சுடச்சுட

  
  tm1

  இளங்கோவடிகளின் படைப்பாகிய சிலப்பதிகாரம் அவருடைய கற்பனைப் படைப்பு அல்ல. நடந்த ஒரு சோக நிகழ்ச்சியை இளங்கோவின் சமகாலப் படைப்பாளியான சாத்தனார் எடுத்துச் சொல்லியதன் தாக்கத்தினால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரத்தின் நோக்கம் முப்பெரும் உண்மைகளைச் சொல்லவந்த படைப்பு என்பதே அறிஞர்கள் பலரின் முடிபாகும்.

  ÷சிலப்பதிகாரம் நாட்டுகிற பாட்டுடைச் செய்யுள்களில் உள்ள முப்பெரும் உண்மைகளான, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது, உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பன பற்றிய உண்மையை உணர சிலப்பதிகாரத்திற்கு ஒரு மறு வாசிப்புத் தேவைப்படுகிறது.

  ÷நமது மொத்த வாழ்க்கையும் சிலப்பதிகாரம் பேசும் மூன்று பேருண்மைகளுக்குள் அடங்கிவிடுகிறதா எனச் சிந்திப்பது சிலப்பதிகாரம் பற்றிய சரியான புரிதலுக்கு உதவும். ஏனெனில், சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற பாண்டியன் நெடுஞ்செழியன் மனசாட்சியுள்ள மன்னனாக ஆட்சி செய்திருக்கிறான். அரசன் நிரபராதியாகவும், நியாயவாதியாகவும் இருக்கின்றபோது அரசப் பொற்கொல்லனே கள்வனாகவும், கயவனாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.

  ÷""அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்'' என்பதில் உள்ள இந்த "அறம்' சிலப்பதிகாரம் தொடர்புடைய அளவில், தனிப்பட்ட அந்தப் பாண்டிய மன்னனின் மனசாட்சிதான். இதுவே பாண்டிய ஆட்சிக்குட்பட்ட மக்கள் பண்பாக இருந்தது.

  ÷தன்னை அறியாமல் தவறு செய்துவிட்ட மன்னன், தான் தவறு செய்ததை அறிந்துகொண்ட பிறகு, தனக்குத்தானே தண்டனையும் கொடுத்துக் கொள்கிறான். அறம் என்ற அவனுடைய மனசாட்சி தந்ததுதான் அத்தண்டனை.

  ÷உண்மையில் சிலம்பைத் திருடி இந்தப் பிழைக்குக் காரணமானவனான பொற்கொல்லனுக்கு அறம் கூற்றாகவில்லை அது ஏன்? மனசாட்சி மக்களிடம் மரணித்துப் போய்விட்டதென்றால், அதனால் இளங்கோவடிகளுக்கு இழப்பு ஒன்றுமில்லை. சக மனிதர்களாகிய நமக்குத்தான் இழப்பு. ஆகவே, பயன்பாட்டுப் பார்வையில் பரிசீலித்தால், சிலப்பதிகாரம் பேசுகிற இம்முதல் பேருண்மை செப்பனிடவே முடியாத அளவிற்குச் சேதத்திற்கு உள்ளாகிறது.

  ÷""உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்'' என்ற இரண்டாம் பேருண்மை பற்றியும் இதுபோல சிந்திக்க வேண்டியதாகிறது. சிலப்பதிகாரத்தில் நாம் சந்திக்கிற பாத்திரங்களில் கண்ணகி ஒருத்தி மட்டும்தான் கற்புள்ளவளா? பிரபலமில்லாத பாத்திரங்களாகிய தேவந்தி, வயந்தமாலை, மாதரி ஆகியோரின் கற்பு உயர்வில்லாத கற்பா?

  ÷கோவலனின் கொலைக்குக் காரணமான பொற்கொல்லனின் மனைவிகூட இந்தக் கற்புநெறிப் பட்டியலில் இடம்பெறத் தக்கவள்தானே? இளங்கோவடிகள் காட்டும் கற்புநெறி கண்ணகிக்கு மட்டுமே எனக் குறுக்கிவிடுவதா? அல்லது சமுதாயம் முழுவதற்குமே உரியதா எனக் கேட்கவேண்டி இருக்கிறது.

  ÷கண்ணகியுடைய கற்புக்கு உடல் ரீதியாக எவ்வித ஆபத்தும் பூம்புகாரிலோ, மதுரையிலோ ஏற்படவே இல்லை. கணவன் இருந்தும் அவனை இழந்த இளம் பெண் கண்ணகி பட்ட துயரம் கவலைக்குரியதே தவிர, கண்ணகியின் கற்புக்கும் அத்துயரத்துக்கும் என்னத் தொடர்பு எனக் கேட்க வேண்டியுள்ளது.

  ÷""உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல்'' என்ற வரியைப் படித்த மகாகவி பாரதி, அதை விமர்சனத்திற்கு உள்ளாக்கியதாகவே தெரிகிறது. ""கற்பு நிலை என்று பேசவந்தார் இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்'' என்கிறார் பாரதி. ஆணுக்குக் கற்புநெறி அவசியமில்லாதது என்ற நிலை இருந்த காலம் இளங்கோவடிகளின் காலம். கம்பன் காலமோ ஆணுக்கும் கற்புநெறி வலியுறுத்தப்பட்ட காலம்.

  ÷"ஆண் கற்பு' பற்றிய பாரதியின் சிந்தனை தர்க்க ரீதியானது. ஆடவன் ஒருவன் கற்புள்ளவனாக இருந்தால்தான், பெண்ணும் கற்புள்ளவளாக வாழ முடியும். ஆடவன் சபலமானவனாக இருந்தால், அவனால் அல்லது அதனால் யாரோ ஒருத்தி கற்பிழந்து விடுகிறாள் என்பது தர்க்க ரீதியானது.

  ÷""ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்'' என்பது மூன்றாவது பேருண்மை. முந்தைய ஜென்மத்தில் பாவங்கள் செய்திருப்பானேயானால், அந்தப் பாவங்கள் அந்த வினைக்கு உரியவனைச் சென்று பழி வாங்கியே தீரும் என்பதே வினைக் கோட்பாடு.

  ÷இளங்கோவடிகளின் இப்பேருண்மையில் இருண்மையாக உள்ளது "ஊழ்' என்பதுதான். அந்த ஊழ் ஏதோ தானியங்கி ஏவுகணை போலப் புறப்பட்டுப் போய் தவறு செய்பவனைத் தண்டித்துவிடும்

  என்று தவறு செய்பவர் அதற்கு அஞ்சுவதாகத்

  தெரியவில்லை.

  ÷700 கோடி உலக மக்களில் 100 கோடி கிறிஸ்தவர்களுக்கு ஊழ் மீது நம்பிக்கை இல்லை. மறுபிறவியை மறுக்கும் 120 கோடி இஸ்லாமியர்களுக்கும் ஊழ் பற்றித் தெரியாது. மேலும், 120 கோடி பெüத்தர்களுக்கும் இதைப் பற்றிய கருத்தில்லை. இதே கருத்துத்தான் சீக்கியர்களுக்கும், பார்சிகளுக்கும், யூதர்களுக்கும்.

  ÷இளங்கோவடிகளின் ஊழ்வினைக் கோட்பாடு உலக மக்கள் மத்தியில் உபயோகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஊழ் என்பதை மனித குலம் முழுவதுமே உண்மையென நம்பி, விநாடிப் பொழுதுகூட அதற்கு விடுமுறை கொடுக்காமல் கடைப்பிடிக்குமானால், நமக்குக் காவல்துறை தேவையில்லை. நீதிமன்றம் அவசியமில்லை. கைரேகை நிபுணர்களோ, சி.ஐ.டி.களோ எதற்காக?

  ÷இம்மூன்று பேருண்மைகளையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தினால், மூன்றுமே எடையிழந்து நிற்கின்றன. அன்றைக்கு மட்டுமே பொருத்துகிற உண்மை வேறு; என்றைக்கும் பொருந்துகிற உண்மை வேறு. ""அறிவுடையார் எல்லாம் உடையார்'' என்ற குறளின் பேருண்மை என்றைக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்துவதாகும்.

  ÷இளங்கோ போல் பூமிதனில் இல்லை எனப் படைப்பாளிக்குப் பெருமை சேர்ந்த பாரதி, அம்முப்பெரும் உண்மைகளை வரவேற்று எழுதவில்லையே என்பதை நாம் கவனிக்க வேண்டும். எழுதாதது மட்டுமல்ல, இளங்கோவடிகளின் கொள்கைப் பிரகடனத்திற்கு எதிராக ஆடவரின் கற்பைப் பற்றி அழுத்தமாகவே ""இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்'' என்றார்.

  ÷ஊழ் பற்றி அவர் எந்தக் கவிதைகளிலும் தமது உரத்த சிந்தனையை வெளிப்படுத்தியதாகவும் இல்லை. ""தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்'' என்கிற பாரதியின் கூற்றினை, ஊழ் வலிக்கு எதிரான புரட்சிக் கோஷமாகத்தான் கருத வேண்டியுள்ளது.

  ÷இளங்கோவடிகளை அவருடைய தமிழுக்காக பாரதி இதயப்பூர்வமாகப் போற்றியதைக் காட்டத்தான் ""நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்'' என்றார் எனக் கொள்ளலாம்.

  ÷சிலம்புக்கு ஒரு மறுவாசிப்பு தேவைப்படுகிறது. எந்தவொரு கருத்தையும் விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதில் தவறில்லை. ""நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்'' என்பது உண்மை. அந்தச் சிலப்பதிகாரம் கூறும் முப்பெரும் உண்மைகள், இன்றைய கால ஓட்டத்தை ஒட்டி சிந்தித்தால், ஏற்புடையதாகத் தோன்றவில்லை.

  ÷பேருண்மையை வடமொழியில் "சத்தியம்' என்பார்கள். சத்தியம் என்பது மாறாதது என்பதைவிட, எது மாறாததோ அதுதான் சத்தியம் என்பதுதான் இன்னும் சரியானது. முப்பெரும் உண்மைகள் பேருண்மைகள் அல்ல!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai