சுடச்சுட

  
  TM-2

  'சிலம்புக்கு மறுவாசிப்பு தேவை' என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக் கருத்துகளுக்கு சில விளக்கங்கள் தருவது அவசியம் எனக் கருதுகிறேன்.

  ""எந்தவொரு கருத்தையும் விவாதத்திற்கு உட்படுத்துவதில் தவறில்லை'' என்கிறார் கட்டுரையாளர். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஆண்டாண்டு காலமாகக் கற்றவர் கல்லாதவர் என அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட "சிலம்பு' உணர்த்தும் மூன்று நீதிகளைப் பொய்யென்று கூறி மறுப்பது சரியல்ல.

   

   "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதில் அறம் என்பது பாண்டிய மன்னனின் தனிப்பட்ட மனசாட்சிதான். அதுதான் அவனது தவறுக்குத் தண்டனையானது என்கிறார். உண்மைதான். "அறம்' என்றால் "தர்மம்'. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தர்மம் உள்ளதுபோல் அரசியலுக்கும் ஒரு தர்மம் உண்டல்லவா? இளங்கோவடிகள், "எல்லாப் பிழைகளுக்குமே அறம் கூற்றாகும்' என்று குறிப்பிடவில்லை. மற்ற அறங்களில் தவறினால் அது தனிமனிதனையோ, அவன் சார்ந்த ஒரு சமூகத்தையோ பாதிக்கலாம். ஆனால், அரசனே அறத்தினின்றும் பிழைசெயின் ஒட்டுமொத்த நாடே அல்லவா பாதிக்கப்படும்? அதனால்தான் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று முதன்மைப் படுத்தப்பட்டதே தவிர, கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல பொற்கொல்லன் செய்த பிழைக்கு தண்டனையே இல்லை எனச் சொல்ல வரவில்லை சிலம்பு. எல்லா அறம் பிறழ்தலுக்கும் அதற்குரிய அளவில் தண்டனைகள் கிடைக்கவே செய்யும். நாட்டைக் காக்கும் பொறுப்பு மிகப்பெரியது என்பதால் அதில் அறம் பிறழ்வோர்க்கு மரணம் முடிவானது. பொற்கொல்லனின் பிழைக்கேற்ற தண்டனை காப்பியத்தில் சொல்லப்படவில்லை என்பதாலேயே இல்லையென்று ஆகிவிடாது.

  "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' என்பதில் என்ன தவறு உள்ளது? கண்ணகி உயர்ந்த பத்தினி என்றால், மற்ற கதாபாத்திரங்கள் கற்புடையோரில்லையா? ஏன் அவர்களையும் உயர்த்திப் பாடவில்லை எனக் கேட்டுள்ளார்.

  ஒரு காப்பியம் எனும்போது தலைவனையும் தலைவியையும் சிறப்பிப்பதுதானே மரபு. சிலம்பில் மற்ற பாத்திரங்களை "கற்பிழந்தவர்கள்' என்று எங்கும் கூறவில்லையே? மாதவியும் கற்புநெறி தவறாதவள்தான் எனினும் "பண்பு' என ஒப்பிடும்போது, கண்ணகியை நெருங்க முடியாது என்பது உண்மையில்லையா? அடுத்தவளின் கணவனையும், அவனது பொன், பொருளையும் அபகரித்து வாழ்பவளிடம் கற்பு மட்டும் இருந்து என்ன பயன்?

  கட்டுரையாளர் கூறுவது போல் "கற்பு' என்பதை உடலியலுடன் தொடர்புப்படுத்தி சிலம்பு எங்குமே குறிப்பிடவில்லை. எந்நிலையிலும் கொண்டவனை விட்டுக்கொடுக்காத பண்பைத்தானே - அந்தத் தியாக உணர்வைத்தான் கற்பு என்கிறார். அதில் உயர்ந்தவள் கண்ணகி என்பதில் என்ன சந்தேகம்?

  "ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்' என்பதை "முற்பிறவி' என்று ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? நியூட்டனின் மூன்றாம் விதியை இங்கு நினைவுபடுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன். அது இயற்பியலுக்கு மட்டுமன்று, இயற்கைக்கும், உயிரினங்களுக்கும், அனைத்துக்குமானதுதான். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதை மறுத்துவிட

  முடியுமா?

  கிழக்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தோன்றியதுதான் தெளிவான, முதன்மையான மெய்ஞானத் தத்துவம் என்று உலகுக்கே தெரியும். மேற்கத்திய விஞ்ஞானிகளுள் பலர் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். ""நீயும் நானும் பல பிறவிகள் கண்டுள்ளோம்; மானிடன் உனக்கு அது நினைவிருக்காது; பரமாத்மாவான நான் அனைத்தும் அறிவேன்'' என்று பகவத்கீதையில் கண்ணன், அர்ஜுனனிடம் கூறவில்லையா? வினைப் பயனைப் பற்றிக் கூறுவதுதானே கீதையின் சாரம்? உலகம் ஒப்புக்கொண்டதுதானே அந்த வேதம்?

  அதைத்தானே கிறிஸ்துவம் "பாவத்தின் சம்பளம் மரணம்' என்றும், "தீங்கு செய்பவன் தீய பலனையும், நன்மை செய்பவன் நன்மையையும் அடைவான்' என்று இஸ்லாமும் அறிவுறுத்துகின்றன!

  "ஊழ்' என்றால் "வரிசை, "தொடர்ச்சி' என்று பொருள். நாம் செய்யும் எந்தவொரு செயலும் (வினை) அத்துடன் முடிந்துவிடுவதில்லை. வினையின் பலன் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதைத்தான் கீதை வலியுறுத்துகிறது. சிலம்பும் அதைத்தான் வலியுறுத்துகிறது.

  மறுமுறை அல்ல, எத்தனை முறை வாசித்தாலும் உண்மையும் சத்தியமும் ஒன்றுதான். என்றும் நிற்பதுதான் எக்காலத்தும் ஏற்புடையதுதான். உலகுக்கே ஏன்? தமிழர்களாகிய நமக்கே நம் முகத்தைக் காட்டும் கண்ணாடியாகிய முதன்மைக் காப்பியமான சிலம்பை எக்காலத்தும் போற்றிச் சிறப்பிப்பதுதான் தமிழர்களின் கடமையே தவிர, அதைப் பற்றிக் குறைகூறுவதல்ல!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai