சுதந்திர வேள்வியில் பெண்களின் பங்கு

 ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக்  கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?''  என்று சுதந்திரப் பயிர் குறித்து மகாகவி பாரதி கொதித்தெழுந்து பாடிய பாடலை ஆண்டுதோறும் (ஆகஸ்ட் 15) நினைவுகூர்கிற
சுதந்திர வேள்வியில் பெண்களின் பங்கு

 ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக்

 கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?''

 என்று சுதந்திரப் பயிர் குறித்து மகாகவி பாரதி கொதித்தெழுந்து பாடிய பாடலை ஆண்டுதோறும் (ஆகஸ்ட் 15) நினைவுகூர்கிறோம். ஆனால் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றிய அதுவும் வீட்டை விட்டு பெண்கள் வர அஞ்சிய அந்தக் காலத்திலேயே திருமணத்தை, அரச வாழ்வை, குடும்பத்தை, கணவனைத் துறந்து இந்திய சுதந்திரத்திற்காக, அப்போராட்ட வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தியாகப் பெண்களை எத்தனைபேர் நினைவுகூர்கின்றனர்? அவர்களுள் ஒருசிலரைக் காண்பது, வரவிருக்கும் (ஆக.15) சுதந்திர தினத்தை மேலும் வலுப்படுத்தும்.

 வேலு நாச்சியார் (1730-1796)

 ஆங்கிலேயரைத் தோற்கடித்து வெற்றிகண்ட முதற்பெண் மறவர் குலத்து மகாராணி வேலு நாச்சியார். ஏகாதிபத்திய ஆட்சியை இந்திய நாட்டில் நிறுவ முயன்ற ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பெண்கள் பலர் என்றாலும், ஆங்கிலேயர் படையை எதிர்த்துப் போராடி தமது அரசை (சிவகங்கைச் சீமையை) மீட்டு 9 ஆண்டுகாலம் தம் நாட்டை சிறப்புற வழிநடத்தியவர்.

 மேடம் பிகாஜி ருஸ்தம் கே.ஆர்.காமா (1861-1936)

  சுதந்திர இந்தியாவிற்கென்று ஒரு கொடியை ஆக்கித்தந்த பெருமையும், அதை சர்வதேச மாநாட்டில் பறக்கவிட்டு, அனைவரையும் வணங்கும்படிச் செய்த பெருமையும் பிகாஜி காமாவையே சாரும். அயல் நாடுகளில் இந்தியாவின் விடுதலைக்காகப் புரட்சி இயக்கத்தை நடத்தியவர்களுள் முதன்மையானவர். 1937-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி பிகாஜி காமாவின் கொடியை புணேயில் வீர சாவர்க்கர் பறக்கவிட்டார். அந்தநாள் "வந்தே மாதரம்' நாளாகக் கொண்டாடப்பட்டது. இன்றளவும் அந்தக் கொடி புணேயில் உள்ள மராத்தா கேசரி நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

 சரளாதேவி செüதராணி (1872-1945)

 இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர். 1905-இல் முதல் இந்திய தேசிய காங்கிரஸின் சுதேசி இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். கதர் இயக்கத்தை ஆதரித்து பஞ்சாபில் பிரசாரம் மேற்கொண்டு, முற்றிலுமாகக் கதர் ஆடை அணிந்து பொதுக்கூட்டங்களில் தோற்றமளித்த முதல் பெண்மணி. இவர், "இந்துஸ்தான்', பாரதி' ஆகிய பத்திரிகையின் ஆசிரியர். அரசியல்வாதியாக, விடுதலைப் போராளியாக, எழுத்தாளராக, பத்திரிகை ஆசிரியராக, கவிஞராகத் திகழ்ந்தவர்.

 மிருதுளா சாராபாய் (1911-1974)

 20 வயதிலே. ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு அனைவரையும் பிரமிக்க வைத்த இளம் பெண். சிறுமியாக இருந்தபோதே பெண்களின் உரிமைக்காகவும் சமத்துவத்துக்காகவும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டவர். அந்நியத் துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல், "வெள்ளையனே வெளியேறு' ஆகியவற்றில் பங்கேற்று சிறை சென்றவர்.

 

 ராஜ்குமாரி அமிருதாகெளர் (1889-1964)

 1919-இல் பஞ்சாப் மாநிலத்துக்கு வருகை தந்த காந்தியடிகளின் வாக்கால் நகையும், பட்டுத்துணியும் அணிவதைத் தவிர்த்து கதர் ஆடையையே உடுத்தியவர். இந்திய சுதந்திரப் போரிலும், இந்திய நிர்வாகத்திலும், மத்திய சுகாதார அமைச்சராகவும் (முதல் சுகாதார அமைச்சர்) தனி முத்திரை பதித்தவர். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியாவின் முதல் பெண்மணி. காந்தியடிகளின் செயலாளராக 16 ஆண்டுகள் தொண்டாற்றியுள்ளார். "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதற்காகச் சிறை சென்றவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com