இந்த வாரம்

தூத்துக்குடி ஹார்விபுரத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக வேளாளர் சமுதாயச் செய்திகளையும், தமிழ் வளர்ச்சி, திருமடங்களின் பணி போன்றவை தொடர்பான செய்திகளையும் தாங்கி வெளிவருகிறது "சைவநெறி' என்கிற மாத இதழ். இந
Published on
Updated on
3 min read

தூத்துக்குடி ஹார்விபுரத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக வேளாளர் சமுதாயச் செய்திகளையும், தமிழ் வளர்ச்சி, திருமடங்களின் பணி போன்றவை தொடர்பான செய்திகளையும் தாங்கி வெளிவருகிறது "சைவநெறி' என்கிற மாத இதழ். இந்த இதழை நடத்திவரும் காந்தி, தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதைவிட, வ.உ.சி., சுப்பிரமணிய பாரதி போன்றோரின் வழிகாட்டுதலில் சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை அர்ப்பணித்த தியாகி பிரமநாயகத்தின் மகன் என்பதுதான் அவரது தனிப்பெருமை.

 ÷சமீபத்தில் இந்து சமயக் கண்காட்சியில் பங்குகொள்ள சைவநெறி இதழின் சார்பில் சென்னை வந்திருந்தார் காந்தி. அப்போது அவர் எனக்கு "சைவநெறி' 30-வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலரைத் தந்தார். அதிலிருந்த ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

 ÷இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் ஓ.வி.அளகேசன், அம்மு சுவாமிநாதன், பி.கக்கன், கே.காமராஜ், டி.டி.கிருஷ்ணமாசாரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், எல்.கிருஷ்ணசாமி பாரதி, வி.ஐ.முனுசாமிபிள்ளை, எம்.ஏ.முத்தையா செட்டியார், வி.நாடிமுத்துபிள்ளை, ஆர்.கே.சண்முகம் செட்டி, டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், ராம்நாத் கோயங்கா, ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார், கே.சந்தானம், பி.சுப்பராயன், சி.சுப்பிரமணியம், வி.சுப்பிரமணியம், எம்.சி.வீரபாகு, பி.எம்.வேலாயுதபாணி ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

 ÷விவாதங்கள் முடிந்து அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் சட்டத்தை நிறைவேற்றியவுடன் அவையின் உறுப்பினர்கள் கையொப்பம் இட்டனர். அப்போது கையொப்பம் இட்டவர்களில் எம்.சி.வீரபாகுவும் ஒருவர். ஆனால், அதில் என்ன சிறப்பு என்றால், நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தும் இந்திய அரசியல் சாசனத்தில் தமிழில் கையொப்பம் இட்டிருப்பது எம்.சி.வீரபாகு மட்டுமே என்பதுதான்!

 *****

 இப்போதெல்லாம் வருடம் பிறந்தால் காலண்டர் வந்துவிட்டதா, டைரி கிடைக்குமா என்றெல்லாம் கவலைப்படுவதை நான் விட்டுவிட்டேன். ஆனால், ஆண்டுதோறும் "புதிய புத்தகம் பேசுது' இதழ் வெளிக்கொணரும் சிறப்பு மலர் வந்துவிட்டதா என்கிற தேடல் அதிகரித்துவிட்டது.

 ÷கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வெளிக்கொணர்ந்த மலர்கள் இரண்டுமே போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள். "தமிழ்ப் பதிப்புலகம்' (1800-2009), "தமிழ் நூல் தொகுப்பு வரலாறு' (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) ஆகிய இரண்டு மலர்களுமே விலை மதிப்பில்லாத ஆவணப் பதிவுகள்.

 ÷இந்த ஆண்டும் தொடர்ந்து ஒரு மலரை வெளியிட்டுத் தமிழுக்கு அணி சேர்த்திருக்கிறார்கள் பாரதி புத்தகாலயத்தார். பா.இளமாறன், ஜ.சிவக்குமார், கோ.கணேஷ் மூவரும் இணைந்து தொகுத்திருக்கும் அற்புதமான படைப்பு "அறியப்படாத தமிழ் உலகம்' என்கிற சமூக இடைவெளிகளை இட்டு நிரப்பும் முயற்சி. அது என்ன அறியப்படாத தமிழ் உலகம்? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன என்று ஆச்சரியப்படாதீர்கள். அறியப்படாமலும் ஒரு தமிழ் உலகம் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தத் தொகுப்பு.

 ÷செங்கோட்டை ஸ்ரீஆவுடை அக்காளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எனக்கு எங்கள் இணையதளத்தின் செய்தி ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம் எழுதிய புத்தகம் படித்த பிறகுதான் அவரைப் பற்றி முதலில் தெரிந்தது. "ஆவுடை அக்காளின்' பாடல்கள் குறித்து இலக்கிய வரலாற்று நூல்களில் காணப்படவில்லை. எனினும், வாய்மொழி வழக்காற்றில் காணப்படுகின்றன' என்று பதிவு செய்கிறார் கட்டுரை ஆசிரியர் மு.நஜ்மா.

 ÷ஆவுடை அக்காளில் தொடங்கி அபெ.ஜெ.எ. துபுவா, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயக்கர், வேங்கடராஜுலு ரெட்டியார் போன்ற பல ஆளுமைகளைப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. எதையும் விட்டுவைக்கவில்லை.

 ÷"தமிழ்ச் சூழலும் வானொலி ஊடகமும்' என்கிற மு.பிரகாஷின் பதிவு குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க இன்னொரு பதிவு சிவ.கணேஷின் "காலின் மெக்கன்சி' பற்றியது. கி.பி. 1784-இல் சென்னை மாகாண கிழக்கிந்தியப் படையில் பொறியாளராக நியமனம் பெறும் ஸ்காட்லாந்திலுள்ள லூயித் தீவில் பிறந்த காலின் மெக்கன்சி திப்புசுல்தானுக்கு எதிராக, கிழக்கிந்தியக் கம்பெனிப் போரில் ஒரு படைப்பிரிவில் தலைவராகச் செயல்பட்டவர். கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் தலைமை நில ஆய்வாளராக மெக்கன்சியை கி.பி.1818-இல் நியமனம் செய்கிறது. இந்தியாவின் தலைமை நில ஆய்வாளராகப் பணியாற்ற, கொல்கத்தா சென்ற மெக்கன்சிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு தன்னுடைய 67-வது வயதில் 1821-இல் ஹூக்ளி நதிக்கரையில் மரணம் அடைகிறார்.

 ÷தன்னார்வத்தின் அடிப்படையில் தொல்பொருள் தொகுப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் மெக்கன்சி. தன்னுடைய தொகுப்புப் பணிக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி பொருளுதவி வழங்காத நிலையில், தன்னுடைய சொந்த பொருட் செலவில் தொகுப்புப் பணியை மேற்கொள்ள முடிவெடுத்து செயல்பட்டவர் அவர். காலின் மெக்கன்சி என்றொருவர் இல்லாமல் போயிருந்தால் தமிழனுக்குத் தனது வரலாறு கொஞ்சமாவது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

 ÷தொகுப்பாசிரியர்கள் கூறியிருப்பதுபோலத் தமிழ்ச் சமூகத்தின் இடைவெளிகளை இட்டு நிரப்பும் அவர்கள் முயற்சி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது எனலாம். "புதிய புத்தகம் பேசுது' தமிழுக்கு ஆற்றியிருக்கும் அளப்பரிய தொண்டில் "அறியப்படாத தமிழ் உலகம்' குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்.

 *****

 கடந்த கால் நூற்றாண்டு காலமாகக் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் நடத்திவரும் இலக்கிய இதழ் "கவிதை உறவு'.

 ÷ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கல்பனாதாசன், ராது, ஐராவதம் சுவாமிநாதன், ராணிமைந்தன், பிரியாபாலு, இன்றைய "திரிசக்தி' சுந்தரராமன் என்று பல இலக்கிய தாகமுள்ள இளைஞர்கள் வங்கிகளில் பணிபுரிந்தவண்ணம் பத்திரிகைப் பணியிலும் ஈடுபட்ட காலம் அது. இவர்களில் எனக்கு நெருக்கமாக இருந்தவர் ராணிமைந்தன் மட்டுமே. மற்றவர்கள் அறிமுகமே தவிர நெருக்கமில்லை. ஆனாலும் அவர்களது எழுத்தையும் படைப்புகளையும் அப்போதே ரசித்து வந்திருக்கிறேன்.

 ÷சமீபத்தில் மதுரை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை சார்பில் மு.வ. நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணனை சந்தித்தபோது "யாரும் யாராகவும்...' என்கிற தனது கவிதைத் தொகுப்பைப் பரிசளித்தார். அவர் நடத்தி வரும் "கவிதை உறவு' இதழில் தனக்கென அவர் வைத்துக்கொண்ட பக்கத்தின் எண் 7. அவரது 7-ஆம் பக்கக் கவிதைகளின் தொகுப்புதான் "யாரும் யாராகவும்...'

 ÷அதில் "சாட்டையோடு' என்றொரு குட்டிக் கவிதை. இதைப்போல பல சாட்டைகளைத் தொடுத்திருக்கிறார் கவிஞர் ராதாகிருஷ்ணன் அந்தக் கவிதைத் தொகுப்பில்.

 மகாத்மா காந்தி

 மீண்டும் பிறக்க வேண்டும்

 ராட்டையோடு அல்ல

 சாட்டையோடு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.