சுடச்சுட

  
  tm4

  புதுவை வழியாகப் பயணிக்க நேர்ந்தால் நான் தவறாமல் சந்தித்து உரையாடும் நபர் ஹோட்டல் ஜெய்ராமின் மேலாளர் சு. லட்சுமிநாராயணன். நான் மட்டுமல்ல, இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள், அறிஞர்கள் என்று அவரது நட்புவட்டம் மிகவும் பரந்து விரிந்தது. சாமானியர்கள் மட்டுமென்ன, அவரது உபசரிப்புக்கு மயங்கி, விடுமுறை நாள்கள் என்றால் ஹோட்டல் ஜெய்ராமுக்குக் குடும்பத்துடன் படையெடுப்பவர்கள் பலர்.

  சமீபத்தில் சிதம்பரம் சென்றுவிட்டுச் சென்னை திரும்பும் வழியில் புதுவை ஹோட்டல் ஜெய்ராமுக்குச் சென்று பெரியவர் லட்சுமிநாராயணனைச் சந்தித்தேன். அவர் தொகுத்திருக்கும் "உலகப் பழமொழிகள்' என்னும் புத்தகம் இதுவரை நான்கு பதிப்புகளைக் கண்டுவிட்டது. விரைவிலேயே ஐந்தாவது பதிப்பு வெளிவர இருக்கிறது. ஏறத்தாழ 500 பொருள்கள் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் லட்சுமிநாராயணன்.

  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியும், முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணனும் அணிந்துரை எழுதியிருக்கும் அந்தப் புத்தகம் எப்போதும் எனது மேஜையில். பயனுள்ள கையேடு அது. இந்தமுறை எனக்கு ஒரு கையடக்கப் புத்தகம் ஒன்றைத் தந்தார்.

  சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும்

  படியான அந்தக் கையடக்கப் புத்தகம் வேறொன்றுமல்ல, கலைவாணி மீது குமரகுருபரர் இயற்றிய "சகலகலாவல்லிமாலை'. பாடல்களும் அதற்கான உரையுமாக லட்சுமிநாராயணன் தொகுத்தளித்திருக்கும் இந்தக் கையேடு, மாணவ-மாணவிகளுக்காகப் பெரியவரால் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை

  ஆறு பதிப்புகள் விற்றுத் தீர்ந்திருப்பதாகச் சொன்னார்.

  17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில் குமரகுருபர சுவாமிகளும் ஒருவர். ஐந்து ஆண்டுவரை பேச்சாற்றல் இல்லாமல் இருந்த குமரகுருபரர், செந்திலாண்டவன் அருளால் அக்குறை அகன்று, கவிபாடும் வல்லமையும் பெற்றதாகக் கூறுவர். தனக்கு வந்த குறையை நீக்கிய கந்தப் பெருமான் மீது "கந்தர் கலிவெண்பா' இயற்றிப் போற்றிய குமரகுருபரர் தொடர்ந்து அருளிய பக்தி இலக்கியங்கள் ஏராளம் ஏராளம்.

  மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், திருவாரூர் நான்மணிமாலை, சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, நீதிநெறி விளக்கம், பாண்டார மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம் என்று அவர் யாத்தவை ஏராளம் ஏராளம். தருமபுர ஆதீனத்தால் துறவு வழங்கப்பட்டு, குமரகுருபர முனிவர் என்கிற துறவித் திருநாமம் பெற்று, காசியம்பதி சென்றார் அவர். அங்கே வடமொழியும், இந்துஸ்தானியும் கற்றுத் தேர்ந்தார் என்பார்கள். கம்பனின் கவிநயத்தை எடுத்துரைத்து, துளசிதாசர் எழுதிய "ராமசரிதமானஸ்' என்கிற ராமசரிதத்திற்கு வளமை சேர்த்தவர் குமரகுருபர சுவாமிகள் என்று சொல்வதுண்டு.

  பெரியவர் லட்சுமிநாராயணனுக்கும் அவரது நண்பர்களுக்கும் நீண்ட காலமாக ஒரு வருத்தம் உண்டு. புதுச்சேரியில் ஆண்டுதோறும் கம்பனுக்கு விழா எடுத்து சிறப்பிப்பதுபோல, திருவள்ளுவருக்கும் விழா எடுத்து சிறப்பிக்காமல் இருப்பதுதான் அந்தக் குறை. விரைவிலேயே அந்தக் குறையும் தீரப்போகிறது. அடுத்த திருவள்ளுவர் தினத்தில் இருந்து "புதுவை திருக்குறள் மன்றம்' செயல்படப் போகிறது.

  கம்பனுக்கும் வள்ளுவருக்கும் புதுவையில் கிடைக்கும் வரவேற்பு, தமிழ் பேசும் எல்லா ஊர்களிலும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கு ஊருக்கு ஒரு புதுவை லட்சுமிநாராயணன், திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார், மதுரை சங்கர சீத்தாராமன், தென்காசி சிவராம கிருஷ்ணன் போன்றோர் பிறக்க வேண்டும்.!

  __________________________

  காலத்தைக் கடந்து நிற்கும் இரண்டு தலைசிறந்த தமிழ்ப் படைப்பிலக்கியவாதிகள் கல்கியும், புதுமைப்பித்தனும். இருவரும் வெவ்வேறு தளத்தில் எழுத்தால் நம்மை பிரமிக்க வைத்தவர்கள். இன்றைக்கும் புத்தகத் திருவிழாக்களில் தொடர்ந்து அதிகம் விற்பனையாவது இவ்விருவரின் படைப்புகள்தான்.

  பாரதி, புதுமைப்பித்தன் - இவ்விருவரைப் பற்றிய பதிவுகளிலுமே எனக்குப் பிடித்தது தொ.மு.சி. ரகுநாதனின் பதிவுகள்தான். பாரதியைப் பற்றிய ரகுநாதனின் பார்வையே அலாதியானது. அதைப் பற்றி நான் ஏற்கெனவே "பாரதி காலமும் கருத்தும்' என்ற நூல் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

  இந்த வாரம் புதுமைப்பித்தனைப் பற்றிய இரண்டு புத்தகங்களைப் படித்தேன். முதலாவது புத்தகம், தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய "புதுமைப்பித்தன் வரலாறு'. புதுமைப்பித்தனுடன் நெருங்கிப் பழகிய நண்பர் ரகுநாதன் என்பதால், இந்தப் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

  புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்யவில்லை. அவர் தொடர்பான பல சம்பவங்களை, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் வெளியிட்ட கருத்துகளை, அவர் எதிர்கொண்ட சவால்களை என்று ஒன்றுவிடாமல், புதுமைப்பித்தனின் நெல்லை வட்டாரத் தமிழ் பிரயோகங்களை அப்படியே கையாண்டு பதிவு செய்திருக்கிறார் ரகுநாதன்.

  மா. பாலசுப்பிரமணியனின் "புதுமைப்பித்தன் என்ற மகாகலைஞன்' என்கிற புத்தகம், அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுத் தொகுப்பு. க.நா.சு., கு. அழகிரிசாமி, சாலிவாஹனன், ரா.ஸ்ரீ. தேசிகன், சிட்டி, கி.ரா., எஸ். வையாபுரிப்பிள்ளை, ஆர்.கே. கண்ணன் போன்றவர்கள் புதுமைப்பித்தனைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார்கள்.

  மீ.ப. சோமு, ந. சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோரின் கட்டுரைகள் மிகவும் வித்தியாசமானவை. "புதுமைப்பித்தன் வாழ்க்கையில்...' என்று கமலா புதுமைப்பித்தன் எழுதியிருக்கும் கட்டுரை கண்ணீரை வரவழைத்தது. ""உயிர் உடலை விட்டுப் பிரியும்போது கூடப் பேசிக்கொண்டேதான் உயிர் துறந்தார். இதற்கு மேல் என்னால் எழுதவே முடியவில்லை... வணக்கம்'' என்று அவர் முடித்திருந்ததைப் படித்துவிட்டு, ஐந்து நிமிடம் துக்கத்தை அடக்க முடியாமல் தவித்தேன்.

  புதுமைப்பித்தன் தினமணியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் அச்சாக வேண்டிய கட்டுரைகளை எவ்வளவுதான் பிழை திருத்தினாலும், கவனமாகப் பார்த்துக் கொடுத்தாலும், அச்சுக் கோப்பவர்கள் பிழைகளைத் திருத்தாமல் விட்டுவிடுவார்களாம். மீண்டும் மீண்டும் திருத்திக் கொடுத்து சலித்துப் போகும் புதுமைப்பித்தனுக்கு எரிச்சலும் கோபமும் வரும். ஆனால் என்ன செய்ய முடியும்?

  சில சந்தர்ப்பங்களில், பிழைகளைத் திருத்திவிட்டு, கடைசியில் "கடவுள் துணை' என்று எழுதிவிடுவாராம்.

  அச்சுக் கோப்பவர்கள், "இதென்ன சார்? கடவுள் துணையைக் கம்போஸ் செய்யலாமா?'

  என்று கேட்கும்போது, புதுமைப்பித்தனின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?

  ""இல்லையப்பா நான் என்னால் ஆனமட்டும் பார்த்துவிட்டேன். இனிமேலும் தவறு இருந்தால், "கடவுள்தான் எனக்குத் துணை. நீ அல்ல' என்பதற்காகத்தான் அப்படிப் போட்டேன்'' என்பாராம் புதுமைப்பித்தன்.

  ÷புதுமைப்பித்தனின் கதைகள் மட்டுமல்ல, புதுமைப்பித்தனே கூட சுவாரஸ்யமான மனிதர் என்பதை அந்த இரண்டு புத்தகங்களும் வெளிச்சம் போடுகின்றன.

  _________________________________

  அறிவுமதியை ஆசிரியராகக் கொண்டு "தை' என்கிற கவிதைகளுக்கான ஆண்டு இதழ் ஒன்று வெளிவருவது எனக்கு இப்போதுதான் தெரியும். இதுவரை ஏழு இதழ்கள் வெளிவந்திருப்பது, நான் ஏழாவது இதழைப் படித்தபோதுதான் தெரிந்தது. பாராட்டுக்குரிய முயற்சி; பாராட்டப்பட வேண்டிய வடிவமைப்பு; படித்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த படைப்புகள். அடுத்த இதழ் வந்துவிட்டதா என்று தெரியவில்லை.

  எல்லாமே நன்று என்றாலும், என் மனதை வென்றது என்னவோ பிரகாசிகை என்பவர் எழுதியிருக்கும் கவிதைதான்.

  விசேஷ வாசல்களில் சகஜமென்றாலும் காலணிகள் காணாமல் போகின்றன ஆலய வாசல்களிலும் கூட.எங்கு கழற்றினாலும் களவுக்காகாத சோகத்துடன் கிடக்கின்றன எந்தக் கால்களோடும் பொருந்தாத என் போலியோ கால்களின் செருப்புகள்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai