சுடச்சுட

  
  TM-8

  கணக்குத் தணிக்கையாளர் ஜி. நாராயணசுவாமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மூதறிஞர் ராஜாஜியின் ஆடிட்டராக இருந்த பெருமைக்குரியவர் அவர். மோர்கன் அண்ட் ஸ்டான்லி உள்ளிட்ட சர்வதேசத் தணிக்கை நிறுவனங்களுக்கே கூட ஆலோசகராக இருப்பவர். சில முக்கியமான பிரச்னைகளில் அவர்கள் இவரை அமெரிக்காவுக்கு அழைத்து ஆலோசனை கேட்கும் அளவுக்குக் கணக்குத் தணிக்கையில் நிபுணர்.

  ஆடிட்டர் ஜி. நாராயணசுவாமியின் சுயசரிதையான "தணிக்கைக்கு அப்பால்' (ஆங்ஹ்ர்ய்க் அன்க்ண்ற்ண்ய்ஞ்) என்கிற புத்தகத்தில் ராஜாஜி பற்றிய ஒரு செய்தியை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ராஜாஜி இறப்பதற்கு 6 மாதத்திற்கு

  முன்பு, அவரிடம் மொத்தமாக இருந்த சேமிப்பான அறுபதாயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்துவிட முடிவு செய்தாராம். அதற்கான நன்கொடை வரி (கிப்ட் டாக்ஸ்) எவ்வளவு என்று கேட்டு, அதற்கும் 12,000 ரூபாய்க்கான காசோலையை, அவருக்கு வந்த

  முன்னாள் கவர்னர் ஜெனரலுக்கான ஓய்வூதியத்திலிருந்து கொடுத்து விட்டாராம்.

  ""இதற்கு வரி செலுத்தாமல் இருக்க வழி இருக்கிறது. நீங்கள் ஏன் அநாவசியமாக வரி செலுத்த வேண்டும்?'' என்கிற நாராயணசுவாமியின் கேள்விக்கு ராஜாஜி அளித்த பதில் - ""அதெல்லாம் தொழிலதிபர்கள், வியாபாரிகள் செய்யும் தந்திரங்கள். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் அதுபோன்ற உத்திகளைக் கையாளக்கூடாது''.

  சென்னை ஆழ்வார்பேட்டை வழியாக வந்து கொண்டிருந்தபோது, ஆடிட்டர் ஜி. நாராயணசுவாமியை சந்திக்கத் தோன்றியது. ராஜாஜி எழுதிய கட்டுரைகள், "சத்யமேவ ஜயதே' என்கிற தலைப்பில் நான்கு புத்தகங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகங்களை எனக்குப் படிக்கச் சொல்லி தந்தார் நாராயணசுவாமி. அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு தகவலைச் சொன்னார். அதைக் கேட்டபோது ராஜாஜி பற்றிய மரியாதை மலையளவு உயர்ந்தது.

  லட்சுமணராவ் சாஹேப் என்பவர் சென்னையின் அற்றைநாள் பெரிய மனிதர்களில் ஒருவர். எழும்பூர் கண் மருத்துவமனையை ஒட்டி இருந்தது இவரது பங்களா. அவர் ஆசைப்பட்டுக் கட்டிய வீடு அது. மருத்துவமனை விரிவாக்கத்துக்காக அரசு அந்த பங்களாவை உரிய இழப்பீடு கொடுத்து எடுத்துக்கொள்ள முடிவெடுத்தது. அந்த பங்களாவைவிட்டு வெளியேற மனமில்லாத லட்சுமணராவ் சாஹேப், தனது சொத்துகள் அனைத்தையும் சுதந்திராக் கட்சிக்கு உயிலெழுதி வைத்துவிட்டு அந்த பங்களாவிலேயே தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

  லட்சுமணராவ் சாஹேபுக்கு அந்த பங்களாவின் அருகில் எழும்பூரிலேயே இன்னொரு அசையாச் சொத்து இருந்தது. வீடும் தோட்டமுமாக இருந்த அந்த இடத்தில் கண் மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் முப்பது துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்கள் இருந்தன. லட்சுமணராவ் சாஹேபின் பங்களாவுக்குக் கிடைத்த இழப்புத் தொகை சுதந்திராக் கட்சியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. இந்த இடத்தையும் விற்றுக் கணக்கில் வரவு வைப்பதற்காக விலைபேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பொறுப்பு ஆடிட்டர் நாராயணசுவாமியிடம் ஒப்படைக்கப் பட்டதாம்.

  அந்த இடத்தில் இருந்த வீட்டை, சுதந்திராக் கட்சிக்கென்று சொந்தமாக அலுவலகம் இல்லாததால் கட்சிக்கு பயன்படுத்திக் கொண்டால் என்ன என்பது சிலரது எண்ணம். அதை ராஜாஜி ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியின் பெயரில் சொத்து இருந்தால் சொத்துக்காகத்தான் கட்சி நடத்துவார்களே தவிர கொள்கைக்காகக் கட்சி நடக்காது என்று கூறிவிட்டாராம்.

  ""அந்த இடத்தை விற்கப் போகிறாயே, அங்கே குடியிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களை என்ன செய்யப் போகிறாய்?'' - இது ராஜாஜி.

  ""அது அந்த இடத்தை வாங்கப் போகிறவர்களின் பிரச்னை. நாம் கவலைப்படுவானேன்'' - இது நாராயணசுவாமி.

  ""அது அவர்கள் பிரச்னையல்ல. மனிதாபிமானப் பிரச்னை. நினைத்தபோது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறிப்போகவும், குடியிருப்பை மாற்றிக் கொள்ளவும் வசதிபடைத்தவர்கள் அல்ல துப்புரவுத் தொழிலாளர்கள். அவர்களுக்கு முறையான இழப்பீடும், மாற்று இருப்பிட வசதியும் செய்து கொடுத்த பிறகுதான் அந்த இடத்தை விற்க வேண்டும்!'' - ராஜாஜியின் உத்தரவு.

  டிசம்பர் 10- ராஜாஜி உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு வயது 134!

  ---------------------------------------------

  ராஜாஜியை விட நான்கு வயது இளையவர் பாரதி. அவர் டிசம்பர் 10 பிறந்தார் என்றால், இவர் பிறந்தது டிசம்பர் 11. தேசியக் கவிஞரான மகாகவி பாரதியாரை, சமூக சிந்தனாவாதியாக அடையாளம் காட்டியவர் ராஜாஜிதான் என்று பலருக்கும் தெரியாது. இது பற்றி பெ.சு.மணி ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்.

  இனி பாரதிக்கு வருவோம். கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாடும், பாரதியின் கொல்கத்தா விஜயமும் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கொல்கத்தா சென்ற பாரதியார் சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதாவை சந்திக்கிறார். பாரதிக்கு சகோதரி நிவேதிதை ஆலிலை ஒன்றினை அன்பளிப்பாக அளிக்கிறார். அந்த ஆலிலையை பாரதியார் தனது இறுதி நாள்வரை பொக்கிஷமாகப் பாதுகாத்ததாக செல்லம்மா பாரதி குறிப்பிடுகிறார். நிவேதிதையை தனது குருவாகவே ஏற்றுக் கொள்கிறார் பாரதி.

   

  ""அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்

  கோயிலாய் அடியேன் நெஞ்சில்

  இருளுக்கு ஞாயிறா யெமதுயர் நா

  டாம் பயிருக்கு மழையாய் யிங்கு

  பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

  பெரும் பொருளானப் புன்மைத்தாதச்

  சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

  நிவேதிதையைத் தொழுது நிற்பேன்''

  என்று குரு வணக்கம் செலுத்துகிறார் பாரதி.

  பாரதியைப் பற்றி எண்ணிலடங்காத நூல்கள் வந்துவிட்டன. பாரதியின் பல்வேறு பரிணாமங்களையும் பெ.சு.மணி வெளிக்கொணர்ந்து விட்டார். ஆனாலும்தான் என்ன? அந்த யுகபுருஷனைப் பற்றி யுகம் யுகமாகப் பேசினாலும் விவாதித்தாலும் தீராதே... 39 வயதில் 39 ஜென்மங்களில் கூட செய்ய முடியாத சாதனைகளைப் படைத்தவனாயிற்றே பாரதி!

  "பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும்' என்றொரு புத்தகம். எழுதி இருப்பவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று வழக்குரைஞராகப் பணியாற்றும், தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத்தின் சேலம் கிளையின் தலைவராக இருக்கும் கே.எஸ்.ரமணா. பாரதியில் தோய்ந்தவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் உள்ள செய்திகள் புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சராசரி வாசகர்களுக்கு அரிய பல செய்திகளைக் கொடுத்து பாரதி விருந்து படைத்திருக்கிறார் ரமணா.

  வ.உ.சி, அரவிந்தர், சகோதரி நிவேதிதை போன்றோர்களுடனான பாரதியின் நெருக்கத்தைக் குறைவான வார்த்தைகளில் நிறைவாகப் பதிவு செய்திருக்கிறார் ரமணா. பாரதி ஓர் ஆன்மிகவாதியா, தத்துவ ஞானியா என்கிற கேள்விக்கு விடைகாண முயற்சி செய்திருப்பதும், பாரதியின் "ஞானரதம்' பற்றிய கட்டுரையும் வித்தியாசமானவை. புதிய கோணத்தில் ஆராய முற்பட்டிருக்கிறார்.

  ""பாரதியைக் கொண்டாடு! அதன்மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்; தேசபக்தியைக் கொண்டாடுகிறாய்; தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்; தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்! பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக்கொள்ள அருகதை இல்லை'' என்று கவியரசு கண்ணதாசன் கூறுவார்.

  டிசம்பர் 11- மகாகவி பாரதியாரின் 130 ஆவது பிறந்த தினம்!

  ---------------------------------------------

  இராமநாதபுரம் சக்திசேகரன் கடற்படையில் பணிபுரிந்து, பணி நிறைவு பெற்று, தற்போது ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு "பயணிகளின் கனிவான கவனத்திற்கு!' அதை, பல் முளைக்கும் முன்பே அம்மா எனும் சொல் முளைக்கச் செய்த அன்னைக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார். அதில், "தும்பைவிட்டு வாலைப் பிடித்து' என்றொரு கவிதை -

   

  ""புல்டோசரால் பொட்டலாக்கப்பட்ட

  பசுமைக் காட்டில்

  அறிவிப்புப் பலகை...

  மரங்கள் வளர்ப்போம்

  மழைவளம் காப்போம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai