இந்த வாரம் கலாரசிகன்

இன்று புத்தகப் பதிப்புத்துறை புதிய பல பரிமாணங்களுடன் சர்வதேச அளவில் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. ஆனால், இந்த அளவுக்கு புத்தகங்கள் படிப்பதற்கான வசதியும், ஆர்வமும் இல்லாத ஒரு காலகட்டத்

இன்று புத்தகப் பதிப்புத்துறை புதிய பல பரிமாணங்களுடன் சர்வதேச அளவில் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. ஆனால், இந்த அளவுக்கு புத்தகங்கள் படிப்பதற்கான வசதியும், ஆர்வமும் இல்லாத ஒரு காலகட்டத்தில் மக்களின் சிந்தனையை வளர்த்த பெருமைக்குரியவர்கள் அன்றைய புத்தகப் பதிப்பாளர்கள்.

 ÷"முல்லை'முத்தையா, "சக்தி'கோவிந்தன், "தமிழ்ப்பண்ணை' சின்ன அண்ணாமலை ஆகிய மூவரும் பதிப்புத்துறை முன்னோடிகள் என்றால், அவர்களை ஒற்றிப் பதிப்புத்துறையைத் தனது வாழ்க்கையாகவும், குறிக்கோளாகவும் கொண்டு நடைபோட்டவர் பெரியவர் அருணன்.

 ÷விடுதலைப் போராட்டப் பின்னணியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்களில் பெரியவர் அருணனும் ஒருவர். ""ஒரு மனிதனுடைய இலட்சியம், அல்லது குறிக்கோள் மட்டுமே உயர்ந்ததாக இருந்து பிரயோசனமில்லை. அந்தக் குறிக்கோளை அடைவதற்கான மார்க்கமும் உயர்ந்ததாக, ஒழுக்கமுடையதாக, நேர்மையை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும்'' என்கிற தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்னுரையை வேதவாக்காக வரித்துக்கொண்டு தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெரியவர் அருணன்.

 ÷பெரியவர் அருணனின் பதிப்புலக வாழ்க்கை தொடங்கியது "தமிழ்ப் பண்ணை' அலுவலகத்தில்தான். சின்ன அண்ணாமலை, "ஆசாத் ஹிந்த்' லேனா செட்டியார், பள்ளத்தூர் வீரப்பச் செட்டியார் ஆகிய மூவரின் கூட்டுப் பொறுப்பில் தமிழ்ப் பண்ணை இயங்கிவந்த நேரம் அது. மூதறிஞர் ராஜாஜி, தலைவர் சத்தியமூர்த்தி, நாமக்கல் கவிஞர், கல்கி போன்றோரின் நூல்களை அப்போது தமிழ்ப் பண்ணைதான் வெளியிட்டு வந்தது. "தமிழ்ப் பண்ணை' பதிப்பகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டார் அருணன்.

 ÷பிரபல திரைப்பட வசனகர்த்தாவாகவும், திரையிசைப் பாடலாசிரியராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளராகவும் விளங்கிய கவியரசு கண்ணதாசனின் எழுத்துகள் எதுவும் நூல் வடிவம் பெற்றிராத நேரம் அது. அதை அருணன் மனக்குறையாக எடுத்துக் கொண்டதன் விளைவுதான் "அருணோதயம்' பதிப்பகம். "அருணோதயம்' வெளியிட்ட "ஈழத்து ராணி'தான் கவியரசு கண்ணதாசன் எழுதி வெளியிட்ட முதல் நூல்.

 ÷ஈழத்து ராணியைத் தொடர்ந்து, "இலக்கியத்தில் காதல்', "கூட்டுக் குரல்', "தமிழர் திருமணமும் தாலியும்', "ராஜ தண்டனை', "அண்ணாவின் பெரும் பயணம்', "ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி' என்று கவியரசு கண்ணதாசனின் பல நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டதும் "அருணோதயம்'தான். "பன்மொழிப் புலவர்' க.அப்பாதுரையார், நாரண துரைக்கண்ணன், பேராசிரியர் நா.பாண்டுரங்கன், புலவர் அறிவுமணி, தி.தண்டபாணி, வே.கபிலன், ந.சண்முகம் போன்ற நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்ட பெருமையும் "அருணோதயம்' பதிப்பகத்திற்கு உண்டு.

 ÷கவியரசு கண்ணதாசன் மட்டுமல்ல, கவிஞர் கம்பதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் முகிலன் என்று பல கவிஞர்களை ஆதரித்தார் அருணன். பெரியவர் அருணனைக் கடந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்தபோது, "வெற்றிப் பாதையில்' என்கிற அவர் பற்றிய புத்தகத்தில் கையெழுத்து வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். எனது தனிப்பட்ட நூலகத்தில் நான் போற்றிப் பாதுகாக்கும் அந்தப் புத்தகத்தின் பின்னால், தமிழ்ப் பதிப்புலக சரித்திரத்தின் பெருமிதமிக்க பல தருணங்கள் அடங்கி இருக்கின்றன.

---------------------------

படிக்க வேண்டும் என்று இரண்டு புத்தகங்களை எடுத்து வைத்தேன். ஒன்றை மட்டும்தான் படிக்க முடிந்தது. அதுவும்கூட முழுமையாகப் படித்து விட்டேன் என்று சொல்லவும் முடியாது. முழுமையாகப் படிக்க வேண்டுமானால் குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும்.

 ÷எடுத்து வைத்துக்கொண்ட இரண்டு புத்தகங்கள்: "ஆராய்ச்சிப் பேரறிஞர்' தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரால் எழுதப்பட்ட "பாண்டியர் வரலாறு' மற்றும் "பிற்காலச் சோழர் சரித்திரம்'. படித்தது "பாண்டியர் வரலாறு' மட்டும்.

 ÷மூவேந்தர்களில் பாண்டியர்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு அவர்கள்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்பது. அதுமட்டுமன்று. மூவேந்தர்களில் பாண்டியர் வரலாறு மட்டுமே இந்தியாவில் இதிகாசங்கள் என்று போற்றப்படும் ராமாயணம், மகாபாரதம் இரண்டிலுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும்கூட நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

 ÷வான்மீகி ராமாயணத்தில் தமிழ் நாட்டைப் பற்றிய உயரிய செய்திகள் பல காணப்படுவதோடு, பாண்டி வேந்தரது தலைநகர் பொன்னாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட கோட்டை வாயிலை உடையதாய் இருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வியாச மகாபாரதத்திலோ, பாண்டவருள் ஒருவனான அர்ஜுனன் ஒரு பாண்டியர் குலப் பெண்மணியை மணந்த செய்தி காணப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட மகத நாட்டில் ஆட்சிபுரிந்த மெüரிய மன்னன் அசோகருடைய கல்வெட்டுகளிலும் பாண்டியர்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

 ÷பாண்டிய மன்னர்கள் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், வேப்பம்பூ மாலையைத் தமக்குரிய அடையாளமாகச் சூடியவர்கள் என்றும், கயல்மீனுருவத்தைக் கொடியாகவும் இலச்சினையாகவும் கொண்டவர்கள் என்றும், பண்டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் கூறுகின்றன.

 ÷பாண்டியர் ஆட்சிக் காலத்தைக் கடைச்சங்க காலத்துக்கு முந்திய பாண்டியர்கள், கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள், களப்பிரர் ஆட்சிக்குப் பிந்தைய பாண்டியர்கள் என்று மூன்று பகுதியாகப் பிரிக்கலாம். களப்பிரர் ஆட்சிக்குப் பிறகும்கூட பாண்டியர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கவில்லை. பாண்டிய மன்னர்களின் மொத்த சரித்திரத்தையும், தக்க ஆதாரங்களுடன், பின்குறிப்புகளுடன் 147 பக்கங்களில் தொகுத்து வழங்கியிருக்கும் ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பற்றி இன்றைய தமிழர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

 ÷இதுபோன்ற தமிழறிஞர்களைப் போற்றவும், நினைவுகூரவும் கூட நமக்கு நேரமில்லாமல் போய்விட்டதே!

---------------

உனக்குள் + எனக்குள்' என்றொரு கவிதைத் தொகுப்பு. கவிதாயினி வசந்தமாலாவால் தொகுக்கப்பட்டுள்ளது. எதற்காக சம்பந்தமே இல்லாத படங்களை இணைத்துக் கவிதைப் புத்தகங்களை வெளிக்கொணர்கிறார்கள் என்பது புரியவில்லை. அந்தப் படங்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் பல கவிதைகளை இணைத்திருக்கலாம். நாம் கொடுக்கும் பணத்துக்கு நிறையக் கவிதைகளைப் படித்து ரசித்த நிறைவாவது கிடைக்கும்.

 "அரசியல்வாதியின் சிலை' என்றொரு கவிதை. எதார்த்த வாழ்க்கையில் தெருவுக்குத் தெரு நிறுவப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் சிலைகளைப் பார்க்கும் போதெல்லாம் நமக்குள் எழும் கேள்வியைக் கவிதையாக்கி இருக்கிறார் வசந்தமாலா.

 ÷

 உயிராய் நின்ற நாளில்

 இவர் தலைமையில்

 பல காக்கைகள்

 சிலையாய் நிற்கும் நாளில்

 இவர் தலையில்

 சில காக்கைகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com