுகின்றன என்பதுதான் சரியான இலக்கிய உரைகல்'' என்கிறார் கே.எஸ்.

  ஒரு வருடத்துக்கு முன்னால் எனக்கு அனுப்பித் தரப்பட்ட புத்தகத்தைப் பற்றி இப்போதுதான் எழுதுகிறேன் என்பதால், இப்போதுதான் படித்தேன் என்று அர்த்தமில்லை. அதைப்பற்றி எழுத இப்போதுதான் நேரம் வந்தது, அவ்வளவுதான்.

  ************************************

  இந்த வாரம் கவிதைக்காக நான் வேறு எந்தப் புத்தகத்தையும் புரட்ட வேண்டிய அவசியம் வரவில்லை. "இலக்கிய ஆளுமைகள்' புத்தகத்தில் உள்ள ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்றை நானும் ரசித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  வாக்கியங்களை

  வாசிக்க விழி திறந்திருந்தாலும்

  கவிதையின் ஆழத்தை

  விழிகளை மூடும்

  இருள் வழியாகவே தொடரவேண்டும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai